Published : 24 Mar 2016 10:25 AM
Last Updated : 24 Mar 2016 10:25 AM

உலக மசாலா: சுருங்கும் கிராமம்!

கிரேக்க (கிரீஸ்) நாட்டில் மலைப் பகுதியில் இருக்கிறது ரோபோடோ கிராமம். பெரிய பங்களாக்கள், வீடுகள், பள்ளி, மருத்துவமனை, தேவாலயம், உணவு விடுதி என்று எல்லா வசதிகளும் நிறைந்த ஊர். இங்கே 300 குடும்பங்கள் வசித்து வந்தன. 2012-ம் ஆண்டு கட்டிடங்கள் சாய ஆரம்பித்தன. நான்கே ஆண்டுகளில் ரோபோடோ, மனிதர்கள் வசிக்காத இடமாக மாறிவிட்டது.

ஒவ்வொரு மழைக் காலத்திலும் இந்த கிராமத்தைச் சுற்றி, தண்ணீர் நிறைந்துவிடும். பெரிய இயந்திரங்களைக் கொண்டு தண்ணீரை வெளியேற்றுவார்கள். ஆனால் 2011-ம் ஆண்டு தண்ணீரை வெளியேற்ற இயந்திரங்கள் கிடைக்கவில்லை. முதலில் மலையில்தான் விரிசல் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து கட்டிடங்களிலும் விரிசல் வந்தது. கிராமமே சுருங்க ஆரம்பித்துவிட்டது. இங்கே இருந்த 300 குடும்பங்களும் வெளியேறிச் சென்றுவிட்டன.

“இங்கே யாராலும் இனி வசிக்க முடியாது. என்னுடைய வீடும் இங்குதான் இருக்கிறது. ஆவணப்படம் எடுப்பதற்காக மட்டுமே மீண்டும் இந்த கிராமத்துக்கு வந்தேன். பேய் கிராமம் போல திகிலாகக் காட்சியளிக்கிறது. இதுவரை எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை. பாதுகாப்பாக தப்பி விட்டோம். இந்த கிராமம் தன்னையும் சூன்யமாக்கிக்கொண்டு, எங்கள் எதிர்காலத்தையும் சூன்யமாக்கிவிட்டது. ஆண்டுக்கு 10 முதல் 15 செ.மீ. அளவுக்கு இந்தப் பகுதி நிலம் சுருங்கிக்கொண்டு வருகிறது” என்கிறார் ரோபீஸ்.

சுருங்கும் கிராமம்… இயற்கையின் விநோதம்…

பிரேசிலைச் சேர்ந்த மெகடோஸ் என்ற நிறுவனம், ஜிகா வைரஸ் தாக்காத கர்ப்பிணிகளுக்கான ஆடையை உருவாக்கியிருக்கிறது. இயற்கையிலேயே சிட்ரோனெல்லா புற்கள் பூச்சிகளை விரட்டும் சக்தி படைத்தவை. இந்த சிட்ரோனெல்லாவை சேர்த்து துணிகளில் நெய்திருக்கிறார்கள். இந்த ஆடையை அணியும் பெண்கள் கொசுக்கடியில் இருந்து தப்பி விடுவார்கள். ஜிகா வைரஸுக்கு இதுவரை தடுப்பூசியோ, மருந்துகளோ கண்டுபிடிக்கப்படவில்லை. அதனால் கொசுக்கடியில் இருந்து காப்பாற்றிக்கொள்வது, தற்காப்பு நடவடிக்கையாக இருக்கிறது.

ஜிகா வைரஸ் கர்ப்பிணி பெண்களைத் தாக்கினால், குழந்தைகளையும் பாதித்து, குறைபாடுகளை ஏற்படுத்துகிறது. அதனால் கொலம்பியா, ஈக்வடார், எல் சல்வடார் போன்ற அரசாங்கங்கள் கர்ப்பத்தை தள்ளிப் போடச் சொல்லியிருக்கின்றன. அதையும் மீறி கர்ப்பமாகும் பெண்களுக்கு, மெகடோஸ் பாதுகாப்பு வழங்குவதற்காகவே இந்த ஆடைகளைத் தயாரித்து இருக்கிறது என்கிறார்கள் இதன் உரிமையாளர்கள். சிட்ரோனெல்லாவை நேரடியாக உடலில் தடவினால் 20 முதல் 30 நிமிடங்கள்தான் தாக்குப் பிடிக்கும். அதை 4 மணி நேரம் வரை நீட்டிக்கும்படி இப்போது உருவாக்கி இருக்கிறார்கள்.

அந்த நுட்பத்தை ஆடைகளுக்கு ஏற்றவாறு பயன்படுத்திக்கொண்டனர். சாதாரண ஆடைகளைவிட இந்த ஆடைகள் 10 முதல் 12 சதவீதம் விலை அதிகம். 20 முதல் 30 தடவைகள் துவைக்கும் வரை இது வேலை செய்யும். பிறகு புது துணிதான் வாங்க வேண்டும். ஆனால் இந்த ஆடைகள் விஞ்ஞான ரீதியில் பரிசோதிக்கப்பட்டதாக தெரியவில்லை, உண்மையிலேயே ஜிகா வைரஸில் இருந்து காப்பாற்றுகிறதா என்றும் தெரியவில்லை. ஆனால் பயத்தில் இருக்கும் மக்கள் பயன்படுத்த ஆரம்பித்துவிட்டனர்.

உண்மையிலேயே காப்பாற்றினால் சந்தோஷம்தான்…

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x