Published : 21 Jun 2017 10:10 AM
Last Updated : 21 Jun 2017 10:10 AM

உலக மசாலா: கோடீஸ்வரராக மாற்றிய ஓவியம்!

நியுஜெர்சியை சேர்ந்த கார்ல் சபடினோ, மரணப் படுக்கையிலிருந்த தன்னுடைய அத்தையைப் பார்க்க வந்தார். தையல் இயந்திரத்தைத் திறந்து பார் என்றார் அத்தை. தையல் இயந்திரத்துக்குள் ஓர் ஓவியம் மட்டும் இருந்தது. அத்தையின் இளம் வயது ஓவியமாக இருக்கும் என்று நினைத்து, அப்படியே வைத்துவிட்டார். மூன்று நாட்களுக்குப் பிறகு, அத்தை மீண்டும் தையல் இயந்திரத்தை மறக்காதே என்று கூறிவிட்டு, இறந்துபோனார். அந்த ஓவியத்தில் ஏதோ இருக்கிறது என்று அப்போதுதான் கார்லுக்குப் புரிந்தது. அதை நிபுணர்களிடம் காட்டினார். பாப்லோ பிகாசோவின் அரிய ஓவியம். அவரது கையெழுத்தும் அதிலிருந்தது. 10 டாலர்களுக்கு வாங்கப்பட்ட இந்த ஓவியம், இன்று 30 மில்லியன் டாலர்களுக்கு விலை போகும் என்கிறார்கள்.

கோடீஸ்வரராக மாற்றிய ஓவியம்!

தன்னை மொன்டெனெக்ரோ நாட்டின் அரசக் குடும்பத்தைச் சேர்ந்தவர் என்று கூறி வந்த 57 வயது ஸ்டீபன் செர்னாடிக், மோசடி குற்றத்துக்காக கைது செய்யப்பட்டுள்ளார். மொன்டெனெக்ரோவின் இளவரசர் என்றும் தங்கள் குடும்பம் அல்பேனியாவிலும் செர்பியாவிலும் கூட ஒரு காலத்தில் ஆட்சி செய்து வந்தது என்றும் அவர் தெரிவித்திருந்தார். தங்கள் குடும்பம் பல நூற்றாண்டுகளாக எப்படி ஆட்சி செய்து வந்தது, யார் யார் ஆண்டனர் என்ற குறிப்புகள், ஓவியங்கள், புகைப்படங்களை புத்தகமாக போட்டு வைத்திருக்கிறார். பதக்கங்கள், முத்திரைகள், போர்க் கருவிகள் போன்றவற்றையும் தன்னுடைய பங்களாவில் காட்சிப்படுத்தி இருக்கிறார். பல்வேறு நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இவர், அரசக் குடும்பத்தைச் சேர்ந்தவர் என்று சொல்லிக்கொண்டு அதற்குரிய மரியாதை, வசதி, வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார். ஆடம்பர விருந்துகளில் கலந்துகொண்டிருக்கிறார். உலகப் பிரபலங்களுக்கு விருந்தும் விருதும் கொடுத்திருக்கிறார். பமீலா ஆண்டர்சன் கூட இவரிடமிருந்து, ’மொன்டெனக்ரோவின் சிறந்த பெண்மணி’ என்ற விருதைப் பெற்றிருக்கிறார். குறிப்பாக, ஐரோப்பா முழுவதும் சென்று தான் அரசக் குடும்பத்தைச் சேர்ந்தவர் என்று நம்ப வைத்து, அனைத்து வசதிகளையும் அனுபவித்து வந்திருக்கிறார். கடந்த ஆண்டு இத்தாலியில் உள்ள ஆடம்பர விடுதியில் தங்கியிருந்தார். விடுதிக்கான கட்டணத்தை மொன்டெனெக்ரோ தூதரகத்துக்கு அனுப்பிவிடும்படி சொல்லிவிட்டார். ஆனால் தூதரகம் இப்படி ஓர் இளவரசர் தங்கள் நாட்டில் இல்லை என்றும் கட்டணத்தைச் செலுத்த முடியாது என்றும் தெரிவித்துவிட்டது. இதையடுத்து, கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் ரகசிய விசாரணை தொடங்கியது. அந்த நபர் கூறிய அத்தனை விஷயங்களும் பொய் என்று தெரியவந்தது. போலி ஆவணங்கள், போலி முத்திரைகளைப் பயன்படுத்தி பல நாட்டினரையும் அவர் சாமர்த்தியமாக ஏமாற்றி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவருக்கும் அரசக் குடும்பத்துக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை என்று அறிவிக்கப்பட்டது. இவரது உண்மையான பெயர் மெளரிஸ் அன்ட்ரோலி, இத்தாலியைச் சேர்ந்தவர். சமூக வலைதளங்களில் பரபரப்பாக இருந்தார். அடிக்கடி புகைப்படங்களையும் அரசக் குடும்பத்து நிகழ்ச்சிகளையும் பகிர்ந்துகொண்டார். இவரை இத்தாலி காவல் துறை கைது செய்துள்ளது. திட்டமிட்டு ஒருவரால் எப்படி உலகத்தையே ஏமாற்ற முடிந்தது என்று நினைக்கும்போது மிகவும் பிரமிப்பாக இருக்கிறது.

இப்படியும் ஒருவரால் ஏமாற்ற முடியுமா!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x