Published : 09 Nov 2016 10:55 AM
Last Updated : 09 Nov 2016 10:55 AM

உலக மசாலா: குழந்தைகள் தேர்ந்தெடுக்கும் அமெரிக்க அதிபர்!

நியூயார்க்கில் உள்ள பெஞ்சமின் ஃப்ராங்க்ளின் ஆரம்பப் பள்ளியில் தேர்தல் நடத்தி முன்கூட்டியே அமெரிக்க அதிபர் யார் என்பதை மிகச் சரியாகக் கணித்து விடுகிறார்கள். 1968-ம் ஆண்டு முதல் கடந்த 48 ஆண்டுகளாக ஒவ்வோர் அதிபர் தேர்தலின்போதும் பள்ளியிலும் தேர்தல் நடத்தப்படுகிறது. ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் குழந்தைகளுக்கு, தேர்தல் என்றால் என்ன, அதை எப்படி நடத்துகிறார்கள், யார் வேட்பாளர்கள், எப்படித் தேர்ந் தெடுக்கப்படுகிறார்கள் என்பதை எல்லாம் விளக்குகிறார்கள். வேட்பாளர்கள் பற்றிய குறிப்புகளும் நிறை, குறைகளும் குழந்தை களுக்கு எடுத்துச் சொல்லப்படுகின்றன. குழந்தைகள் அவரவர் விருப்பத்துக்குரிய வேட்பாளரை ஆதரித்து விவாதங்கள் நடத்து கிறார்கள்.

ஒரு மாதத்துக்குப் பிறகு பள்ளியில் தேர்தல் நடத்தப் படுகிறது. குழந்தைகள் ரகசியமாகச் சென்று, தங்களுடைய வாக்கைச் செலுத்துகிறார்கள். ‘4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நாங்களும் தேர்தல் நடத்துகிறோம். குழந்தைகளுக்கும் எங்களுக்கும் மிக சுவாரசியமான விஷயமாக இருக்கிறது. அதிபரைத் தேர்ந்தெடுக்கும் பொறுப்பு தங்களுக்கும் இருக்கிறது என்ற பெருமிதத்துடன் குழந்தைகள் வாக்குகளைச் செலுத்துகிறார்கள். இதுவரை எங்கள் பள்ளி தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கின்றனவோ, அப்படித்தான் நாட்டின் தேர்தல் முடிவுகளும் அமைந்திருக்கின்றன.

இது எங்களுக்குப் பெருமையாக இருக்கிறது’ என்கிறார் பள்ளியின் முதல்வர் பாட்ரிசியா மூர். இந்த முறையும் பள்ளியில் தேர்தலை நடத்தி முடித்துவிட்டனர். ஹிலாரி கிளின்டன் 52% வாக்குகளைப் பெற்று, அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றிருக்கிறார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட டொனால்ட் ட்ரம்ப் 43% வாக்குகளைப் பெற்று தோல்வியடைந்திருக்கிறார். இந்தத் தேர்தலிலும் ஃப்ராங்க்ளின் பள்ளியின் கணிப்பு வெற்றி பெறுமா என்று ஆசிரியர்களும் குழந்தைகளும் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.

இந்த முறையும் குழந்தைகள் சரியாகக் கணித்திருப்பார்களா?

இங்கிலாந்தில் வசிக்கும் 24 வயது ஜாமி லே ட்விடேலுக்கு 4 வயதில் ஹார்லே, 3 வயதில் ஸ்கைலியர் என இரு குழந்தைகள். இரவு குழந்தைகளைக் குளிக்க வைத்துவிட்டு, தானும் குளித்தார் ஜாமி. திடீரென்று வலிப்பு வந்து, குளியல் தொட்டியிலேயே அவரது உயிர் பிரிந்துவிட்டது. அம்மா தூங்குகிறார் என்று நினைத்த குழந்தைகள், அருகில் படுத்து உறங்கிவிட்டனர். மறுநாள் காலை பள்ளியில் இருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. ஒருவரும் எடுக்கவில்லை. உடனே ஜாமியின் அம்மாவைத் தொடர்புகொண்டது பள்ளி. “என் மகளுக்கு வலிப்பு வரும் விஷயம் பள்ளிக்குத் தெரியும் என்பதால், உடனே என்னைத் தொடர்புகொண்டார்கள். நான் வீட்டுக்குச் சென்றேன். படுக்கை அறையில் குழந்தைகள் இருந்தனர். ஜாமி குளியலறையில் இறந்து கிடந்தாள். குழந்தைகளுக்குத் தங்கள் அன்பு அம்மா இறந்த விஷயம் தெரியவில்லை. 9 வயதில் வலிப்பு வந்தது. சமீப காலமாக வாரம் ஒருமுறை வலிப்பு வர ஆரம்பித்துவிட்டது. மருந்துகளைச் சாப்பிட்டுக்கொண்டிருந்தாள். ஜாமி போல சிறந்த அம்மாவைப் பார்க்க முடியாது. குழந்தைகளுக்காகவே அவள் வாழ்ந்தாள். குழந்தைகளுக்குத் தேவையான அனைத்தையும் செய்தாள். தினமும் ஒருமுறை என் மகளையும் குழந்தைகளையும் பார்த்துவிடுவேன். இனி குழந்தைகளை நான்தான் வளர்க்க வேண்டும். ஆனால் குழந்தையின் அம்மா தேவலோகம் சென்றுவிட்டாள் என்பதை இந்தக் குழந்தைகளுக்கு எப்படிப் புரிய வைப்பது என்றுதான் தெரியவில்லை” என்கிறார் எலிசபெத்.

கொடுந்துயரம்...

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x