Published : 24 Jun 2017 08:45 AM
Last Updated : 24 Jun 2017 08:45 AM

உலக மசாலா: ஜப்பானைக் கலக்கும் ஒயிட் ஜுவல் ஸ்ட்ராபெர்ரி!

பெரும்பாலான மக்கள் வெள்ளை ஸ்ட்ராபெர்ரியைப் பார்த்திருக்கவோ, சுவைத்திருக்கவோ வாய்ப்பில்லை. ஜப்பானில் விலை உயர்ந்த பழங்களில் ஒன்றாக இருக்கிறது ஒயிட் ஜுவல் என்று அழைக்கப்படும் வெள்ளை ஸ்ட்ராபெர்ரி. இது மிகவும் அரிய வகை. மிகக் குறைவாகவே விளைவிக்கப்படுகிறது. 4 ஆண்டுகளுக்கு முன்பு யாசுஹிட்டோ டெஷிமா, ஒயிட் ஜுவல் ஸ்ட்ராபெர்ரியைத் தன்னுடைய தோட்டத்தில் விளைவித்தார். இந்தப் பழத்துக்கு இணையாக இன்னொரு ஸ்ட்ராபெர்ரி உலகில் இல்லை என்கிறார்கள். நீண்ட காலம் ஆராய்ச்சி செய்து, இதை உருவாக்கியிருக்கிறார். இந்தப் பழத்தின் உட்புறமும் வெளிப்புறமும் வெள்ளையாக இருக்கும். சாதாரண சிவப்பு ஸ்ட்ராபெர்ரிகளை விட உருவத்தில் பெரியது. “நிழலிலேயே இவற்றை விளைவிக்கிறேன். கொஞ்சம் சூரிய வெளிச்சம் பட்டாலும் சிவப்பு நிறமாக மாறிவிடும். முதிர்ந்த பிறகு நிறம் மாறுவதில்லை. ஒயிட் ஜுவல் ஒன்றின் விலை 650 ரூபாய். பழத்தின் மணத்திலேயே இனிப்புச் சுவை தெரியும். தோல் மெல்லியதாக இருக்கும். முதல் கடியில் அன்னாசிப் பழம் போன்று தோன்றும். ஆனால் சில நொடிகளில் புதிய சுவை கிடைத்துவிடும். இன்னொரு பழம் சுவைக்கத் தோன்றும்” என்கிறார் யாசுஹிட்டோ டெஷிமா.

ஜப்பானைக் கலக்கும் ஒயிட் ஜுவல் ஸ்ட்ராபெர்ரி!

நியூயார்க்கில் வசிக்கும் ரேச்சலும் மைக்கும் சமீபத்தில் திருமணம் செய்துகொண்டனர். தேனிலவுக்காக ஐரோப்பா செல்லத் திட்டமிட்டனர். வெனிஸ் செல்லும் விமானத்தில் அமர்ந்தனர். ரேச்சலின் மனம் மகிழ்ச்சியாக இல்லை. ஏதோ அசம்பாவிதம் நடக்கப் போகிறது என்று அவருக்குத் தோன்றியது. விமானம் மெதுவாகக் கிளம்பியது. ஜன்னல் வழியே வேடிக்கை பார்த்தபோது, விமானத்தின் இறக்கைப் பகுதியிலிருந்து புகை வந்துகொண்டிருந்தது. உடனே மைக்கிடம் விஷயத்தைச் சொன்னார். உடனடியாக பைலட்டுக்கு விஷயம் தெரிவிக்கப்பட்டது. எரிபொருள் வெளியேறும் விஷயத்தை விமானத்தளத்துக்குத் தெரிவித்தார் பைலட். விமானம் உடனடியாகத் தரையிறக்கப்பட்டது. 170 பேரின் உயிரும் ரேச்சலால் காப்பாற்றப்பட்டது. எல்லோரும் நன்றி சொன்னார்கள். விமானச் சேவை ரத்து செய்யப்பட்டதால், மறுநாள் வேறு விமானத்தில் பயணம் செய்வதற்கு ஏற்பாடு செய்தனர். அடுத்த விமானத்தில் ஏறும் வரை உணவுகளை மட்டுமே வழங்க முடியும், தங்குவதற்கு இடம் கொடுக்க முடியாது என்று சொல்லிவிட்டனர். வேறு வழியின்றி விமான நிலையத்தின் தரையில் படுத்து ஓர் இரவு முழுவதும் தூங்கியிருக்கிறார் ரேச்சல். ’நாங்கள் இந்த இரவை வெனிஸில் மகிழ்ச்சியாகக் கழித்திருக்க வேண்டும். ஒரு விபத்தைத் தடுத்து, உயிர்களைக் காப்பாற்றியவர்களுக்குத் தண்டனை கொடுத்திருக்கிறது விமான நிறுவனம்’ என்று வேதனையைப் பகிர்ந்திருக்கிறார் மைக்.

ஐயோ… பாவம்…

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x