Published : 05 Aug 2015 11:39 AM
Last Updated : 05 Aug 2015 11:39 AM

உலக மசாலா: கொக்கு அறுவை சிகிச்சை!

ஜப்பானின் குராஷிகி மருத்துவமனையில் அறுவை சிகிச்சைகளுக்கான பயிற்சிகள் மருத்துவ மாணவர்களுக்கு அளிக்கப்படுகின்றன. இங்கே பயிற்சி பெற நினைப்பவர்களுக்கு எழுத்துத் தேர்வு தவிர்த்து, 3 பரிசோதனைகள் நடத்தப்படுகின்றன. முதல் சோதனை ஒரிகாமி. தாளில் கொக்கு ஒன்றைச் செய்ய வேண்டும். ஜப்பானியர்களுக்கு ஒரிகாமி செய்வது ஒன்றும் கடினம் அல்ல. ஆனால் 1.5 சதுர செ.மீ. அளவுள்ள தாளில் கொக்கு செய்ய வேண்டும். இவ்வளவு சிறிய தாளில் கொக்கு செய்வது என்பது உண்மையிலேயே கடினமான சோதனைதான்.

அடுத்தது, 35 மி.மீ அளவுள்ள ஓர் இறந்த வண்டின் 13 பாகங்கள் தனித்தனியே பிரித்து வைக்கப்பட்டிருக்கும். எந்த உறுப்புக்கும் சேதம் விளைவிக்காமல், எல்லாவற்றையும் ஒன்று சேர்த்து, முழு வண்டாக மாற்றிவிட வேண்டும். மூன்றாவதாக 5 மி.மீ. அளவுகளில் ஜப்பானின் புகழ்பெற்ற உணவான சுஷியைச் செய்து வைக்க வேண்டும். 15 நிமிடங்களில் ஒவ்வொரு சவாலையும் மாணவர்கள் செய்து முடிக்க வேண்டும். யார் சிறப்பாகச் செய்து முடித்திருக்கிறார்களோ அவர்களுக்கு இங்கே அறுவை சிகிச்சை பயிற்சியளிக்கப்படுகிறது.

கவனம், ஒருங்கிணைப்பு, நடுக்கமில்லாத கைகள் போன்றவை ஓர் அறுவை சிகிச்சைக்கு இன்றியமையாதவை. அவற்றை எல்லாம் மருத்துவர்களுக்குக் கொண்டு வருவதற்காகவே இந்தப் பரிசோதனைகளை அளிக்கிறோம். 40 மாணவர்களுக்கு மட்டுமே வாய்ப்பு. இதில் வண்டின் பாகங்களைச் சரியாக இணைக்க முடியாத மாணவர்களை மட்டுமே சேர்த்துக்கொள்வதில்லை என்கிறார்கள் குராஷிகி மருத்துவமனையின் நிர்வாகிகள்.

சவாலான சோதனைகள்தான்!

இல்லாத ஒன்றை இருப்பது போலக் காட்டும் கண்ணாடிகளை உருவாக்கியிருக்கிறார் ஹங்கேரியைச் சேர்ந்த பென்ஸ் அகோஸ்டன். முப்பரிமாணத்தில் சிவப்பு, பச்சை, நீலம் போன்ற நிறங்களில் அச்சடிக்கப்பட்ட 6 லென்ஸ்களை, கண்ணாடி ஃப்ரேம் மீது வைத்துப் பார்த்தால் விதவிதமான காட்சிகளைப் பார்க்க முடியும். நம் மனநிலைக்கு ஏற்றார் போல இந்த லென்ஸுகளைப் பயன்படுத்தி, சந்தோஷமாக இருக்கலாம்.

அதாவது பயணம் செய்யும்போது பாட்டுக் கேட்கிறீர்கள். ஜன்னலுக்கு வெளியே பாடலுக்குத் தொடர்பில்லாத காட்சிகள் புலப்படுகின்றன. ஆனால் இந்தக் கண்ணாடியை மாட்டிக்கொண்டால் பாடலுக்கு ஏற்ற மகிழ்ச்சியான காட்சிகள் கண் முன் தெரியும். நம் சந்தோஷமான மனநிலைக்கு ஏற்ற காட்சிகளைப் பார்த்துக்கொண்டே பயணிக்கலாம். இந்தக் காட்சி வேண்டாம் என்றால் வேறொரு லென்ஸை மாட்டிக்கொள்ளலாம். லென்ஸை மேலும் கீழுமாகச் சுற்றிவிடுவதன் மூலம் வெவ்வேறு காட்சிகள் கிடைக்கும். புற ஊதாக்கதிர்களை இந்த லென்ஸ் வடிகட்டி விடுவதால், சூரியனில் இருந்து வரும் கதிர்களில் இருந்தும் நம்மைக் காப்பாற்றிக்கொள்ளலாம்.

கண்ணாடிக்குள் வண்ணப் படம்!

ஹாங் காங் மிகச் சிறிய நகரம். இங்கே 20 லட்சம் மக்கள் அடுக்கு மாடி குடியிருப்புகளில் வசித்து வருகிறார்கள். ஒவ்வொரு குடியிருப்பும் மிக உயரமான கோபுரங்களைப் போல காட்சியளிக்கிறது. 40 மாடிகளைக் கொண்ட மிகப் பெரிய குடியிருப்பு ஒன்றில் 36 ஆயிரம் மக்கள் வசிக்கிறார்கள். குடியிருப்புகள் பெரும்பாலும் ஒரே அமைப்புடனும் வண்ணங்களுடனும் காட்சியளிக்கின்றன. அமெரிக்காவைச் சேர்ந்த புகைப்படக்காரர் ஜாசன் லாங்லே ஹாங் காங் அடுக்கு மாடிகளைப் புகைப்படங்கள் எடுத்திருக்கிறார்.

’’வீதிகளில் நின்று குடியிருப்புகளைப் பார்த்தால் பார்த்துக்கொண்டே இருக்கலாம்! இவ்வளவு வண்ணமயமான அழகான கட்டிடங்களைப் பார்த்ததில்லை. உயரமாகவும் அகலமாகவும் இருப்பதால் கேமராவுக்குள் முழுமையாக இந்தக் கட்டிடங்களைக் கொண்டு வரமுடியவில்லை. தூரத்தில் இருந்து புகைப்படங்கள் எடுத்ததால் கொடியில் தொங்கிக்கொண்டிருந்த துணிகளோ, பால்கனியில் வளர்த்த செடிகளோ துல்லியமாகத் தெரியவில்லை’’ என்கிறார் ஜாசன்.

அடடா!

அமெரிக்காவின் ஃப்ளோரிடாவில் எவர்க்ளேட்ஸ் தேசியப் பூங்காவில் மிகப் பெரிய பர்மிய மலைப்பாம்பு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. 18 அடி நீளம் கொண்ட இதனை 5 பேர் தூக்கினார்கள். 59 கிலோ எடையுடன் இருந்தது. இரவு நேரங்களில் உணவு தேடி வெளியே வரும் இந்த மலைப்பாம்பு, ஒரு தடவைக்கு 36 முட்டைகளை இடக்கூடியது. ஏராளமான மலைப் பாம்பு குட்டிகள் அந்தப் பகுதியில் இருப்பதாகச் சொல்கிறார்கள்.

அம்மாடி…

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x