Published : 05 Mar 2016 11:02 AM
Last Updated : 05 Mar 2016 11:02 AM

உலக மசாலா: சிங்கங்களின் நண்பன்!

தென்னாப்பிரிக்காவில் ரிச்சர்ட்சன் வனவிலங்கு சரணாலயத்தில் சிங்கங்கள் வளர்க்கப்படுகின்றன. சிங்கங்களுக்கும் கெவின் ரிச்சர்ட்சனுக்கும் மிகச் சிறப்பான புரிதல் இருக்கிறது. கெவினுடன் சிங்கங்கள் விளையாடுகின்றன, சண்டை போடுகின்றன. அவர் தலையோடு தலை வைத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்துகின்றன.

ஒரு கார் விளம்பரத்துக்காக புகைப்படக்காரர் அட்ரியன் ஸ்டெர்ன் சரணாலயம் சென்றார். கெவினுக்கும் சிங்கங்களுக்கும் இடையே இருக்கும் நட்பையும் புரிதலையும் கண்டு ஆச்சரியமடைந்துவிட்டார். ‘‘பூனைக் குடும்பத்தின் மிகப் பெரிய உயிரினம் சிங்கம். சிங்கங்களால் மனிதர்களுடன் இவ்வளவு இயல்பாகவும் அன்பாகவும் பழக முடியும் என்பதை என்னால் நம்பவே முடியவில்லை.

இந்தப் புகைப்படங்கள் சிங்கங்கள் பாதுகாப்பு பற்றி சிறந்த விழிப்புணர்வை ஏற்படுத்தும். 20 ஆண்டுகளாக நான் புகைப்படங்கள் எடுத்து வருகிறேன். இந்த 2 நாட்கள் அனுபவம் அசாதாரணமானது’’ என்கிறார் அட்ரியன். ‘‘சிங்கங்களிடம் எப்படிப் பழக வேண்டும் என்று தெரிந்துகொண்டால் போதும். அவை நம்மை நட்புடன் நடத்தும். சிங்கங்களிடம் நாம் செய்யும் ஒரு தவறுகூட நமக்கு ஆபத்தாக அமைந்துவிடலாம். அதனால் கவனமாக இருப்பது முக்கியம். நான் இந்தச் சரணாலயத்திலேயே வீடு கட்டி தங்கியிருக்கிறேன். சிங்கங்களின் ஒவ்வொரு அசைவுக்கும் எனக்குக் காரணம் தெரியும்’’ என்கிறார் கெவின்.

உங்க தைரியத்தை நினைத்தால் சிலிர்ப்பாக இருக்கிறது கெவின்!

தங்கள் குழந்தைகளுக்குப் போதைப் பொருள் பழக்கம் இருப்பதாகச் சந்தேகிக்கும் அமெரிக்கப் பெற்றோர், அதைக் கண்டுபிடிப்பதற்கு ஒரு வழியை நாடுகிறார்கள். இவர்களுக்குத் தனியார் கே9 சேவையில் உள்ள மோப்ப நாய்கள் உதவுகின்றன. மோப்ப நாய் வீட்டுக்குள் நுழைந்து படுக்கை அறை, குளியலறை, படிக்கும் அறை, கார் என்று சகல இடங்களையும் மோப்பம் பிடிக்கிறது. ஹெராயின், கோகெய்ன் முதல் அனைத்துப் போதைப் பொருட்களையும் நுகர்ந்து பார்த்தே கண்டுபிடித்துவிடுகிறது. மைகேல் டேவிஸ் என்பவர் ‘தி லாஸ்ட் சான்ஸ்’ என்ற பெயரில் போதைப் பொருள் கண்டுபிடிக்கும் நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்த நிறுவனத்தின் முக்கிய நோக்கம் இளைஞர்களின் போதைப் பொருள் பழக்கத்தைக் கண்டுபிடிப்பதுதான்.

‘‘ஒரு சிறுவன் சாக்ஸுக்குள் 4 கிராம் ஹெராயினை ஒளித்து வைத்திருந்தான். இன்னொருவன் தன் 5 வயது தம்பியின் உணவு டப்பாவுக்குள் போதைப் பொருளை ஒளித்து வைத்திருந்தான். ஆண்களைவிட பெண்கள் மிகத் திறமையாக போதைப் பொருட்களை ஒளித்து வைக்கிறார்கள். போதைப் பொருட்களால் இளைஞர்கள் எதிர்காலம் சீரழிவதையும் பெற்றோர் துன்பப்படுவதையும் பார்த்து, நான் இந்த வேலையைக் கையில் எடுத்துக்கொண்டேன். போதைப் பொருட்களைக் கண்டுபிடித்து, அவர்களை அதிலிருந்து மீட்பதுதான் எங்கள் நோக்கம். எதிர்காலத் தலைமுறையைக் காப்பாற்றும் இந்த வேலை எனக்கு மன நிறைவாக இருக்கிறது’’ என்கிறார் மைக்கேல் டேவிஸ்.

உங்க சேவை தொடரட்டும் மைக்கேல்…



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x