Published : 25 Mar 2016 10:15 AM
Last Updated : 25 Mar 2016 10:15 AM

உலக மசாலா: குளிர்ந்த நீர் உடலுக்கு நல்லதல்ல!

வெயில் காலங்களில் குளிர்ந்த நீரைப் பருகினால் புத்துணர்ச்சி கிடைக்கும். ஆனால் சீனாவில் இதை யாரும் ஏற்றுக்கொள்வதில்லை. வெயிலோ, மழையோ எந்தக் காலங்களிலும் சூடான நீரையே பருகுகிறார்கள். பெரும்பாலானவர்கள் வெளியே செல்லும்போது ஃப்ளாஸ்கில் சுடுதண்ணீர் எடுத்துக்கொள்கிறார்கள். தண்ணீர் தீர்ந்துவிட்டாலும்கூட ஆங்காங்கே தண்ணீர்க் குழாய்களில் வரும் சுடுநீரைப் பிடித்துக்கொள்கிறார்கள்.

குளிர்ந்த நீர் உடலுக்கு நல்லதல்ல என்ற எண்ணம் பெரும்பாலான சீனர்களிடம் இருக்கிறது. 1949-ம் ஆண்டில் கம்யூனிஸ சீனாவில் ஓர் அறிவிப்பு வெளியானது. குழாய்களில் வரும் நீர் அவ்வளவு தூய்மையாக இல்லாததால், தண்ணீரைக் காய்ச்சி, வடிகட்டி குடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. வீடுகள், அலுவலகங்கள், உணவு விடுதிகள் என எங்கும் சுடு தண்ணீர் குடிக்க ஆரம்பித்தனர். பழங்காலச் சீன மருத்துவத்திலும் சூடான நீருக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருக்கிறது.

சூடான நீர் விரைவில் ஜீரணமாக்கும், ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும், நச்சுகள் வெளியேற உதவும். குளிர்ந்த நீர் தசைப் பிடிப்பு ஏற்படுத்தும், உடல் உறுப்புகள் மெதுவாக இயங்க வைக்கும். சூடான நீரையும் குளிர்ந்த நீரையும் கலந்து பருகக்கூடாது என்கிறது சீன மருத்துவ குறிப்புகள். பழங்காலத்தில் இருந்தே புழக்கத்தில் இருக்கும் தேநீர் கலாசாரத்தில் இருந்து சுடு நீர் பருகும் பழக்கம் உருவாகியிருக்கலாம் என்று சிலர் கூறுகிறார்கள்.

சீனாவின் அண்டை நாடுகளான ஜப்பான், கொரியாவிலும் நீண்ட காலமாக தேநீர் குடிக்கும் பழக்கம் இருந்து வருகிறது. பொதுவாக சுடு தண்ணீர் குடிப்பது உடலுக்கு நல்லது என்ற எண்ணம் எல்லோரிடமும் உறுதியாக இருக்கிறது. எனவே வெளி நாடுகளுக்குச் சென்றால்கூட இந்தப் பழக்கத்தை சீனர்கள் மாற்றிக்கொள்வதில்லை.

ஆரோக்கியத்தில் எவ்வளவு அக்கறையாக இருக்கிறார்கள்!

ஆம்ஸ்டர்டாமில் பூனைகள் வசிக்கும் படகைப் பார்ப்பதற்காகச் சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகின்றனர். இந்தப் படகு, பூனைகளின் சரணாலயம். ஆதரவற்ற பூனைகளை இந்தப் படகில் பராமரித்து வருகிறார்கள். சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதற்காக இந்தப் பூனைகள் சரணாலயம் அமைக்கப்படவில்லை என்றாலும் ஆண்டுக்கு 4,500 பேர் வந்து பார்வையிடுகிறார்கள். இந்தப் பயணிகளில் பெரும்பாலானோர் தங்கள் செல்லப் பூனைகளைத் தொலைத்தவர்களாக இருக்கிறார்கள். 1966-ம் ஆண்டு ஹென்ரிட்டே வான் வீல்டே என்ற பெண், ஆதரவற்ற பூனைகளைத் தன் வீட்டில் வளர்த்து வந்தார். ஹென்ரிட்டேவின் நல்ல உள்ளத்தைக் கண்ட மக்கள், பூனைகள் எங்கே தனியாக இருந்தாலும் அவர் வீட்டில் கொண்டு வந்து சேர்க்க ஆரம்பித்தனர்.

அவரும் மறுப்பே சொல்லவில்லை. 2 ஆண்டுகளில் வீடு நிறையப் பூனைகள். இடம் போதவில்லை. ஒரு படகை வாங்கி, அதில் பூனைகளை வளர்த்து வந்தார். 1987-ம் ஆண்டு இந்தப் பூனை சரணாலயம் அரசாங்கத்தின் அங்கீகாரம் பெற்றது. 2005-ம் ஆண்டு ஹென்ரிட்டே மறைந்தார். தன்னார்வலர்கள் உதவியோடு இப்போதும் இயங்கி வருகிறது இந்தச் சரணாலயம். எந்த நாள் சென்றாலும் குறைந்தது 50 பூனைகளைப் பார்க்க முடியும். இதில் பூனைகளுக்கான மருத்துவமனையும் இருக்கிறது. இந்தச் சரணாலயத்தைப் பார்வையிட கட்டணம் எதுவும் இல்லை. ஆனால் வருகிறவர்கள் நன்கொடை கொடுத்தால் ஏற்றுக்கொள்கிறார்கள்.

பூனைகள் சரணாலயம்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x