Published : 01 May 2015 12:08 PM
Last Updated : 01 May 2015 12:08 PM

உலக மசாலா: செல்ஃபி அங்கிள்!

சீனாவின் ஷென்யாங் நகரைச் சேர்ந்தவர் டெங் ஜியாஸி. இவர் டாக்ஸி ஓட்டுனராக இருக்கிறார். உலகிலேயே மிக அதிகமான செல்ஃபிகளை எடுத்தவர் இவராகத்தான் இருப்பார் என்கிறார்கள். தன்னுடைய டாக்ஸியில் ஏறும் வாடிக்கையாளர்களிடம் செல்ஃபி எடுத்துக்கொள்ளலாம் என்று கோரிக்கை வைக்கிறார். சம்மதிப்பவர்களுடன் செல்ஃபி எடுத்துக்கொள்கிறார்.

இதுவரை 30 ஆயிரம் செல்ஃபி படங்களை எடுத்திருக்கிறார் டெங். தினமும் 80 வாடிக்கையாளர்கள் இவரது டாக்ஸியில் ஏறுகிறார்கள். இவர்களில் 20 பேராவது செல்ஃபி எடுப்பதற்கு ஒப்புக்கொள்கிறார்கள். `’என்னுடைய பேச்சையும் செயலையும் பார்த்துவிட்டு, வாடிக்கையாளர்கள் கட்டணத்தை விட அதிகமாகப் பணம் தருவார்கள். ஆனால் நான் அதைப் பெற்றுக்கொள்ள மாட்டேன்.

உழைப்புக்கு ஏற்ற வருமானம் கிடைத்தால் போதும். அதற்குப் பதிலாக செல்ஃபி கோரிக்கையை மட்டும் வைப்பேன்’’ என்கிறார் டெங். வாடிக்கையாளர்களில் சிலர் மீண்டும் இவர் டாக்ஸியில் ஏறும்போது, தாங்கள் செல்ஃபி எடுத்துக்கொண்டதை மகிழ்ச்சியுடன் பகிர்ந்துகொள்கிறார்கள். டெங் அங்கிள் என்று அன்புடன் அழைக்கிறார்கள். இதை விட வேறு என்ன வேண்டும் என்கிறார் டெங்.

செல்ஃபி அங்கிள்னு பேரை மாத்திடலாம்!

தனக்கென்று ஓர் ஐரோப்பிய நாட்டை உருவாக்கியிருக்கிறார் 31 வயது விட் ஜெட்லிகா. 3 சதுர மைல்கள் பரப்பளவு கொண்ட பகுதி, செர்பியாவுக்கும் குரொவேஷியாவுக்கும் இடையில் இருக்கிறது. செக் குடியரசைச் சேர்ந்த ஜெட்லிகா ஓர் அரசியல்வாதி. தன்னுடைய லட்சியத்தை செக் குடியரசில் நிறைவேற்ற முடியவில்லை என்று, இந்தப் பகுதியை வாங்கி `லிபர்லேண்ட்’ என்று பெயர் சூட்டியிருக்கிறார்.

இந்த நாட்டுக்கு என்று தனிக்கொடி, தனி ராணுவம், தனி அரசாங்கம் என்று திட்டமிட்டிருக்கிறார். இதற்காக நிறைய நன்கொடைகளையும் பெற்று வருகிறார். லிபர்லேண்டில் குடியேறுவதற்காக ஏராளமானவர்கள் விருப்பம் தெரிவித்திருக்கிறார்கள். முதலில் 5 ஆயிரம் பேர் குடியேற்ற உரிமையைப் பெற இருக்கிறார்கள். 35 ஆயிரம் மக்கள் வரை இங்கே வசிக்கலாம் என்கிறார் ஜெட்லிகா.

நானே ராஜா… நானே மந்திரி…

அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் வசிக்கிறார் 20 வயது கிறிஸ்டியன். அவருடைய முகத்தில் மகனின் படத்தை டாட்டூவாக வரைந்து வைத்திருக்கிறார். கடந்த ஜூலை மாதம் மகன் பிழைக்க மாட்டான் என்பதை அறிந்தவுடன் ஒரு தந்தையாக கிறிஸ்டியனுக்கு அந்தச் செய்தியைத் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை.

மகன் தன்னுடனே இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் கன்னத்தில் படத்தை டாட்டூ குத்திக்கொண்டார். பார்ப்பவர்கள் அத்தனை பேரும் கிறிஸ்டியனின் செயலுக்கு எதிர்ப்புகளைத் தெரிவித்தனர். எதைப் பற்றியும் கிறிஸ்டியன் கவலைப்படவில்லை. டாட்டூ போட்டுக்கொண்ட சில நாட்களில் மகனை இழந்துவிட்டார்.

அன்பான அப்பா…

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x