Published : 20 Feb 2016 11:08 AM
Last Updated : 20 Feb 2016 11:08 AM

உலக மசாலா: செவ்வூதா

ஜப்பானின் ஷிண்டோமி நகரில் இருக்கும் அந்த வீட்டுக்கு மார்ச், ஏப்ரல் மாதங்களில் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வந்து செல்கிறார்கள். தோட்டம் முழுவதும் செவ்வூதா நிறத்தில் கம்பளம்போல பூத்திருக்கும் பூக்களைப் பார்ப்பதற்காகவும் நறுமணத்தை நுகர்வதற்காகவும் மக்கள் படையெடுக்கிறார்கள். இந்தத் தோட்டத்துக்குச் சொந்தக்காரர் குரோகி. 1956-ம் ஆண்டு குரோகி, யாசுகோவைத் திருமணம் செய்துகொண்டார். உடனே இந்த இடத்தை வாங்கினார். வீட்டைக் கட்டினார். 60 மாடுகளுடன் பால் பண்ணை அமைத்தார். பல ஆண்டுகள் உழைப்பில் ஓரளவு வசதி ஏற்பட்டது.

ஓய்வு பெற்ற பிறகு ஜப்பான் முழுவதும் சுற்றி வர வேண்டும் என்று முடிவு செய்தனர். யசுகோவுக்குத் திடீரென்று பார்வை பறிபோனதால் மன அழுத்தத்துக்கு உள்ளானார். புற உலகத்தில் இருந்து தன்னைத் துண்டித்துக்கொண்டார். மனைவியின் இந்த மாற்றம் குரோகியை வருத்தத்தில் ஆழ்த்தியது. ஒருநாள் பூங்காவில் நின்றுகொண்டிருந்தபோது, இளஞ்சிவப்பு நிறப் பூக்களின் நறுமணம் அவர் நாசியைத் துளைத்தது. இதேபோல ஒரு பூந்தோட்டத்தைத் தன் வீட்டில் அமைத்தால், மனைவியால் நறுமணத்தை உணர முடியும். தோட்டத்தைப் பார்ப்பதற்கு பொதுமக்கள் வருவார்கள். மனைவிக்கும் பேச்சுத் துணையாக இருக்கும் என்று எண்ணினார். உடனே பால் பண்ணையை மூடினார். செவ்வூதா நிறப் பூக்கள் செடிகளைப் பயிரிட்டார்.

அடுத்த இரண்டு ஆண்டுகளில் அவர் நினைத்தது போலவே அற்புதமான பூந்தோட்டம் உருவாகிவிட்டது. கண்களையும் நாசியையும் கவர்ந்தது. தோட்டம் பற்றிய செய்தி வேகமாகப் பரவியது. மக்கள் கூட்டம் கூட்டமாக வர ஆரம்பித்தனர். பூந்தோட்டத்தை மட்டுமின்றி குரோகியையும் யசுகோவையும் பார்த்தார்கள், பேசினார்கள், பாராட்டினார்கள். புகைப்படங்கள் எடுத்துக்கொண்டார்கள். நாள் முழுவதும் யசுகோ புன்னகையுடன் வலம் வந்தார். ’’இப்போது என் குறைபாட்டை நினைத்து நான் வருந்துவதில்லை. இத்தனை அன்பான மனிதர் என் கணவராக இருக்கும்போது எனக்கு எதற்குப் பார்வை?’’ என்று கேட்கிறார் யசுகோ.

எத்தனை அற்புதமான கணவர்!

கனடாவின் தென்பகுதியில் இருக்கும் மிகச் சிறிய நகரம் நோர்மன் வெல்ஸ். 800 மக்கள் வசிக்கும் இந்த நகரில் தொழில் முறையில் முடி வெட்டுவதற்கு ஒருவர் கூட இல்லை. கடந்த 2 ஆண்டுகளாக பெரும்பாலானவர்கள் தங்கள் முடியைத் தாங்களே வெட்டிக்கொள்கிறார்கள். ஒருவர் இன்னொருவருக்கு முடி வெட்டுவதில் உதவி செய்துகொள்கிறார்கள். ஆனால் யார் தலையும் நேர்த்தியாக இல்லை. ‘’இது மிகச் சிறிய நகரம். இங்கே இருந்த முடிதிருத்துனர் வேறு நகரத்துக்குச் சென்றுவிட்டார்.

அதிலிருந்து எங்களுக்கு மோசமான சூழ்நிலை ஆரம்பித்துவிட்டது. அரசாங்கம் மூலம் இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண முயல்கிறார்கள். ஆனால் யாராவது வந்தால்தானே? நான் என் கணவருக்கு ஓரளவு நன்றாகவே முடி வெட்டி விடுகிறேன். ஆனால் எல்லோருக்கும் இந்த வேலையை என்னால் செய்ய இயலாது. எங்கள் ஊருக்கு யாராவது நிரந்தரமாகத் தங்கக்கூடிய முடிதிருத்துனர் வந்தால், அவருக்கு நல்ல வருமானம் கிடைக்கும் தொழிலாக இது இருக்கும். அவர்களுக்குப் பணம் மட்டுமல்ல, எங்களின் அன்பையும் ஏராளமாக வழங்குவோம்’’ என்கிறார் நிக்கி ரிச்சர்ட்ஸ்.

அடப்பாவமே… இது 'தலை'யாய பிரச்சினைதான்…



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x