Published : 07 Jun 2015 11:44 AM
Last Updated : 07 Jun 2015 11:44 AM

உலக மசாலா: சுவாரசியமான மனிதர்!

சீனாவில் புழங்கும் கள்ள நோட்டில் 97 சதவீதம் ஒரே மனிதரால் உருவாக்கப்பட்ட வார்ப்புருவில் அச்சடிக்கப்பட்டிருக்கின்றன. 2013ம் ஆண்டு 73 வயது பெங் டாக்ஸியாங் கைது செய்யப்பட்டார். இவர் பல லட்சம் யுவான் அடிக்கும் வார்ப்புருக்களை கைகளாலேயே உருவாக்கியிருக்கிறார். இவருக்குக் கணினி பயன்பாடு தெரியாததால், இந்தக் காலத்திலும் நுணுக்கமாகக் கைகளாலேயே செய்திருக்கிறார். ஓர் எழுத்துருவுக்கு 5 முதல் 12 லட்சம் ரூபாய் வரை பெற்றுக்கொண்டிருக்கிறார். டாக்ஸியாங்கைக் கைது செய்து விசாரித்தபோதுதான் அவர் பெரிய ஓவியர் என்பதும், கள்ள நோட்டுகளுடன் வெளிநாட்டு டிப்ளமோ சான்றிதழ்களையும் உருவாக்கிக் கொடுத்திருக்கிறார் என்ற தகவல்கள் தெரியவந்தன. குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளதால் டாக்ஸியாங்குக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டிருக்கிறது.

திறமையை நல்ல விஷயத்துக்குப் பயன்படுத்தியிருந்தால் இந்த நிலைமை வந்திருக்காதே…

அமெரிக்காவின் இல்லினாய்ஸ் பகுதியில் வசிக்கிறார்கள் ரிக் மிஸ் குடும்பத்தினர். விடுமுறையில் வெளியூர் சென்றிருந்தனர். திடீரென்று அவர்களது பக்கத்து வீட்டில் இருந்து ஒருவர் ரிக்கைத் தொடர்புகொண்டார். ‘‘உங்கள் வீட்டையும் காரையும் ஒரு கழுகுக் கூட்டம் பாழாக்கி வருகிறது’’ என்று சொன்னார். ரிக் குடும்பத்தோடு உடனே திரும்பினார். வீட்டிலும் காரிலும் மதிப்பிட முடியாத அளவுக்குத் சேதத்தை விளைவித்திருந்தன கழுகுகள். ஒவ்வொரு நாளும் குறிப்பிட்ட நேரத்தில் கூட்டமாகப் படையெடுத்து வருகின்றன. 2 அடி உயரமும் 5 அடி அகல இறக்கைகளையும் கொண்ட ராட்சச கழுகுகளைப் பார்க்கும்போதே திகில் ஏற்படுகிறது. ரிக் அரசாங்கத்திடம் உதவி கேட்டார். அவர்கள் வந்து ரிக் வீட்டைப் பார்த்தனர். எங்கோ செல்ல வேண்டிய பறவைகள் வழி தவறி இங்கே வந்துவிட்டன. ஒரு சில நாட்களில் நிலைமை சரியாகிவிடும் என்றனர். அந்தச் சில நாட்களுக்குள் எவ்வளவு சேதாரம் ஆகும் என்ற அச்சத்தில் உறைந்திருக்கிறார் ரிக்.

ஐயோ… பாவமே…

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பில் ஃபர்குசன் விதவித குல்லாய்களைத் தலையில் மாட்டி புகைப்படங்கள் எடுத்திருக்கிறார். கம்பளியால் பின்னப்பட்ட குல்லாய்கள் அனைத்தும் உணவுப் பொருட்களைப் போன்று வடிவமைக்கப் பட்டிருப்பதுதான் இவற்றில் விசேஷம். பில் ஃபர்குசன் பர்கர் உணவகத்தில் வேலை செய்கிறார். தினமும் பர்க்கரைப் பார்த்துக்கொண்டிருந்தவருக்கு ஒருநாள் கம்பளியில் உணவுப் பொருட்களைச் செய்யும் யோசனை உதித்தது. உடனே களத்தில் இறங்கிவிட்டார். ஆப்பிள், பேகன் எக், ஃப்ரைட் சிக்கன், காபி கப், டோநட், பியர் பாட்டில், வாழைப்பழம், ஐஸ்க்ரீம், நூடுல்ஸ், பர்கர் என்று மிகச் சிறப்பான 20 குல்லாய்களை மட்டும் தேர்ந்தெடுத்து, இன்ஸ்டாகிராமில் வெளியிட்டிருக்கிறார்.

சுவாரசியமான மனிதர்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x