Published : 10 Jun 2015 11:14 AM
Last Updated : 10 Jun 2015 11:14 AM

உலக மசாலா: சூப்பர் ஸ்டார் கங்காரு!

ஆஸ்திரேலியாவில் ஆலிஸ் ஸ்ப்ரிங்ஸ் கங்காரு சரணாலயத்தின் சூப்பர் ஸ்டார் ரோஜர். பெண் கங்காருக்களைப் பாதுகாப்பதற்காக மற்ற ஆண் கங்காருக்களிடம் சண்டை போட்டுக்கொண்டே இருக்கிறது ரோஜர். ஒரு குத்துச் சண்டை வீரர் போல இரண்டு கால்களால் நிமிர்ந்து நின்று, உடற்பயிற்சி செய்கிறது. ரோஜருக்குத் தனியாக உலோக டின்களைக் கொடுத்துப் பயிற்சியளிக்கிறார்கள். உலோக டின்களை இரண்டு கைகளால் ஓங்கி அடித்து, உடைத்து, தூக்கி எறிகிறது ரோஜர்.

கிறிஸ் ப்ரோக்லா பார்னெஸ் சரணாலயத்தின் மேனேஜராக மட்டுமின்றி, ரோஜரின் அம்மாவாகவும் பார்த்துக்கொள்கிறார். 9 வயதான ரோஜர் 90 கிலோ எடையும் 7 அடி உயரமும் கொண்டதாக இருக்கிறது. இன்னும் மிகப் பெரியதாக வளரும் வாய்ப்பிருப்பதாகச் சொல்கிறார்கள். 2006ம் ஆண்டு சாலையோரத்தில் ரோஜரின் அம்மா இறந்து கிடந்தது. உள்ளங்கை அளவு இருந்த ரோஜரை அந்த வழியே வந்த கிறிஸ் எடுத்து வந்து, சரணாலயத்தில் வளர்த்து வருகிறார். சரணாலயத்தின் செல்லக் குழந்தையாகவும் கங்காருக்களில் சூப்பர் ஸ்டாராகவும் வலம் வருகிறது ரோஜர்.

அடேங்கப்பா…

மனச் சோர்வு, மன அழுத்தம், கோபம், பதற்றம், வெறுமை போன்றவை ஏற்படும்பொழுது அதிலிருந்து மீள்வது சற்றுக் கடினமான விஷயமாக இருக்கும். நம் மன நிலையை நாமே சரி செய்துகொண்டு, புத்துணர்ச்சி பெற்றுக்கொள்வதற்கு ஒரு கருவி கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. நரம்பணுவியலையும் தொழில்நுட்பத்தையும் இணைத்து `Thync’ என்ற கருவி உருவாக்கப்பட்டிருக்கிறது. இந்தக் கருவியை முன் தலையில் மாட்டிக்கொண்டால் மனநிலை வேகமாக மாறும். சந்தோஷமாக இருக்க வேண்டுமா, புத்துணர்ச்சியோடு இருக்க வேண்டுமா, தீவிரமாகச் சிந்திக்க வேண்டுமா என்பதை நீங்கள் முடிவு செய்துகொண்டு, கருவியை அதற்கேற்றவாறு மாற்றிக்கொண்டால் போதும்.

நீங்கள் விரும்பிய மனநிலைக்குத் திரும்பிவிடுவீர்கள். ஸ்மார்ட் போன் மூலம் அப்ளிகேஷனை டவுன்லோட் செய்துகொண்டு கருவியை இயக்கிக்கொள்ளலாம். நிம்மதி தேடுகிறேன், துக்கத்தை மறக்க நினைக்கிறேன் என்று கூறிக்கொண்டு மது, போதைப் பொருட்களுக்கு அடிமையாக வேண்டிய அவசியமில்லை. இந்தச் சின்னக் கருவியே துக்கத்திலிருந்து விடுவித்து, சந்தோஷமான மனநிலைக்கு மாற்றிவிடுகிறது. ஹார்வார்டைச் சேர்ந்த பொறியியல் நிபுணர்களும் நரம்பணுவியல் நிபுணர்களும் இணைந்து இதை உருவாக்கியிருக்கிறார்கள். இந்த ஆராய்ச்சிக்காக 95 கோடி ரூபாய் செலவாகியிருக்கிறது. 3,700 மனிதர்களிடம் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, அனைவராலும் வரவேற்கப்பட்டிருக்கிறது. கடந்த வாரம் விற்பனைக்கு வந்து, அமோக வரவேற்பைப் பெற்றிருக்கிறது Thync.

அட! நல்ல விஷயமாகத்தான் தெரியுது!

சீனாவின் பீஜிங், ஹாங்ஸோவ் என்ற இரண்டு இடங்களில் புதிய வகை சூப்பர் மார்க்கெட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கின்றன. இங்கே விற்பனைப் பிரதிநிதிகள் கிடையாது. தேவையான பொருட்களைக் கடையில் எடுத்துக்கொண்டு, கணக்குப் பார்த்து, ஆன்லைன் மூலம் பணத்தைச் செலுத்திவிட்டு வர வேண்டும். மக்கள் நேர்மையாக இருப்பதற்குக் கற்றுத் தருகிறது இந்த சூப்பர் மார்க்கெட்டுகள் என்கிறார்கள் உரிமையாளர்கள். மிக மிகக் குறைந்த ஆட்களே கடையில் இருக்கிறார்கள். எ

ந்தப் பொருட்களை எடுத்தாலும் கேள்வி கேட்க மாட்டார்கள். எடுத்த பொருட்களுக்குப் பணம் செலுத்தாவிட்டால் கூட விசாரிக்க மாட்டார்கள். “யார் கவனித்தாலும் கவனிக்காவிட்டாலும் நேர்மையாக இருப்பதுதான் உங்களின் அடிப்படைக் குணம். அதை நாங்கள் நம்புகிறோம். எங்கள் நம்பிக்கையை நிச்சயம் நீங்கள் காப்பாற்றுவீர்கள்’’ என்கிறார்கள்.

நல்ல நம்பிக்கை..



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x