Published : 15 Nov 2016 10:49 AM
Last Updated : 15 Nov 2016 10:49 AM

உலக மசாலா: சிலைகளின் சரணாலயம்!

ஹாங்காங் மக்கள் தங்கள் வீடுகளில் உள்ள தெய்வச் சிலைகள் உடைந்து போனால், அவற்றைக் குப்பையில் வீசாமல் சாலை ஓரங்களில் வைத்து விடுகின்றனர். தேவையானவர்கள் அவற்றைத் தங்கள் வீடுகளுக்கு எடுத்துச் சென்றுவிடுவார்கள்.

85 வயது வோங் விங் பாங், சாலை ஓரங்களில் இருக்கும் உடைந்த புத்தர், டாவோ, ஏசு மற்றும் உள்ளூர் தெய்வங்களின் சிலைகளை எல்லாம் எடுத்து வந்து, ஓரிடத்தில் சேகரித்து வந்தார். இன்று உடைந்த சிலைகள் எல்லாம் சேர்ந்து அழகிய சிலைகள் சரணாலயமாக மாறிவிட்டது.

“நான் ஓய்வு பெற்ற பிறகு, பொழுதுபோக்குக்காக உடைந்த சிலைகளைச் சேகரிக்க ஆரம்பித்தேன். சிறிது காலத்தில் சிலைகளைச் சேகரிப்பதே என் முக்கியமான வேலையாக மாறிவிட்டது. இப்போதெல்லாம் வீடுகள், கடைகள், உணவகங்கள் புதுப்பிக்கப்படும்போது, சிலைகளைச் சரணாலயத்தில் வைத்துவிடுகின்றனர். ஒவ்வொரு மாதமும் ஏராளமான சிலைகள் வந்துகொண்டே இருக்கின்றன. சிலையைச் சுத்தம் செய்து, உடைந்ததைச் சரி செய்து, காட்சிக்கு வைத்து விடுவேன். 17 ஆண்டுகளில் பல்லாயிரக்கணக்கான சிலைகள் சேர்ந்துவிட்டன. இந்த வயதிலும் நான் நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பதற்கு இங்குள்ள தெய்வச் சிலைகள்தான் காரணம் என்று நம்புகிறேன்” என்கிறார் வோங் விங் பாங்.

சிலைகளின் சரணாலயம்!

இங்கிலாந்தில் வசித்த ஜுலியாவுக்கும் காரெத் ஷோனுக்கும் வாழ்க்கை மிகவும் சலிப்பாக இருந்தது. வித்தியாசமாக வாழ வேண்டும் என்று முடிவு செய்தனர்.

ஹங்கேரியில் ஒரு பழைய வீட்டை வாங்கி, மாரமத்துப் பணிகளைச் செய்தனர். அத்தியாவசியமான பொருட்களை மட்டும் வீட்டில் வைத்துக்கொண்டனர். தங்களுக்கான காய்கறிகள், கீரைகள், பழங்களை வீட்டுத் தோட்டத்தில் இருந்து பெற்றுக்கொள்கின்றனர். வீட்டிலேயே கோழிகள், வாத்துகள், முயல்களை வளர்ப்பதால் முட்டை, இறைச்சியையும் வெளியில் வாங்குவதில்லை. சூரிய சக்தியில் இருந்து மின்சாரம் பெற்றுக்கொள்கின்றனர்.

தோட்டத்தில் இருக்கும் மரங்களை வைத்து, விறகு அடுப்பில் சமையல் செய்துகொள்கிறார்கள். மிகக் குறைவான செலவில் மகிழ்ச்சியாக வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்.

“நான் தென் ஆப்பிரிக்காவில் பிறந்தவள். மிக வசதியான குடும்பம். ஆனால் அந்த வாழ்க்கை பிடிக்காமல், இங்கிலாந்து வந்தேன். முடி அலங்காரம் செய்யும் வேலையைப் பார்த்தேன். அப்போதுதான் காரெத் ஷோனைச் சந்தித்தேன். இருவரும் திருமணம் செய்துகொண்டோம். ஆனாலும் வாழ்வில் சுவாரசியம் குறைவதாகத் தோன்றியது. இந்த வாழ்க்கை வேண்டாம் என்று முடிவு செய்தபோது, பலரும் எங்களைப் பைத்தியம் என்றார்கள். எதைப் பற்றியும் கவலைப்படவில்லை. எங்களுக்கு விருப்பமான வாழ்க்கையை நாங்கள் அமைத்துக்கொண்டோம். உணவுப் பொருட்களை நாங்களே விளைவித்துக்கொள்கிறோம். இணைந்து உழைக்கிறோம். மிகக் குறைவான பணமே எங்கள் வாழ்க்கைக்குத் தேவையாக இருக்கிறது. இந்த எளிய வாழ்க்கையில் அளவிட முடியாத சந்தோஷம் கிடைத்திருக்கிறது” என்கிறார் ஜுலியா.

எளிமையே நிறைவு!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x