Published : 09 Jul 2017 12:16 PM
Last Updated : 09 Jul 2017 12:16 PM

உலக மசாலா: குழந்தைகள் விரும்பும் பள்ளி!

மாஸ்கோவில் இயங்கும் மழலையர் பள்ளிக்கு, குழந்தைகள் தினமும் மகிழ்ச்சியாகச் செல்கிறார்கள். கோட்டை வடிவில் பள்ளியின் கட்டிடம் அமைக்கப்பட்டிருக்கிறது. குழந்தைகள் விரும்பக்கூடிய வண்ணங்களில் சுவர்களில் ஓவியங்கள், விளையாட்டுக் கருவிகள், கால்பந்து மைதானம், பூந்தோட்டம், ஊஞ்சல்கள், சறுக்கு மரங்கள் என்று ஏராளமான அம்சங்கள் இந்தப் பள்ளியில் இருக்கின்றன. “குழந்தைகளுக்கு ராஜா, ராணி கதைகள் என்றால் மிகவும் பிடிக்கும். தாங்களும் ஒர் இளவரசனாகவோ, இளவரசியாகவோ இருக்க வேண்டும் என்று நினைக்காதவர்கள் உண்டா? அவர்களின் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் இந்தப் பள்ளியை வடிவமைத்திருக்கிறோம். இங்கே படிக்கும் 150 குழந்தைகளும் தினமும் தங்களை இளவரசனாகவும் இளவரசியாகவும் நினைத்துக்கொண்டு, கோட்டைக்குள் நுழைகின்றனர். இங்கே எந்தக் குழந்தையும் சும்மா இருந்து பார்த்ததில்லை. அவரவருக்குப் பிடித்த விளையாட்டுகளில் ஈடுபட்டிருப்பார்கள். ஜெர்மனிக்கு ஒருமுறை சென்றபோது, இதுபோன்ற ஒரு பள்ளியைப் பார்த்தேன். அதை வைத்துதான் இந்தப் பள்ளியை உருவாக்கியிருக்கிறேன். மாதம் 30 ஆயிரம் ரூபாய் கட்டணம். அரசாங்கத்தின் மானியம் கிடைப்பதால், பெற்றோர் 2 ஆயிரம் ரூபாய் மட்டும் கட்டணமாகச் செலுத்தினால் போதும்” என்கிறார் பள்ளியின் இயக்குனர் பாவெல் க்ருடினின்.

புதிய முகம் மெக்ராத்துக்கு வெல்கம்!

அமெரிக்காவின் மிச்சிகன் பகுதியில் இருக்கிறார் 38 வயது மெக்ராத். மூன்று ஆண்டுகளுக்கு முன்பு சிறிய கட்டி ஒன்று முகத்தில் உருவானது. அந்தக் கட்டி அடுத்த ஆண்டு பல மடங்கு பெரிதானது. மருத்துவப் பரிசோதனையில் ’சினோவியல் சர்கோமா’ என்ற அரிய புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டிருந்தது தெரியவந்தது. கீமோதெரபி கொடுத்த பிறகு முகத்தின் ஒரு பகுதி முழுவதையும் கட்டி ஆக்கிரமித்துவிட்டது. மெக்ராத்தால் சாப்பிடக் கூட முடியாமல் போனது. 30 மணி நேர அறுவை சிகிச்சைக்குப் பிறகு கட்டி அகற்றப்பட்டது. “கட்டியை எடுத்த அன்று என் மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை. ஆனால் அது சில நாட்கள் கூட நீடிக்கவில்லை. என் காது, கண், பாதி மூக்கு, பாதி வாய் என்று அனைத்தையும் அழித்துவிட்டுச் சென்றிருந்தது கட்டி. உடைந்து போனேன். ஒரு பாதி முகம் இல்லாமல் எப்படி வாழ்வேன்? மருத்துவர்கள் எனக்கு நம்பிக்கையளித்தனர். புற்றுநோய் சிகிச்சை முழுமையடைந்த பிறகு, முகத்தை மறு உருவாக்கம் செய்து கொடுப்பதாக வாக்களித்தனர். சொன்னது போலவே இப்போது முகத்தைச் சீரமைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கின்றனர். கால் தொடைப் பகுதியிலிருந்து சதையை எடுத்து, முகத்தில் வைத்திருக்கிறார்கள். மொத்தம் 20 அறுவை சிகிச்சைகள் செய்ய வேண்டியிருக்கிறது. 2018-ம் ஆண்டில் எனக்கு முழு முகம் கிடைத்துவிடும். என்னைக் குணமாக்குவதை ஒரு சவாலாக எடுத்துக்கொண்டு, மருத்துவர் சையாசேட் சிகிச்சையளித்து வருகிறார். அன்பாக என்னை நடத்துவார். நகைச்சுவையாகப் பேசுவார். அவருடன் இருக்கும்போது மிகவும் மகிழ்ச்சியாக இருப்பேன். அடுத்த ஆண்டு எல்லோரையும் போல வெளியே வருவேன்” என்கிறார் மெக்ராத்.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x