Published : 04 Apr 2017 10:03 AM
Last Updated : 04 Apr 2017 10:03 AM

உலக மசாலா: சாதனை மேல் சாதனை

அமெரிக்காவைச் சேர்ந்த 57 வயது பெகி விட்சன், எட்டாவது முறையாக விண் வெளி ஆய்வு மையத்தில் நடந்தார். இதன் மூலம் விண் வெளிநடை மேற்கொண்ட வயதான பெண்மணி என்ற சாதனையையும் அதிக முறை விண்வெளியில் நடந்த பெண் என்ற சாதனையையும் நிகழ்த்தியிருக்கிறார். விண் வெளி நிலையத்தில் பழுதைச் சரி செய்வதற்காக 7 மணி நேரம் விண்வெளி நடை மேற்கொண்டார். இதுவரை 53 மணி நேரங்கள் 22 நிமிடங்கள் விண்வெளி நடை மேற்கொண்டிருக்கிறார். அதிகமான நேரம் விண்வெளி நடை மேற்கொண்டவர்களில் அவர் ஐந்தாவது இடத்திலிருக்கிறார். 2007-ம் ஆண்டு முதல் பெண் கமாண்டராக விண்வெளிக்குச் சென்று வரலாற்றில் முத்திரைப் பதித்திருந்தார். அமெரிக்க விண்வெளி வீரர் ஜெஃப் வில்லியம்ஸ் மொத்தம் 534 நாட்கள் விண்வெளியில் தங்கியிருந்ததுதான் இதுவரை சாதனையாக இருந்துவருகிறது. இந்த விண்வெளிப் பயணத்தின் மூலம் 500 நாட்களுக்கு மேல் தங்கியிருக்கும் பெகி விட்சன், ஜூன் மாதம் பூமிக்குத் திரும்பும் பொழுது அதிக நாட்கள் விண்வெளியில் தங்கியிருந்த விண்வெளி வீரர் என்ற சாதனையையும் படைக்க இருக்கிறார்! கடந்த பிப்ரவரி மாதம் தன்னுடைய 57-வது பிறந்த நாளை விண்வெளியில் கொண்டாடிய அவர், நாசாவின் லட்சியங்களில் ஒன்றான செவ்வாய் கிரகத்துக்கு மனிதர்கள் அனுப்பும் திட்டத்தை தன் வாழ்நாளுக்குள் பார்த்துவிட வேண்டும் என்று விரும்புகிறார்.

சாதனை மேல் சாதனை செய்துவரும் பெகி விட்சனுக்கு மலர்க்கொத்து!

இங்கிலாந்தைச் சேர்ந்த ஸ்காட் சஃபியனும் சிண்டியும் 20 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டனர். அரிய மரபணுக் குறைபாட்டால் சிண்டியின் இரு சிறுநீரகங்களும் பாதிக்கப்பட்டன. மாற்றுச் சிறுநீரகம் பொருத்தாவிட்டால் அவரைக் காப்பாற்ற இயலாது. ஒரு சிறுநீரகத்தால் வாழ்ந்துவிட முடியும் என்பதால் தன்னுடைய இன்னொரு சிறுநீரகத்தை மனைவிக்குத் திருமண நாள் பரிசாகக் கொடுத்துவிட்டார் ஸ்காட் சஃபியன். மருத்துவர்களின் பரிசோதனையில் அவரின் சிறுநீரகம் நூறு சதவீதம் சிண்டிக்குப் பொருத்தமாக இருந்ததால், அறுவை சிகிச்சை செய்வதில் பிரச்சினைகள் வரவில்லை. அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்ததை அடுத்து, தங்களின் இருபதாவது திருமண நாளை இருவரும் முன்கூட்டியே மருத்துவமனையில் கொண்டாடினார்கள். “ஆறு ஆண்டுகளுக்கு முன்பே எனக்குப் பிரச்சினை வந்துவிட்டது. அப்போதே தன்னுடைய சிறுநீரகத்தைத் தருவதாகச் சொன்னார் ஸ்காட். என்னால் அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. வீட்டிலேயே டயாலிசிஸ் செய்துகொண்டிருந்தேன். சமீபத்தில் உடல்நிலை மிகவும் மோசமாகிவிட்டது. மாற்றுச் சிறுநீரகம் பொருத்துவதைத் தவிர வேறு வழியில்லை என்ற சூழலில் கணவரின் தானத்தை ஏற்றுக்கொண்டேன். அவரின் இந்தச் செயலுக்கு என்னால் எதையும் ஈடு செய்ய முடியாது” என்கிறார் சிண்டி. “அன்புக்குரியவர்கள் கஷ்டப்பட்டால் நம்மால் தாங்கிக்கொள்ள இயலாது. அதிலும் சிண்டி என் மனைவி. அவருக்கு இதைக் கூடச் செய்யாமல் எப்படி இருக்க முடியும்? மனைவிக்குத் தானம் கொடுத்தது அவ்வளவு பெரிய விஷயம் இல்லை” என்கிறார் ஸ்காட் சஃபியன்.

மனைவிக்குச் சிறுநீரகம் கொடுத்த கணவருக்குப் பாராட்டுகள்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x