Published : 30 Jul 2015 10:10 AM
Last Updated : 30 Jul 2015 10:10 AM

உலக மசாலா: செடிகளிடம் பேச 3 ஊழியர்கள்

பிரிட்டனைச் சேர்ந்த ஹார்ட்வேர் நிறுவனம், தங்களுடைய தோட்டத்தில் உள்ள செடிகளுடன் பேசுவதற்காக 3 ஊழியர்களை நியமித்திருக்கிறது. தோட்டக்கலை நிபுணர் டிம் க்ளாப் வழிகாட்டலில் மூவரும் செடிகளுடன் உரையாடி வருகிறார்கள். “மனிதர்களைப் போன்றுதான் செடிகளும். செடிகளைக் கவனிக்காமல் விட்டால் அவை சோர்ந்து போய்விடுகின்றன. செடிகளுக்குப் போதிய தண்ணீரும் வெளிச்சமும் கிடைப்பதோடு, மனிதர்கள் உரையாடவும் செய்தால் அதிக அளவில் பலன் தருகின்றன’’ என்கிறார் க்ளாப். “காய்க்காத தக்காளிச் செடியிடம் என் அம்மா பேச ஆரம்பித்த பிறகு, செடி ஏராளமான தக்காளிகளைக் காய்த்துத் தள்ளிவிட்டது’’ என்கிறார் ஒருவர்.

இதைத் தானே நம் ஜே.சி. போஸும் சொல்லிருக்கார்!

அரிஸோனாவைச் சேர்ந்தவர் 32 வயது ஜெசிகா காக்ஸ். இவருக்குக் கைகள் இல்லை. கால்கள் மூலமே அனைத்து வேலைகளையும் செய்து வருகிறார். கால்களால் விமானத்தை இயக்குகிறார், பியானோ வாசிக்கிறார். தன்னைப் போன்றவர்களுக்குத் தன்னம்பிக்கை வகுப்புகள் எடுத்து வருகிறார். ஜெசிகாவைச் சந்திப்பதற்காக ரூத் ஈவ்லின் பிரான்க், 6 மணி நேரம் பயணம் செய்து வந்தார். 3 வயது ரூத்துக்கும் பிறவியில் இருந்து கைகள் இல்லை. தன்னுடைய மகளுக்குத் தன்னம்பிக்கை அளிப்பதற்காக ஜெசிகாவைச் சந்திக்க அழைத்து வந்திருந்தார் ரூத்தின் அம்மா.

ரூத்தைக் கண்டவுடன் ஜெசிகாவுக்கு மகிழ்ச்சி. கைகள் இல்லாத இருவரும் ஒருவரை ஒருவர் அணைத்துக்கொண்டனர். “அன்பும் அணைக்கவேண்டும் என்ற மனநிலையும் இருந்தால் போதும், அணைத்துவிடலாம். கைகள் தேவை இல்லை’’ என்கிறார் ஜெசிகா. குழந்தைக்குக் கால்கள் மூலம் எப்படி எழுதலாம், வேலைகளை எப்படிச் செய்யலாம் என்று செய்து காட்டினார் ஜெசிகா. “இனி என் மகளைப் பற்றிக் கவலை இல்லை. ஜெசிகா போல தன்னம்பிக்கை மனுசியாக வலம் வருவார்’’ என்கிறார் ரூத்தின் அம்மா.

அழகான சந்திப்பு!

நெதர்லாந்தின் ஃபெர்மனாக் கவுண்டியில் ஆண்டுதோறும் மிக விநோதமான போட்டி ஒன்றும் நடத்தப்படுகிறது. ஆட்டின் புழுக்கைகளை வாயில் அடக்கிக்கொண்டு, வேகமாகத் துப்ப வேண்டும் என்பதுதான் போட்டி. இந்தப் போட்டியை உருவாக்கி, நடத்துகிறவர் ஜோய் மஹோன். “ஆப்பிரிக்காவில் ஈமு சாணத்தைத் துப்பும் போட்டி நடத்தப்படுகிறது. அதை ஆட்டுப் புழுக்கையாக மாற்றிவிட்டேன்’’ என்கிறார் ஜோய். போட்டிக்காக ஆட்டுப் புழுக்கைகளை ஒரு பண்ணையில் இருந்து காரில் எடுத்து வந்தார்.

முகம் சுளித்த ஜோய் மனைவி, இப்படிப்பட்ட போட்டிகளை நடத்தினால் விவாகரத்துதான் என்று எச்சரித்துவிட்டார். ஆனாலும் ஜோய் போட்டியை நடத்தினார். 44 போட்டியாளர்கள் இதில் கலந்துகொண்டனர். அதிக தூரம் ஆட்டுப் புழுக்கையைத் துப்பியவருக்கு 10 ஆயிரம் ரூபாய் பரிசாக வழங்கப்பட்டது.

கஷ்டமான போட்டிதான்…

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x