Published : 11 Jan 2017 11:15 AM
Last Updated : 11 Jan 2017 11:15 AM

உலக மசாலா: சூப்பர் ஹீரோவுக்கு இந்த உலகம் கடமைப்பட்டிருக்கிறது!

பில்லி பார் கடந்த 40 ஆண்டுகளாக அமெரிக்காவின் கொலராடோ மாகாணத்தில் உள்ள பனிப் பாலைவனத்தில் தனியாக வசித்து வருகிறார். 1920-ம் ஆண்டு முதல் இந்தப் பகுதி மனிதர்கள் வசிப்பதற்குத் தகுதியற்றதாக மாறிவிட்டது. பருவநிலை மிகக் கடுமையாக இருக்கும். 40 ஆண்டுகளாக இங்கே நிலவும் தினசரி பருவநிலையைக் குறித்து வருகிறார் பில்லி பார். பனிப்பொழிவு, வெப்பநிலை, பனி உருகுதல், இங்கே வரும் பறவைகள், விலங்குகள் என்று பல்வேறு தகவல்களையும் பதிவு செய்திருக்கிறார். பொழுதுபோக்குக்காக இவர் செய்த ஆய்வு, இன்று புவி வெப்பமடைதல் குறித்து ஆராய்ந்து வரும் விஞ்ஞானிகளுக்குப் பேருதவியாக இருந்து வருகிறது. இவரை ஸ்நோ கார்டியன், சூப்பர் ஹீரோ என்று விஞ்ஞானிகள் அழைக்கின்றனர். “நியூ ஜெர்சியில் வளர்ந்தேன். சுற்றுச்சூழல் அறிவியலில் பட்டம் பெற்ற பிறகு, என்னால் மனிதர்கள் வசிக்கக்கூடிய பகுதியில் இயல்பான வாழ்க்கை வாழ முடியவில்லை. அதனால் இந்தப் பனிப் பாலைவனத்துக்கு வந்துவிட்டேன். முதலில் கூடாரம் போட்டுத் தங்கினேன். அந்த ஆண்டு 25 அடி உயரத்துக்குப் பனிப்பொழிவு ஏற்பட்டது. உயிர் பிழைத்ததே பெரிய விஷயமாக இருந்தது. அடுத்த 8 ஆண்டுகள் கொஞ்சம் கொஞ்சமாக அனைத்து வசதிகளும் கொண்ட ஒரு வீட்டை உருவாக்கினேன். நானே கால நிலையை அளக்கும் கருவிகளை உருவாக்கி வைத்திருக்கிறேன். இங்கே நிகழும் சின்ன மாற்றத்தைக் கூடப் பதிவு செய்திருக்கிறேன். ஆர்வத்தால் மட்டுமே இதை நான் செய்துவருகிறேன். இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை அருகில் இருக்கும் கிராமத்துக்குச் சென்று தேவையான பொருட்களை வாங்கி வருவேன். மாதம் ஒருமுறை நகரத்துக்குச் சென்று வருவேன். வானிலையைக் கவனிக்கும் நேரம் தவிர, மீதி நேரம் திரைப்படங்கள் பார்ப்பேன். புத்தகங்கள் படிப்பேன். மனிதர்களே இல்லாத இந்த இடத்தை எல்லோராலும் ரசிக்க முடியாது. எனக்கு இது ரொம்பவே பிடித்திருக்கிறது. 65 வயதாகிவிட்டது. இனியும் இங்கே தொடர்ந்து வசிக்க இயலாது. விரைவில் நாட்டுக்குள் சென்றுவிட வேண்டும்” என்கிறார் பில்லி பார். ஆராய்ச்சியாளர்கள் கோடிக்கணக்கில் செலவு செய்து, கண்டுபிடிக்க வேண்டிய விஷயத்தைத் தனி மனிதராக, உலகத்துக்குத் தன்னுடைய பங்களிப்பைச் செய்திருக்கும் பில்லி பாரை அறிவுலகம் கொண்டாடுகிறது. புவி வெப்பமடைதல் குறித்த பல கேள்விகளுக்கு இவரின் ஆய்வு பதிலளிக்கும் என்கிறார்கள்.

சூப்பர் ஹீரோவுக்கு இந்த உலகம் கடமைப்பட்டிருக்கிறது!

விர்ஜினியாவில் ஓர் ஆடு பிரசவ வலியில் துடித்துக்கொண்டிருந் தது. அருகில் ஒரு பூனை அமர்ந்து ஆட்டின் வயிற்றைத் தன் முன்னங்கால்களால் தடவி மசாஜ் செய்துகொண்டிருந்தது. ஆட்டுக்குப் பூனை உதவி செய்வதை அறியாமல், பூனையைச் சிலர் அப்புறப்படுத்தினர். ஆனால் அவர்களிடமிருந்து தப்பி வந்து, மீண்டும் ஆட்டின் வயிற்றை மசாஜ் செய்ய ஆரம்பித்துவிட்டது பூனை. இந்தக் காட்சியை வீடியோவாக எடுத்து இணையத்தில் வெளியிட்டுள்ளனர். ஒரு பூனையால் எப்படி ஆட்டின் பிரசவ வலி புரிந்து, உதவி செய்ய முடிந்தது என்று எல்லோருக்கும் வியப்பாக இருக்கிறது.

ஆட்டின் பிரசவத்துக்கு உதவிய பூனை!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x