Published : 24 Apr 2015 11:13 AM
Last Updated : 24 Apr 2015 11:13 AM

உலக மசாலா: சிறைச்சாலை புத்தகம்!

அமெரிக்காவில் உள்ள பிலடெல்பியாவில் 1896-ம் ஆண்டு முதல் ஒரு சிறைச்சாலை இயங்கி வந்தது. இங்கிருந்த சிறைக் கைதிகளிடம் மருத்துவம், தோல், உயிர் வேதியியல் ஆராய்ச்சிகள் நடத்தப்பட்டு வந்தன. இது பெரிய சர்ச்சையாகி, 1995-ம் ஆண்டு இந்தச் சிறைச்சாலையை மூடிவிட்டனர். 20 ஆண்டுகளுக்குப் பிறகு, மாத்யு கிறிஸ்டோபர் என்ற புகைப்படக்காரர் சிறைச்சாலைக்குச் சென்றார்.

1970-ம் ஆண்டில் சிறைக்குள் நடைபெற்ற கலகங்கள், பாலியல் வன்முறைகள், கொலைகள் போன்றவற்றைச் சுவர்களில் எழுதப்பட்டுள்ள அறிக்கைகளிலிருந்து அறிந்துகொள்ள முடிந்தது என்கிறார் மாத்யு. ’கைவிடப்பட்ட அமெரிக்காவும் அதன் விளைவுகளும்’ என்ற தலைப்பில் வெளிவர இருக்கும் புத்தகத்தில், இந்தச் சிறைச்சாலைப் புகைப்படங்கள் இடம்பெற இருக்கின்றன.

சிறைக்கூடங்கள் முற்றிலும் வேறுபட்ட ஓர் உலகமாக இருக்கின்றன. சுண்ணாம்பு இழந்த சுவர்களும் துருப்பிடித்த கதவுகளும் அழியாத கரும்பலகைகளும் அலங்கோலமான படுக்கைகளும் திகிலூட்டும் வரலாற்றைச் சொல்லிக்கொண்டிருக்கின்றன என்கிறார் மாத்யு.

ஒரு சமூகத்தின் நாகரீகத்தை அதன் சிறைச்சாலைகளுக்குள் சென்றால்தான் கணிக்க முடியும் என்றார் தஸ்தாயெவ்ஸ்கி… எத்தனை உண்மை!

கைலி ஜென்னர் அமெரிக்காவின் புகழ்பெற்ற மாடல். அவரது உதடுகளைப் போல, தங்களது உதடுகளையும் அளவுக்கு அதிகமாக பெரிதாக்கிக் காட்டுவதுதான் கைலி ஜென்னர் சேலஞ். நன்றாக இருக்கும் உதடுகளை வித்தியாசமாகக் காட்டிக்கொள்வதில் ஆண்களும் பெண்களும் ஆர்வம் காட்டி வருகிறார்கள். ஒரு தம்ளர் அல்லது வாய் அகன்ற பாட்டிலை எடுத்துக்கொண்டு, வாயை அதற்குள் விட வேண்டும். பிறகு தம்ளருக்குள் இருக்கும் காற்றை வாயால் இழுக்க வேண்டும். இப்பொழுது தம்ளர் வாயுடன் ஒட்டிக்கொள்ளும்.

சிறிது நேரத்துக்குப் பிறகு தம்ளரை பிடித்து இழுக்க வேண்டும். அவ்வளவு எளிதில் தம்ளர் வாயை விட்டு வராது. நீண்ட முயற்சிக்குப் பிறகு, மிகுந்த வலியோடு தம்ளர் வெளியே வரும். சாதாரண உதடு பெரியதாக வீங்கியிருக்கும். சிலருக்குச் சில மணி நேரங்கள் வரை இந்த வீக்கம் அப்படியே இருக்கும்.

ஒரு சிலருக்கு ஒரு நாள் முழுவதும் கூட உதடு வீங்கியே இருக்கும். மீண்டும் உதடு வீங்க வேண்டும் என்றால் மறுபடியும் தம்ளருக்குள் வாயை விட வேண்டும். வலி மிகுந்த இந்தச் சவாலை இளம் ஆண்களும் பெண்களும் விரும்பிச் செய்துகொள்கிறார்கள் என்பதுதான் ஆச்சரியம். கைலி ஜென்னர் இதுபோன்ற முயற்சிகளைக் கைவிடும்படிக் கேட்டுக்கொண்டார். ஆனால் அதனை கேட்கத்தான் யாரும் தயாராக இல்லை.

சே! என்ன ரசனையோ… என்ன ஆர்வமோ…

சீனாவில் வசிக்கிறார் 66 வயது ஸி ஹூவோ. இவர் சைக்கிளில் பல நாடுகளைச் சுற்றி வருகிறார். 1993ம் ஆண்டு சைக்கிள் பயணத்தை ஆரம்பித்தார். சீனாவின் அனைத்துப் பகுதிகளுக்கும் சைக்கிளில் சென்று திரும்பியிருக்கிறார். 11 ஐரோப்பிய நாடுகளையும் சைக்கிள் மூலமே சுற்றி வந்திருக்கிறார்.

இதுவரை 1,80,000 கிலோமீட்டர்களைக் கடந்திருக்கிறார். இந்த ஆண்டு 67 நாட்கள் பயணமாக வியட்நாம், கம்போடியா, லாவோஸ், தாய்லாந்து, மலேசியா நாடுகளுக்குச் சென்று திரும்பியிருக்கிறார். ஒருமுறை விபத்து ஏற்பட்டு, 30 செ.மீ. நீளத்துக்கு இரும்புக் கம்பி இடுப்பில் பொருத்தப்பட்டிருக்கிறது. ஆனாலும் சைக்கிள் பயணத்தை ஸி கைவிடவில்லை.

அடடா! உதாரண மனிதர்!

சீனாவின் ஷென்ஸென் விமான நிலையத்தில் ஒரு பெண் மிகவும் பதற்றமாக இருந்தார். சுங்க அதிகாரிகள் சந்தேகத்துடன் அவரது பையை வாங்கிப் பரிசோதித்தனர். ஆனால் அதில் ஒன்றுமே இல்லை. ஆனாலும் அந்தப் பெண்ணிடம் பதற்றம் தணியவில்லை. தன் ஆடையை இறுக்கிப் பிடித்தபடி ஒன்றும் இல்லை என்று கூறிக்கொண்டே இருந்தார்.

அவரை அழைத்து தனியாகப் பரிசோதித்தபோது, உடல் முழுவதும் ஒன்றரை கோடி ரூபாய் மதிப்புள்ள யுவான் கரன்ஸியை மறைத்து வைத்திருந்தார். சட்டவிரோதமாக கரன்ஸியை மாற்றும் வேலையைச் செய்து வருவது தெரிந்தது. கடந்த 15 நாட்களில் மட்டும் 90 தடவை ஹாங்காங் எல்லையைக் கடந்து சென்றிருக்கிறார். இந்த ஏப்ரலில் மட்டும் மிக அதிக அளவில் கரன்ஸி பரிமாற்றம் நடந்திருப்பதாக சங்க அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள்.

பல நாள் திருடர் ஒருநாள் அகப்பட்டுட்டார்…

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x