Published : 01 Jul 2015 11:40 AM
Last Updated : 01 Jul 2015 11:40 AM

உலக மசாலா: சுவர் ஏறும் குழந்தை!

அரிஸோனாவில் வசிக்கும் எல்லி, 7 அடி சுவற்றில் தன் பிஞ்சுப் பாதங்களைப் பதித்து, வேகமாக ஏறிவிடுகிறாள். 20 மாதக் குழந்தையான எல்லி, 8 மாதத்திலேயே சுவர் ஏற ஆரம்பித்துவிட்டாள். எல்லியின் அம்மா ரேச்சலும் அப்பா ஸாக்கும் மலை ஏறும் வீரர்கள், ஜிம் பயிற்சியாளர்கள். வயிற்றில் எல்லி இருந்தபோது கூட மலை ஏற்றம் செய்த துணிச்சல்காரர் ரேச்சல். அதனால்தானோ என்னவோ எல்லிக்கும் சுவர் ஏறுவதில் ஆர்வம் விரைவில் வந்துவிட்டது. எல்லி பிறந்த சில நாட்களிலேயே ரேச்சல் ஜிம்முக்குச் சென்றுவிட்டார்.

அங்கே எல்லி கண் விழித்துப் பார்த்தால், யாராவது சுவரில் ஏறும் பயிற்சியைச் செய்துகொண்டிருப்பார்கள். ஒருகட்டத்தில் ஆர்வத்தைக் கட்டுப்படுத்த முடியாத எல்லி, தானே சுவரில் ஏறுவதற்கு முயற்சி செய்தாள். குழந்தையின் ஆர்வத்தை முடக்க மனமில்லாமல், பயிற்சி அளிக்க முடிவு செய்தனர். எல்லிக்காக மூன்றடியில் ஒரு சுவர் வைக்கப்பட்டது. கீழே பாதுகாப்புக்கான மெத்தைகள் போடப்பட்டன. அத்துடன் ரேச்சல், ஸாக் அருகில் இருக்க, எல்லி சுவர் ஏற ஆரம்பித்தாள். வெகு விரைவில் இந்தக் கலையின் நுணுக்கங்களைத் தெரிந்துகொண்டாள். இன்று 7 அடி உயரத்தைச் சில நிமிடங்களில் ஏறிக் கடந்து விடுகிறாள்.

ரேச்சல் எட்டடி பாய்ந்தால் எல்லி 16 அடி பாய்கிறாள்!

ஆல்பர்ட் ஐன்ஸ்டைனின் சார்பியல் கொள்கை 100 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. நூற்றாண்டைக் கொண்டாடும் விதத்திலும் ஏழைக் குழந்தைகளின் கல்விக்கான நன்கொடை சேகரிப்புக்காகவும் ஐன்ஸ்டைன் அணிவகுப்பு ஒன்று நடைபெற்றது. லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற்ற இந்த அணிவகுப்பில் 319 பேர் ஐன்ஸ்டைன் போன்று வேடமணிந்து வந்தனர்.

81 வயது பென்னி வெஸ்ஸர்மன் அப்படியே ஐன்ஸ்டைன் போலவே இருந்தார். அவர்தான் தலைமை தாங்கி நடந்து வந்தார். 1921ம் ஆண்டு நோபல் பரிசு பெற்றார் ஐன்ஸ்டைன். 1933ம் ஆண்டு ஹிட்லரின் யூதர் வேட்டை காரணமாக ஜெர்மனியை விட்டு வெளியேறி, அமெரிக்காவில் குடியேறினார். கடைசி வரை ஐன்ஸ்டைன் ஜெர்மனிக்குத் திரும்பிச் செல்லவே இல்லை.

இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற விஞ்ஞானியைக் கூட விட்டுவைக்கவில்லை இந்த ஹிட்லர்…

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x