Published : 28 Aug 2015 11:05 AM
Last Updated : 28 Aug 2015 11:05 AM

உலக மசாலா: கோழிக் குஞ்சு- சிக் ரன்!

சீனாவின் ஷாண்டோங் மாகாணத்தில் ஒரு பெரிய லாரி கோழிக் குஞ்சுகளை ஏற்றி வந்துகொண்டிருந்தது. திடீரென்று வண்டி கட்டுப்பாட்டை இழந்து, கவிழ்ந்துவிட்டது. லாரியில் இருந்த 10 ஆயிரத்துக்கும் அதிகமான கோழிக் குஞ்சுகள் வெளியே ஓடி வந்தன. அந்தப் பகுதியே மஞ்சள் பந்துகள் உருண்டோடி வருவது போலக் காட்சியளித்தது. அருகில் இருந்த மக்கள் பெட்டிகள், வாளிகள், பைகளில் கோழிக் குஞ்சுகளை அள்ளிச் சென்றனர். லேசான காயம் அடைந்த ஓட்டுனர், கோழிக் குஞ்சுகளைக் காப்பாற்ற வழி தெரியாமல் அப்படியே அமர்ந்துவிட்டார்.

சிக் ரன்!

இங்கிலாந்தில் வசிக்கிறார் 65 வயது பிரையன் பால்ட்வின். 10 ஆண்டுகளுக்கு முன்பு சிறுநீரகத்தில் புற்றுநோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. குணமாக்க முடியாத புற்றுநோய் என்பதால், 6 மாதங்கள் மட்டுமே பிரையன் உயிரோடு இருப்பார் என்று மருத்துவர்கள் கூறிவிட்டனர். பாதிக்கப்பட்ட சிறுநீரகத்தை நீக்கிவிட்டனர். அப்படியும் புற்றுநோய் நுரையீரல் வரை பரவிவிட்டது. உயிரோடு இருக்கக்கூடிய மீதி காலத்தை சந்தோஷமாகக் கழிக்க முடிவு செய்தார் பிரையன். தன்னுடைய சொத்தை விற்றார். தோட்டத்துடன் கூடிய சிறிய வீட்டை வாங்கினார். மீதிப் பணத்தில் ஆடம்பர சுற்றுலாவை மேற்கொள்ளத் திட்டமிட்டார்.

‘‘எனக்குச் சுற்றுலா செல்வதென்றால் மிகவும் பிடிக்கும். ஆனால் என் தொழில் காரணமாக எங்குமே செல்ல முடிந்ததில்லை. புற்றுநோய் எனக்கு அந்த வாய்ப்பை வழங்கியிருக்கிறது. மீதி நாட்களையாவது என் விருப்பப்படி சந்தோஷமாகக் கழிக்க முடிவு செய்தேன். என் விருப்பத்தை மனைவி சூசனும் ஏற்றுக்கொண்டார் தொடர்ந்து மருந்துகளை மட்டும் சாப்பிட்டு வருகிறேன்’’ என்கிறார் பிரையன். இதுவரை 6 ஆடம்பர சுற்றுலாக்களை மேற்கொண்டிருக்கிறார். 10 ஆண்டுகளைக் கடந்த பின்னும் சந்தோஷமாக வாழ்ந்துகொண்டிருக்கிறார் பிரையன்!

பாசிட்டிவ் சிந்தனை காலனையே தள்ளி நிற்க வைத்துவிட்டது

அமெரிக்காவில் தொல்பொருள் ஆராய்ச்சியாளராக இருந்த நான்சி வார்னர், வெற்றிகரமான தொழிலதிபராக வலம் வருகிறார். பியர் மூலம் ஜாம் தயாரித்த முதல் மனிதர் என்ற பெருமையையும் பெற்றிருக்கிறார். உணவு பதப்படுத்தும் வேலையைச் செய்துகொண்டிருந்தபோது, தற்செயலாக இந்தக் கண்டுபிடிப்பை நான்சி நிகழ்த்தினார். அதிலிருந்து பல முறை பியரை வைத்து ஜாம், ஜெல்லி போன்றவற்றை உருவாக்கிப் பார்த்தார். இறுதியில் வெற்றியும் பெற்றுவிட்டார். இன்று வாரத்துக்கு 3 ஆயிரம் பாட்டில்கள் ஜாமையும் ஜெல்லியையும் உற்பத்தி செய்து, விற்பனை செய்து வருகிறார்.

‘‘பழச்சாற்றில் இருந்து ஜாம் செய்வது போலதான் பியரிலிருந்தும் ஜாம் செய்கிறேன். பியரைக் கொதிக்க வைக்கும்போது அதில் இருக்கும் ஆல்கஹால் செயல் இழந்துவிடுகிறது. அதனால் இந்த ஜாமும் ஜெல்லியும் உடலுக்கு எந்தவிதக் கெடுதலையும் ஏற்படுத்துவதில்லை. இது என்னுடைய தனிப்பட்ட கண்டுபிடிப்பு என்று சொல்ல முடியாது. நூறு வருடங்களுக்கு முன்பு வைனில் இருந்து ஜாமும் ஜெல்லியும் தயாரித்திருப்பதாகச் சொல்கிறார்கள். நான் பியரில் இருந்து தயாரித்திருக்கிறேன்’’ என்கிறார் 34 வயது நான்சி. 8 விதச் சுவைகளில் பியர் ஜெல்லி கிடைக்கிறது.

கலக்கறீங்க நான்சி!

அமெரிக்காவின் அர்கன்சாஸ் மாநிலத்தில் டையமண்ட் ஸ்டேட் பார்க் இருக்கிறது. உலகிலேயே பொதுமக்கள் சென்று வரக்கூடிய ஒரே வைரச் சுரங்கம் இதுதான். புதையல் வேட்டையை நிஜ வாழ்க்கையில் அனுபவிக்க நினைப்பவர்கள் இந்தச் சுரங்கத்துக்குச் செல்லலாம். ஒவ்வோர் ஆண்டும் சுமார் 600 வைரக் கற்களை இங்கு வரும் பார்வையாளர்கள் கண்டுபிடித்துக் கொடுக்கிறார்கள்.

1906ம் ஆண்டு ஜான் ஹட்டில்ஸ்டோன் என்ற விவசாயி மூலம் இங்கே வைரங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் அந்த நிலம் அரசாங்கத்துக்கு விற்பனை செய்யப்பட்டது. 1972ம் ஆண்டு முதல் பொதுமக்கள் வந்து செல்லும் விதமாகச் செயல்பட்டு வருகிறது. இதுவரை 19 ஆயிரம் வைரக்கற்கள் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன. இங்கே வரும் குழந்தைகளும் பெரியவர்களும் வைரங்களைத் தேடும் பணியில் பல மணி நேரம் ஈடுபடுகிறார்கள். கண்டெடுத்த வைரங்களின் மதிப்புக்கு ஏற்றவாறு அவர்களுக்குச் சன்மானமும் வழங்கப்படுகிறது.

கண்டுபிடிப்பவர்களுக்கும் கொஞ்சம் வைரம் கொடுத்தால் இந்நேரம் எல்லா வைரங்களும் வெளியே வந்திருக்கும்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x