Published : 04 Mar 2016 09:49 AM
Last Updated : 04 Mar 2016 09:49 AM

உலக மசாலா: சிங்கம், புலி, கரடி கூட்டம்!

ஜார்ஜியாவில் உள்ள வனவிலங்குகள் பூங்காவில் மூன்று நண்பர்கள் மிகவும் அன்புடன் பழகி வருகிறார்கள். சிங்கம், புலி, கரடி மூன்றும் குட்டிகளாக இருந்தபோதே நோவா ஆர்க் விலங்குகள் பாதுகாப்பு மையத்துக்கு வந்துவிட்டன. அன்றுமுதல் இன்றுவரை 15 ஆண்டுகள் நட்புடன் பழகி வருகின்றன. குட்டிகளாக இருந்தபோது மூன்றும் உடல் நலம் பாதிக்கப்பட்டும் ஊட்டச் சத்துக் குறைபாட்டுடனும் இருந்தன.

இதில் மோசமாகப் பாதிக்கப்பட்ட கரடி குட்டியை மட்டும் தனியே அழைத்துச் சென்று சிகிச்சை அளிக்கப்பட்டது. அப்போது மூன்று குட்டிகளும் பிரிவைத் தாங்க முடியாமல் தவித்தன. அதன் பிறகு மூன்றும் ஒருநாள் கூட பிரிந்திருக்கவில்லை. ஒன்றாகச் சாப்பிடுவது, ஒன்றாக ஓய்வெடுப்பது, ஒன்றாக விளையாடுவது என்று மகிழ்ச்சியாகத் தங்கள் வாழ்நாட்களைக் கழித்து வருகின்றன.

’’மூன்று விலங்குகளும் ஒரே அளவுக்கு அன்பைச் செலுத்தி வருவதை நினைக்கும்போது எங்களால் ஆச்சரியப்படாமல் இருக்க முடியவில்லை. ஒருநாள் முழுவதும் இவற்றைக் கவனித்தாலும் கொஞ்சம்கூட அலுக்காது. நமக்குள்ளும் அன்பு பெருகிவிடும்’’ என்கிறார் நோவா மையத்தின் காப்பாளர் ஆலிசன் ஹெட்ஜ்கோத்.

அடடா! மூன்றும் ஒரே இடத்தில் இருக்கும் காட்சியே அற்புதமாக இருக்கிறது!

உலகிலேயே முதன் முறையாக காலாவதியான உணவுப் பொருட்களுக்கான சூப்பர் மார்க்கெட் டென்மார்க்கில் ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது. உணவுப் பொருட்கள் வீணாவதைத் தடுக்கும் நோக்கில் இந்த சூப்பர் மார்க்கெட் உருவாக்கப்பட்டிருக்கிறது.

இதில் தேதி காலாவதியான உணவுப் பொருட்களும் சேதமடைந்த உணவுப் பொருட்களும் விற்பனை செய்யப்படுகின்றன. ‘விஃபுட்’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த சூப்பர் மார்க்கெட்டில் பொருட்களை வாங்குவதற்காக நீண்ட வரிசையில் மக்கள் காத்திருக்கிறார்கள். காலாவதியான பொருட்கள் என்றால் கெட்டுப் போன பொருட்கள் அல்ல. சாதாரணமாக விற்கப்படும் பொருட்களின் விலையிலிருந்து 30 முதல் 50 சதவிகிதம் குறைவாக இருக்கும்.

’’வருமானம் குறைவானவர்களுக்காக இயங்கும் சூப்பர் மார்க்கெட் இல்லை இது. உணவுப் பொருட்கள் வீணாவதைத் தடுக்கும் நோக்கத்தில் உருவாக்கப்பட்டது. டென்மார்க் இளவரசி மேரி, முன்னாள் உணவு மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சர் போன்றோர் திறப்பு விழாவில் கலந்துகொண்டனர். இன்று உலகம் முழுவதும் உணவுப் பொருட்கள் வீணாவதைத் தடுக்க வேண்டும் என்ற எண்ணம் வந்திருக்கிறது. அதற்கு இதுபோன்ற செயல்கள் உதவி புரியும்’’ என்கிறார் இதன் தலைவர் பெர் ப்ஜெர்.

ஒவ்வோர் ஆண்டும் 7 லட்சம் டன் உணவுப் பொருட்கள் டென்மார்க்கில் மட்டும் வீணாகிறது. உலகம் முழுவதும் 130 கோடி டன் உணவுப் பொருட்கள் வீணாகின்றன. 795 கோடி மக்கள் உணவின்றி, ஊட்டச்சத்து குறைபாட்டுடன் வாழ்கின்றார்கள். கடந்த 5 ஆண்டுகளில் உணவு வீணாவதைப் பல வழிகளில் டென்மார்க் தடுத்து வருகிறது. இதன் மூலம் 25 சதவீத உணவுப் பொருட்கள் வீணாவது தடுக்கப்பட்டிருக்கிறது.

வெல்டன் டென்மார்க்!



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x