Published : 18 Mar 2016 10:33 AM
Last Updated : 18 Mar 2016 10:33 AM

உலக மசாலா: சக்கர நாற்காலியில் நாட்டைச் சுற்றி வரும் சாகச மனிதர்!

பெரும்பாலான மக்கள் சக்கர நாற்காலி என்றால் குறைபாட்டின் அடையாளமாகக் கருதுகிறார்கள். ஆனால் அதைத் தன்னம்பிக்கையின் அடையாளமாக நிரூபித்திருக்கிறார் சீனாவைச் சேர்ந்த 29 வயது க்வான் பெங் பேகன். கடந்த 2 ஆண்டுகளாகச் சக்கர நாற்காலியில் சீனாவைச் சுற்றி வந்து, தன்னுடைய நீண்ட கால லட்சியத்தை நிறைவேற்றியிருக்கிறார். 2014-ம் ஆண்டு, ஆகஸ்ட் 31 அன்று பெய்ஜிங்கில் தன் பயணத்தை ஆரம்பித்தார். 566 நாட்களில் ஃபுஸோவ் நகரத்தை வந்தடைந்தார். 2,800 கி.மீ. தூரத்தைக் கடந்திருக்கிறார். இத்துடன் அவர் பயணம் நிறைவடையவில்லை.

இன்னும் 1,700 கி.மீ. தூரம் செல்ல திட்டமிட்டிருக்கிறார். ’’என் 17வது வயதில் முதுகுத்தண்டில் ஒரு கட்டி அகற்றப்பட்டபோது, என் கால்களின் இயக்கம் முடங்கிப் போனது. ஆரம்பத்தில் இது என்னை மிகவும் பாதித்தது. ஆனால் விரைவில் என்னை மாற்றிக்கொண்டேன். சக்கர நாற்காலியைக் கைகளால் இயக்கும்போது ஆரம்பத்தில் தோள்பட்டைகளில் வலி உயிர் போகும் அளவுக்கு இருக்கும். அதற்காக நான் விட்டுவிடவில்லை. கொஞ்சம் கொஞ்சமாக வேகத்தையும் தூரத்தையும் அதிகரித்து, என்னைத் தயார் செய்துகொண்டேன். இன்று சக்கர நாற்காலியில் நீண்ட நெடும் பயணம் செய்தவன் என்ற சாதனையை நிகழ்த்தியிருக்கிறேன். இந்தப் பயணத்தில் 6 முறை சக்கர நாற்காலி கவிழ்ந்துவிட்டது.

500 கி.மீ. தூரம் கடந்ததற்குப் பிறகு என் பயணம் ஜாலியாகவும் அற்புதமாகவும் மாறியது. அதற்கு காரணம் ஆங்காங்கே எனக்குக் கிடைத்த நல்ல நண்பர்கள்தான். என் பயணத்தில் விரும்பத்தகாத விஷயங்களும் நடந்திருக்கின்றன. உடல் குறைபாடு உடையவர்களுக்கு ஏற்ற வசதிகள் பெரும்பாலும் இல்லாததுதான் வருத்தமாக இருக்கிறது. உங்கள் கனவுகளை நிஜமாக்குவதற்கோ, உங்கள் லட்சியங்களை அடைவதற்கோ நிச்சயம் சக்கர நாற்காலி ஒரு தடையாக இல்லை என்பதைத்தான் நான் செல்லும் இடங்களில் எல்லாம் நிரூபித்து வருகிறேன்.

சக்கர நாற்காலியில் நாட்டைச் சுற்றி வரும் சாகச மனிதர்!

டுகாங் என்பது கடலில் வாழும் அரிய பாலூட்டி. கடல் பசுவைப் போலத் தோற்றம் கொண்டது. இந்தோனேஷியாவில் இரண்டு டுகாங்குகளைப் பிடித்து, கடலுக்கு அடியே கூண்டுக்குள் அடைத்து வைத்திருந்தார்கள். சுற்றுலாப் பயணிகளைக் கவரவே இந்தச் செயலைச் செய்திருக்கிறார்கள். நீச்சல் வீரர்கள் சிலர் இந்தக் காட்சியைக் கண்டு அதிர்ச்சியடைந்துவிட்டனர். வீடியோ எடுத்தனர். ‘’தாயைக் ஒரு கூண்டிலும் குட்டியை ஒரு கூண்டிலும் அடைத்து வைத்திருந்தார்கள்.

இரண்டும் ஒன்றை ஒன்று பார்ப்பதற்காகத் தவித்தன. வால் பகுதியில் சங்கிலி கட்டப்பட்டிருந்ததால், இழுக்கும்போது காயம் ஏற்பட்டிருந்தது. வீடியோவை எடுத்து புகார் அளித்தோம். உள்ளூர் மீனவர்கள் சிலர் இந்தக் காரியத்தைச் செய்திருப்பது தெரியவந்தது. விலங்குகள் நலத்துறையைச் சேர்ந்தவர்கள் விடுவித்திருக்கிறார்கள்’’ என்கிறார் ஒரு நீச்சல் வீரர்.

சே, என்ன மனிதர்கள் இவர்கள்…

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x