Published : 19 Nov 2016 10:58 AM
Last Updated : 19 Nov 2016 10:58 AM

உலக மசாலா: குழந்தை நோயாளிகளை மகிழ்ச்சிப்படுத்தும் சிறுவன்!

தாஸ்மேனியாவில் வசிக்கும் 12 வயது கேம்பல் ரிமெஸ், இதுவரை 800 பொம்மைகளை குழந்தை நோயாளிகளுக்கு வழங்கியிருக்கிறான்.

3 ஆண்டுகளுக்கு முன்பு, மருத்துவமனைகளில் இருக்கும் குழந்தைகளுக்கு கிறிஸ்துமஸ் பரிசு அளிக்க விரும்புவதாகவும், பொம்மைகளை வாங்கித் தரும்படியும் தன் பெற்றோரிடம் கேட்டான் கேம்பல். ஆனால் பெற்றோரால் கேம்பல் கேட்ட பரிசுகளை வாங்கிக் கொடுக்க முடியவில்லை. ஆனாலும் கேம்பலின் இரக்க குணத்தை ஊக்குவிக்கும் வகையில், வீட்டிலேயே ஓவியங்கள் வரைந்து, பரிசாக அளிப்போம் என்றார் அம்மா சோனியா. ஆனால் கேம்பலுக்கு அதில் விருப்பம் இல்லை.

இணையதளங்களில் வீட்டிலேயே பொம்மை செய்வது எப்படி என்பதைத் தேடிப் படித்தான். வீடியோக்களைப் பார்த்தான். ஒரு துணியை வெட்டி அம்மாவிடம் கொடுத்து, தைத்து தரச் சொன்னான். முதல் பொம்மை செய்வதற்கு 5 மணி நேரங்கள் ஆனது. சோனியா பொறுமை இழந்தார். ஆனாலும் கேம்பல் விடவில்லை. அம்மாவுக்கு எளிமையாகப் பொம்மை செய்யும் வித்தையைக் கற்றுக் கொடுத்தான். வெகுவிரைவில் அவனே பொம்மைகளைத் தைக்க ஆரம்பித்தான்.

ஒருநாளைக்கு ஒரு பொம்மை செய்ய ஆரம்பித்தபோது, ‘365 பொம்மைகள்' திட்டத்தை உருவாக்கினான். கடந்த 3 ஆண்டுகளில் 800 பொம்மைகளைச் செய்து, மருத்துவமனையில் இருக்கும் குழந்தை நோயாளிகளுக்கு அளித்திருக்கிறான்.

‘‘கேம்பல் சாதாரண குழந்தைகள் போல் இல்லை. 24 மணி நேரமும் பொம்மைகள் செய்வதிலேயே ஆர்வமாக இருப்பான். தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் பார்ப்பதோ, விளையாடுவதோ கிடையாது. படிப்பை விட்டால் பொம்மை செய்யக் கிளம்பிவிடுவான். இன்று ஒரு மணி நேரத்தில் ஒரு பொம்மை செய்யும் அளவுக்குத் தேர்ந்துவிட்டான். தாஸ்மேனியாவில் மட்டுமல்லாமல், உலகம் முழுவதும் உள்ள குழந்தைகளுக்குப் பொம்மைகளை அனுப்பி வருகிறான்” என்கிறார் சோனியா.

‘‘மருத்துவமனையில் உள்ள குழந்தைகளிடம் பொம்மைகளைக் கொடுத்தவுடன், அவர்கள் முகத்தில் ஏற்படும் புன்னகைக்கும் அவர்கள் கொடுக்கும் அரவணைப்புக்கும் எதுவும் ஈடு இல்லை. ஒரு பொம்மையால் எனக்கும் அவர்களுக்கும் நாள் முழுவதும் மகிழ்ச்சி கிடைக்கும்” என்கிறான் கேம்பல். ஆரம்பத்தில் பெற்றோரிடம் இருந்து பொம்மைகளுக்குத் தேவையான பணத்தைப் பெற்றுக்கொண்டான் கேம்பல். இன்றோ, பலரும் பணமாகவும் பொம்மைகளுக்குத் தேவையான பொருட்களாகவும் நன்கொடை அளித்து வருகிறார்கள்.

குழந்தை நோயாளிகளை மகிழ்ச்சிப்படுத்தும் கேம்பலுக்குப் பாராட்டுகள்!

கனடாவில் துருவக் கரடியும் பனிப் பிரதேசத்தில் வசிக்கும் ஸ்லெட் நாயும் மிகவும் அன்பாகப் பழகிய காட்சியைப் படமாக்கியிருக்கிறார் சுற்றுலாப் பயணி டி மியுலெஸ்.

”மிகப் பெரிய உருவம் கொண்ட துருவக் கரடி, வெகு எளிதாக நாயைக் கொன்றுவிடக் கூடியது. என்ன நடக்குமோ என்ற பதற்றத்துடன் நான் பார்த்துக்கொண்டிருந்தேன். மனிதர்கள் ஒரு குழந்தையைக் கையாள்வது போல, அத்தனை அன்பாக நாய்க் குட்டியைத் தடவிக் கொடுத்தது. தன்னோடு சேர்த்து அனைத்துக்கொண்டது துருவக் கரடி. நாயும் துருவக் கரடியைக் கண்டு பயமில்லாமல், மிகவும் அன்போடு ஒட்டிக்கொண்டது. இதுபோன்ற அபூர்வமான ஒரு காட்சியைப் படம் பிடித்ததில் எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது” என்கிறார் டி மியுலெஸ்.

அபூர்வ நட்பு!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x