Published : 25 Jun 2015 10:47 AM
Last Updated : 25 Jun 2015 10:47 AM

உலக மசாலா: கொடூர ஒப்பனை அழகி!

அமெரிக்காவில் வசிக்கிறார் 24 வயது ஜோர்டன் ஹான்ஸ். இவர் ஓர் ஒப்பனைக் கலைஞர். புராணக்கதைகளில் வரக்கூடிய கொடூரமான உருவங்களைத் தன் முகத்தில் இரண்டு ஆண்டுகளாக வரைந்து வருகிறார். 3 முதல் 5 மணி நேரம் செலவிட்டு, ஓர் ஒப்பனையை நிறைவு செய்கிறார்.

அழகான முகத்தை இப்படிக் கோரமாக மாற்றிக்கொள்ளலாமா என்று ஏராளமானவர்கள் எதிர்மறை விமர்சனங்களைச் சொல்லி வருகிறார்கள். “உலகத்தைப் பற்றி எனக்குக் கவலை இல்லை. எனக்குப் பிடித்த வேலையை நான் செய்கிறேன். என் கணவர் ஒருநாள் கூட ஏன் இப்படிச் செய்கிறாய் என்று கேட்டது இல்லை. இதைவிட வேறு என்ன வேண்டும்?’’ என்று கேட்கிறார் ஜோர்டன்.

அழகு, பார்ப்பவர்களின் கோணத்தில் இருக்கிறது!

சோம்சாய் நிட்டிமாங்கோல்சாய் பேட்மேனின் மிகப் பெரிய விசிறி. தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் வசிக்கிறார். பேட்மேனுக்கான பிரத்யேக அருங்காட்சியகம் ஒன்றை நடத்தி வருகிறார். இங்கே 50 ஆயிரம் பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கின்றன. 2005-ம் ஆண்டு பேட்மேன் படம் பார்த்ததில் இருந்து, பேட்மேன் மீது தீவிரமான ஆர்வம் வந்துவிட்டது என்கிறார் சோம்சாய். பேட்மேன் உண்டியல்தான் முதலில் வாங்கினார். கொஞ்சம் கொஞ்சமாக ஆர்வம் அதிகரிக்க, ஒவ்வொரு பொருளாக வாங்கிச் சேகரிக்க ஆரம்பித்துவிட்டார்.

நாளடைவில் அனைத்து கார்ட்டூன் கதாபாத்திரங்கள் மீதும் ஆர்வம் வந்துவிட்டது. எல்லாவற்றையும் சேகரிக்க ஆரம்பித்தபோது, வீட்டில் இடம் இல்லை. உடனே தனியாக ஓர் அருங்காட்சியகம் வைக்கும் எண்ணம் வந்தது. 2012-ம் ஆண்டு 50 ஆயிரம் பொருட்களுடன் பேட்மேன் அருங்காட்சியகம் திறக்கப்பட்டது. இண்டியானா ஜோன்ஸ், சூப்பர்மேன், ஜேம்ஸ்பாண்ட், ஷ்ரெக், நீமோ, மிக்கி மவுஸ், ஸ்டார் வார்ஸ் கதாபாத்திரங்களைப் பார்ப்பதற்காக தினமும் ஏராளமானவர்கள் வருகிறார்கள். டி-சர்ட், சாவிக் கொத்து, பணப்பை, கடிகாரம் போன்றவற்றை வாங்கிச் செல்கிறார்கள். இன்னும் 20 ஆண்டுகளுக்குப் பிறகு மிகப் பெரிய பேட்மேன் ஏலம் நடத்துவேன் என்கிறார் சோம்சாய்.

ஏலம் விட்டால் சோம்சாய் கோடீஸ்வரராக மாறிடுவார்!

ஈக்வடாரில் வசிக்கும் 68 வயது பல்டஸர் உஷ்காவை எல்லோரும் ’பனி மனிதன்’ என்று அழைக்கிறார்கள். உஷ்காவின் குடும்பம் பரம்பரையாகப் பனிக் கட்டிகளை வெட்டி, வியாபாரம் செய்து வருகிறது. தினமும் சிம்போராஸோ மலை உச்சி வரை சென்று, பனிக்கட்டிகளை வெட்டி, கீழே கொண்டு வருகிறார் உஷ்கா. 5 மணி நேரத்தை இதற்காகச் செலவிடுகிறார். பனிக்கட்டி தயாரிக்கும் தொழிற்சாலைகள் வந்துவிட்டதால், தற்போது யாரும் இந்த வேலையைச் செய்வதில்லை. உஷ்காதான் இந்த வேலையைச் செய்யும் கடைசி மனிதர்.

காலை 7 மணிக்கு கழுதைகளுடன் செல்கிறார். சுத்தமான பனிக்கட்டிகளை வெட்டி எடுக்கிறார். அருகில் வளர்ந்திருக்கும் கோரைப் புற்களைக் கொண்டு பனிக்கட்டிகளைக் கட்டுகிறார். பிறகு கழுதை மீது வைத்து நகருக்கு எடுத்து வருகிறார். இயற்கையாகக் கிடைக்கும் பனிக்கட்டி, ருசியாக இருப்பதால் பலரும் போட்டி போட்டுக்கொண்டு வாங்குகிறார்கள். பழங்களை வைத்து, அவரே இந்தப் பனிக்கட்டியால் ஐஸ்க்ரீம் தயாரித்து, விற்பனை செய்கிறார். வாரம் ஒருமுறை சந்தைக்குச் சென்று, பனிக்கட்டிகளை விற்று, ரூ.1,500 சம்பாதித்து வருகிறார். சர்வதேச திரைப்படத்துறையினர் உஷ்காவைச் சந்தித்திருக்கிறார்கள்.

குறும்படம் எடுத்திருக்கிறார்கள். அதைப் பார்த்த சுற்றுலாப் பயணிகள் உஷ்காவை நேரில் சந்திக்க வருகிறார்கள். அவர்களுக்கு நேரடியாகத் தன் வேலையைச் செய்து காட்டுகிறார். இதற்காக உஷ்காவுக்கு ஓரளவு அன்பளிப்பும் கிடைக்கிறது. “நான் ஒன்றும் சாதித்துவிடவில்லை. என் முன்னோர்கள் செய்த, குடும்பத் தொழிலைத்தான் செய்து வருகிறேன். இதில் என்ன விசேஷம் இருக்கிறது?’’ என்கிறார் உஷ்கா.

எளிமையான பனிமனிதர்!

சீனாவின் பல இடங்களில் தொடர் மழையால் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. நான்ஜிங் பகுதியில் உள்ளவர்கள் தெருவில் சூழ்ந்திருந்த வெள்ளத்துக்காகக் கண்ணீரும் விட்டனர்; சந்தோஷமும் பட்டனர். நீர் தேங்கியிருந்ததால் போக்குவரத்து கஷ்டமாக இருந்தது. அதே நேரம் தேங்கியிருந்த நீரில் ஏராளமான மீன்கள் துள்ளி விளையாடின. வலைகளைப் போட்டு வீட்டு வாசலில் இருந்தே மீன்களைப் பிடித்துவிட்டனர். அருகிலிருந்த மீன் பண்ணை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டதால், அங்கிருந்த மீன்கள் வெளியேறிவிட்டன. இதனால் மக்களுக்கு லாபம்.

சிரமத்திலும் சில சமயம் லாபம் கிடைக்கும்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x