Published : 16 Jun 2017 09:56 AM
Last Updated : 16 Jun 2017 09:56 AM

உலக மசாலா: சூப்பர் ஸ்டாரான வாங்

சீனாவில் வசிக்கும் 81 வயது வாங் டேஷன், விளம்பரங்கள், ஃபேஷன் ஷோக்கள், திரைப்படங்கள் என்று சூப்பர் ஸ்டாராக வலம் வருகிறார். முதியவர்களைப் பற்றிய பார்வையையும் மாற்றியிருக்கிறார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்புவரை சாதாரண மனிதராகத்தான் வாங் வாழ்க்கை நடத்தி வந்தார். திடீரென்று ஒரு ஃபேஷன் டிசைனரிடமிருந்து வாங்கின் மகள் மூலம் அழைப்பு வந்தது. வெண் தாடி, நீளமான தலைமுடியுடன் சட்டை அணியாமல் சில நிமிடங்கள் மாடல்கள் சூழ ஃபேஷன் ஷோவில் நடந்து வந்தார். ஒரே இரவில் சீனாவின் சூப்பர் ஸ்டாராக மாறினார். இவர் என்ன சாப்பிடுகிறார், உடலைக் கட்டுக்கோப்பாக எப்படி வைத்துக்கொள்கிறார் என்றெல்லாம் தெரிந்துகொள்வதற்கு மக்கள் ஆர்வம் காட்டினர். “முதல்முறை சட்டையின்றி ஃபேஷன் ஷோவில் நடந்தபோது ஆபாசமாக வலம் வந்த குற்றத்துக்காகக் கைது செய்யப்படுவேன் என்று தான் நினைத்தேன். அப்படி ஒன்றும் நடக்கவில்லை. விளம்பரங்கள், தொலைக்காட்சித் தொடர்கள், திரைப்படங்களில் வாய்ப்புகள் வந்து குவிந்துவிட்டன. சட்டென்று மக்கள் என்னை ஒரு பிரபலமாக ஏற்றுக்கொண்டுவிட்டனர். சீனாவிலும் வெளிநாடுகளிலும் இன்று அறியக்கூடிய மனிதனாக இருக்கிறேன். ‘சீனாவின் ஹாட்டஸ்ட் க்ரான்ட்பா’ என்ற பட்டமும் கிடைத்துவிட்டது. புகழும் பணமும் பெருகிவிட்டது. ஆனால் என் வாழ்க்கை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு எப்படி இருந்ததோ அதே மாதிரிதான் இப்போதும் இருக்கிறது. ஒரு கிண்ணம் சாதமும் கொஞ்சம் டோஃபுவும் தான் என் உணவு. இயற்கை நம் வயதைத் தீர்மானிக்கிறது, நீங்கள்தான் மனநிலையைத் தீர்மானிக்கிறீர்கள். நல்ல சிந்தனையாலும் செயல்களாலும் இளமையைத் தக்க வைத்துக்கொள்ள முடியும். இறப்பைத் தவிர்க்க இயலாது. இறந்த பிறகு என்ன ஆகும் என்பதும் தெரியாது. அதனால் அமைதியாகவும் சந்தோஷமாகவும் பயனுள்ளதாகவும் வாழ்கிறேன். இறந்த பிறகு என் உடலை மருத்துவப் பயன்பாட்டுக்கு எழுதி வைத்துவிட்டேன்” என்கிறார் வாங் டேஷன்.

ஒரே இரவில் சூப்பர் ஸ்டாரான வாங்குக்கு வாழ்த்துகள்!

தாய்லாந்தைச் சேர்ந்த சிலா சுதாரத் சூரிய வெப்பத்தில் கோழி இறைச்சியைச் சமைக்கிறார். ஆயிரம் சிறிய கண்ணாடிகளை உலோகக் கம்பிகளில் இணைத்து, அதன்மூலம் சூரிய சக்தியை இறைச்சி மீது குவித்து, வேக வைக்கிறார். “1997-ம் ஆண்டு பேருந்து கண்ணாடி மூலம் சூரிய வெப்பம் என்னைச் சுருக்கென்று தாக்கியது. அப்போதுதான் இந்த யோசனை வந்தது. ஆனால் எல்லோரும் என்னைப் பார்த்து சிரித்தார்கள். விரைவில் என் முயற்சியில் வெற்றி பெற்றேன். கண்ணாடிகளின் மூலம் சூரிய வெப்பத்தைக் குவித்து, 10 முதல் 15 நிமிடங்களில் ஒன்றரை கிலோ இறைச்சியை வேக வைத்துவிடுவேன். 300 டிகிரி செல்சியஸில் இயற்கை வெப்பம் கிடைக்கிறது. இறைச்சியை இதைவிட வேகமாக வேறு எப்படியும் சமைத்துவிட முடியாது. சுவையும் பிரமாதமாக இருக்கும். சூரிய ஒளியில் சமைக்கப்பட்ட கோழி இறைச்சியைச் சாப்பிடுவதற்காகவே தொலைதூரத்தில் இருந்தும் வாடிக்கையாளர்கள் வருகிறார்கள்” என்கிறார் சிலா சுராத்.

சூரிய ஒளியில் சமையல்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x