Published : 24 Feb 2015 10:38 AM
Last Updated : 24 Feb 2015 10:38 AM

உலக மசாலா: குழந்தையும் நாயும் ஒரே மாதிரி!

க்ரேஸ் சோன் லாஸ் ஏஞ்சல்ஸில் வசிக்கிறார். அவருக்கு ஜாஸ்பர் என்ற 10 மாதக் குழந்தை இருக்கிறான். ஜோய் என்ற நாயையும் வளர்த்து வருகிறார். ஜாஸ்பருக்கும் ஜோய்க்கும் விதவிதமான தொப்பி, குல்லாய், ஹெல்மெட், கண்ணாடி அணிவித்து புகைப்படங்கள் எடுத்து வருகிறார் க்ரேஸ்.

ஒவ்வொரு புகைப்படத்திலும் குழந்தை ஜாஸ்பரின் முகபாவனை அசத்தலாக இருக்கிறது. ஆனால் ஜோய் மட்டும் ஒரே மாதிரி மிரட்சியாகப் பார்த்துக்கொண்டிருக்கிறது.

`குழந்தையையும் நாயையும் அருகருகே வைத்துப் புகைப்படம் எடுப்பது அவ்வளவு எளிதான காரியம் இல்லை’ என்கிறார் க்ரேஸ். இவரது புகைப்படங்களுக்கு மக்கள் மத்தியில் பிரமாதமான வரவேற்பு இருக்கிறது.

நாய் போஸ் கொடுப்பதை நினைத்தால் ஆச்சரியமாதான் இருக்கு…

சீனாவின் பெய்ஜிங் நகரில் இருக்கும் சிறைச் சாலை மிகவும் வித்தியாசமான முறையில் இயங்குகிறது. இங்கே நீண்ட காலமாக தண்டனை அனுபவிக்கும் குற்றவாளிகளுக்காக, சிறைச் சாலைக்கு உள்ளேயே ஒரு சிறிய நகரை உருவாக்கியிருக்கிறார்கள். இந்த நகருக்குள் சூப்பர் மார்க்கெட், இண்டர்நெட் கஃபே, ஏடிஎம் மெஷின், வங்கி போன்றவை போலியாக உருவாக்கப்பட்டுள்ளன.

குற்றவாளிகள் நீண்ட காலம் கழித்து வெளியே செல்லும்போது, வெளியே ஏற்பட்டிருக்கும் தொழில்நுட்ப வளர்ச்சியை அறிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகவே இந்த நகரை உருவாக்கியிருக்கிறார்கள். இதன் மூலம் மொபைல் போன், கம்ப்யூட்டர் போன்றவற்றை இயக்கக் கற்றுக்கொள்ளும் வாய்ப்பு கைதிகளுக்குக் கிடைக்கிறது. வெளியே செல்லும்போது எளிதாக எல்லாவற்றையும் அவர்களால் சமாளித்துக்கொள்ள இயலும்.

சமூக சேவகர் ஸு குவாங்குவா இந்தப் புதுமையான திட்டத்தைச் சிறையில் கொண்டுவந்திருக்கிறார். கைதிகள் வெளி உலகமே தெரியாமல் விடுதலையடைந்து செல்லும்போது, சமூகத்தில் மிகப் பெரிய பிரச்சினைகளைச் சந்திக்கிறார்கள்.

அதைத் தவிர்க்கவே இந்தத் திட்டம். 15 ஆண்டுகள் சிறைக்குள் இருந்த ஸாங் மின் தற்போது விடுதலையடைந்திருக்கிறார். `என்னால் பேப்பர் படிக்க முடிகிறது. க்ரெடிட் கார்டைப் பயன்படுத்த முடிகிறது. கம்ப்யூட்டரில் வேலை செய்ய முடிகிறது. இந்தத் திட்டத்தை எல்லா சிறைகளிலும் கொண்டு வரவேண்டும்’ என்று கோரிக்கை வைக்கிறார்.

அடடா! நல்ல திட்டமாகத்தான் இருக்கு…

பிரிட்டனில் விநோதமான வழக்கு நீதிமன்றத்துக்கு வந்திருக்கிறது. டான் க்ளார்க் தனது வீட்டை வாடகைக்கு விட்டிருந்தார். நீண்ட காலம் அங்கே ஒரு குடும்பம் வசித்து வந்தது. திடீரென்று வீட்டைக் காலி செய்யும்படிக் கேட்டுக்கொண்டார் க்ளார்க். ஆனால் குடியிருந்தவர்கள் காலி செய்ய மறுத்து, நாட்களைக் கடத்தி வந்தனர். பிறகு ஒருநாள் வீட்டுச் சாவியை க்ளார்க்குக்கு அனுப்பி விட்டு எங்கோ சென்றுவிட்டனர்.

வீட்டைத் திறந்து பார்த்தவருக்கு அதிர்ச்சி. வீடு முழுவதும் குப்பைக் கிடங்காகக் காட்சியளித்தது. ஓர் அங்குல இடம் கூட காலியாக இல்லை. ஹால், ரூம், சமையலறை எங்கும் காலியான பாட்டில்கள், சிகரெட்கள், பிளாஸ்டிக் பேப்பர்கள் என்று குவிந்திருந்தன.

மோசமான துர்நாற்றம் வேறு. இந்த வீட்டைச் சுத்தம் செய்வதற்கு ஏராளமாக செலவாகும் என்று தெரியவந்தது. நீண்ட காலம் நம்பி ஒருவருக்கு வீடு கொடுத்ததுக்கு தண்டனையா என்று கொதித்துப் போனார் க்ளார்க். குடித்தனம் இருந்தவர்களைச் சுத்தம் செய்து கொடுக்கும்படி உத்தரவிடவேண்டும் என்று நீதிமன்ற உதவியை நாடியிருக்கிறார் க்ளார்க்.

இப்படியும் சிலர் இருக்கிறார்கள்…

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x