Published : 12 Jan 2017 10:14 AM
Last Updated : 12 Jan 2017 10:14 AM

உலக மசாலா: சிறிய நகரில் பிரம்மாண்டமான பொருட்கள்!

அமெரிக்காவின் இல்லினாய்ஸ் மாகாணத்தின் மிகச் சிறிய நகரம் கேசீ. இங்கே 3 ஆயிரத்துக்கும் குறைவான மக்களே வசித்து வருகிறார்கள். ஆனால் இங்கேதான் உலகிலேயே மிகப் பெரிய பொருட்கள் எல்லாம் இருக்கின்றன. காற்றில் ஆடும் மணிகள், சாய்வு நாற்காலி, ஊசி நூல், தபால் பெட்டி, ஒரு ஜோடி ஷூ, நாணயம், அளவுகோல், பென்சில், முள்கரண்டி, சோளம், கள்ளி என்று ஏராளமான பொருட்கள் பிரம்மாண்டமான அளவுகளில் நகர் முழுவதும் வைக்கப்பட்டிருக்கின்றன. இவற்றில் 8 பொருட்கள் கின்னஸ் சாதனையில் இடம்பெற்றுள்ளன. இந்தப் பொருட்களை உருவாக்கியவர் தொழிலதிபர் ஜிம் போலின். போலின் எண்டர்பிரைசஸ் நிறுவனத்தின் துணைத்தலைவரான இவர், ஆரம்பத்தில் சிறிய பெயிண்ட் கடையை வைத்திருந்தார். படிப்படியாக உயர்ந்து இன்று இவரது நிறுவனத்தில் 240 பேர் வேலை செய்கிறார்கள். இதுதவிர பல்வேறு கடைகளும் ஆரம்பித்தார். பொருளாதார நெருக்கடி ஏற்பட்டபோது, அதிலிருந்து தப்பிப்பதற்காகச் சுற்றுலாவை மேம்படுத்த முடிவெடுத்தார். சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் வந்தால் உள்ளூர் பொருளாதாரம் மேம்படும் என்று நினைத்தார். இரண்டு ஆண்டுகள் திட்டமிட்டு, 2011-ம் ஆண்டு 54 அடி உயரமுள்ள ராட்சத மணியை உருவாக்கினார். அதிலிருந்து வரிசையாகப் பிரம்மாண்டமான பொருட்களை அமைத்து வருகிறார். கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற வேண்டும் என்றால் அந்தப் பொருட்கள் வேலை செய்யவேண்டும். அதனால் 8 பொருட்கள் மட்டுமே கின்னஸ் சாதனை படைத்தன. போலின் நினைத்தது போலவே இந்த ராட்சத பொருட்கள் பொருளாதாரத்தையும் மேம்படுத்தின. ராட்சத ஷூக்களுக்கு அருகே இருக்கும் ஷூ கடையில் தினமும் வியாபாரம் அமோகமாக நடைபெறுகிறது. சுற்றுலாப் பயணிகள் தபால் நிலையத்தில் கடிதங்களை வாங்கி, பிரம்மாண்டமான தபால் பெட்டிக்குள் போடுகிறார்கள். இன்னும் போலின் ஆர்வம் குறையவில்லை. விரைவில் குதிரை, சுத்தியல், மட்டை பந்து போன்றவற்றை உருவாக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறார்.

சிறிய நகரில் பிரம்மாண்டமான பொருட்கள்!

சிங்கப்பூரின் சாங்கி விமான நிலையத்தில் 50 வயது பெண்மணி ஒருவர், கடந்த 8 ஆண்டுகளாக வசித்து வருகிறார். இவருக்கு 3 படுக்கையறைகள் கொண்ட ஒரு குடியிருப்பு இருக்கிறது. அதை வாடகைக்கு விட்டுவிட்டு, விமான நிலையத்தில் தங்கி இருக்கிறார். “2008-ம் ஆண்டு உலகம் முழுவதும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. அதில் நான் நிலைகுலைந்து போனேன். எனக்கு வேலையோ, வேறு வருமானமோ கிடையாது. அதனால் இருக்கும் வீட்டை 68 ஆயிரம் ரூபாய்க்கு வாடகைக்கு விட்டுவிட்டு, விமான நிலையத்துக்கு குடிவந்துவிட்டேன். சில இரவுகள் மட்டும் தங்கும் எண்ணத்தில்தான் வந்தேன். கையில் எந்தப் பொருளும் கிடையாது. நாட்கள் செல்லச் செல்ல இந்த இடமே பிடித்துவிட்டது. வாடகையை வைத்து உணவு, உடைகளை வாங்கிக்கொள்கிறேன். 24 மணி நேரமும் குளிர்சாதன வசதி, இணைய இணைப்பு இருக்கிறது. அதனால் பொழுதும் போய்விடுகிறது. இப்பொழுது என்னைப் பற்றி பத்திரிகைகளுக்குத் தெரிய ஆரம்பித்துவிட்டது. அதனால் என்னுடைய வீட்டை விற்று, அந்தப் பணத்தில் சிறிய வீட்டை வாங்கிக்கொண்டு சென்றுவிட முடிவு செய்துவிட்டேன். என் பெயரையோ, புகைப்படத்தையோ வெளியிட வேண்டாம்” என்று கேட்டுக்கொண்டிருக்கிறார் அந்தப் பெண்மணி.

விமான நிலையத்தில் குடியிருந்த பெண்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x