Published : 27 Aug 2016 10:37 AM
Last Updated : 27 Aug 2016 10:37 AM

உலக மசாலா: குழந்தைகளை, குழந்தைகளாக வாழ விடுங்கள்!

தங்களுடைய பிள்ளைகள் மிகச் சிறந்தவர்களாக வரவேண்டும் என்ற எண்ணம் சீனப் பெற்றோர் மத்தியில் அதிகரித்து வருகிறது. இதற்காகச் சிறிய வயதிலேயே எல்லாவற்றையும் குழந்தைகளுக்குக் கற்றுக் கொடுக்க ஆரம்பித்து விடுகிறார்கள். சீனாவின் குவாங்டோங் மாகாணத்தில் சிஇஒ பயிற்சி கொடுக்கும் இன்ஸ்டிடியூட் ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது. இங்கே 3 வயது முதல் 12 வயது குழந்தைகளுக்குப் பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன. ஆண்டுக்கு 5 லட்சம் ரூபாய் கட்டணம். வாரத்துக்கு 2 வகுப்புகள். வார்த்தைகளிலும் வாக்கியங்களிலும் விடுபட்ட எழுத்துகளை நிரப்புவது, பில்டிங் செட்டை அடுக்குவது போன்ற பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.

‘போட்டி நிறைந்த உலகம் என்பதால் உங்கள் குழந்தைகள் எதிர்காலத்தில் சக்தி வாய்ந்த மனிதர்களாக வாழ்வதற்கு இந்தப் பயிற்சி உதவும்’ என்று விளம்பரம் செய்யப்படுகிறது. இது போன்ற விளம்பரங்களால் ஈர்க்கப்படும் வசதி படைத்த பெற்றோர்கள், ஆர்வத்துடன் தங்கள் குழந்தைகளைச் சேர்த்து விடுகிறார்கள். ஆனால் இந்தப் பயிற்சி வகுப்புகள் அனைத்தும் குழந்தைகளைவிட, அவர்களின் பெற்றோர்களுக்குத்தான் அதிக அளவில் பயன் தருகிறது.

பிள்ளைகள் சிஇஒ பயிற்சி பெறுவது பெற்றோர்களின் குடும்ப கவுரவமாக மாறிவிட்டது. ‘இந்தப் பயிற்சியில் பெறும் அறிவை மற்ற குழந்தைகள் தங்கள் அனுபவங்கள் மூலம் வீட்டிலேயே பெற்றுவிடுகிறார்கள். 3 வயதில் சிஇஒ பயிற்சி எல்லாம் மிக மோச மான விஷயம்’ என்கிறார் ஒரு குழந்தையின் அம்மா. நிபுணர்களும் 3 வயதில் இருந்து குழந்தைகளைத் தலைவர்களாக மாற்ற முடியாது என்றே கூறுகிறார்கள். படிப்பு போக மீதி நேரத்தை குழந்தைகள் சொந்தமாகச் செலவு செய்ய அனுமதிக்க வேண்டும் என்கிறார்கள்.

குழந்தைகளை, குழந்தைகளாக வாழ விடுங்கள்!

வியட்நாமைச் சேர்ந்த 30 வயது லி தி என், சமீபத்தில் ஒரு காலையும் கையையும் இழந்தார். ஹெல்த் இன்சூரன்ஸில் 1 கோடியே 20 லட்சம் ரூபாய் கேட்டு விண்ணப்பித்தார். ஆனால் இன்சூரன்ஸ் நிறுவனம் தர முடியாது என்று மறுத்துவிட்டதோடு, அவர் மீது புகாரும் கொடுத்துவிட்டது. லி தி என் நடத்தி வந்த தொழில் நஷ்டத்தில் ஓடிக்கொண்டிருக்கிறது. அதைச் சரி செய்ய அவரால் இயலவில்லை. விபத்துக்கு முன்பு ஹெல்த் இன்சூரன்ஸ் எடுத்தார். அடுத்த சில வாரங்களில் ஒரு நண்பன் மூலம் தன் காலையும் கையையும் 1.5 லட்சம் ரூபாய் கொடுத்து வெட்டிக்கொண்டார். இது இயல்பான விபத்தாக இருக்க வேண்டும் என்பதற்காக ரயில் தண்டவாளத்துக்கு அருகில் படுத்திருந்தார்.

அந்த வழியே வந்த ஓர் இளைஞர் இவரை மருத்துவமனையில் சேர்த்துவிட்டார். சிகிச்சைப் பெற்றுத் திரும்பிய லி தின் என், இன்சூரன்ஸ் தொகை கேட்டு விண்ணப்பித்தார். சமீபத்தில்தான் மிகப் பெரிய தொகைக்கு இன்சூரன்ஸ் எடுத்ததால், சந்தேகம் வந்து விசாரித்திருக்கிறார்கள். விஷயம் வெளியே வந்துவிட்டது. கால், கையை இழந்து, பணத்தை இழந்து, இன்சூரன்ஸ் தொகையை இழந்து தவிக்கிறார் லி தி என். ஒரு பெண் தனக்குத்தானே கை, காலை வெட்டிக்கொண்டது ஏற்றுக்கொள்ள முடியாது என்கிறார்கள் சட்ட வல்லுநர்கள். ஒரு பக்கம் வழக்கு நடைபெற்று வருகிறது. இன்னொரு பக்கம் அவரது கை, காலை இணைக்க முடியுமா என்று மருத்துவர்கள் ஆராய்ந்து வருகிறார்கள்.

அடக் கொடுமையே…

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x