Published : 17 Mar 2016 10:24 AM
Last Updated : 17 Mar 2016 10:24 AM

உலக மசாலா: குறைபாட்டைக் குணமாக்கும் அற்புத பூனை!

இங்கிலாந்தில் வசிக்கும் 6 வயது ஐரிஸ் கிரேஸ், கடுமையான ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்டிருக்கிறாள். அவளுக்கு துணையாக மோகி என்ற பூனை செல்லப் பிராணியாக வந்து சேர்ந்தது. விரைவில் ஐரிஸுக்கும் மோகிக்கும் நல்ல நட்பு உருவாகி விட்டது. அதற்குப் பிறகுதான் மெதுவாக பேச ஆரம்பித்தாள் ஐரிஸ். ஒரு துளி நீர் பட்டாலே பயப்படும் ஐரிஸ் இன்று குளியல் தொட்டியில் நீச்சலடிக்கிறாள் என்றால் அதற்குக் காரணமும் மோகிதான்.

அவளது பயத்தைப் போக்கி, மெதுவாக நீந்தக் கற்றுக்கொடுத்தது. சாப்பிடுவது, விளையாடுவது, ஓவியம் தீட்டுவது, பிக்னிக் செல்வது, தூங்குவது என மோகியும் ஐரிஸும் எப்பொழுதும் ஒன்றாகவே இருக்கிறார்கள். ஐரிஸை கவனித்துக்கொண்டே இருக்கிறது மோகி, ஏதாவது ஆபத்து என்றால் எச்சரித்து, காப்பாற்றி விடுகிறது.

“என் மகள் மிக மோசமாக பாதிக்கப்பட்டிருந்தாள். மருத்துவம் கொடுக்காத முன்னேற்றம், ஒரு பூனையால் கிடைத்தது. மோகியால் என் மகளின் குறைபாடு பெருமளவு குறைந்துவிட்டது. இருவரும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். ஐரிஸின் ஓவியங்கள் இதுவரை 1.4 லட்சம் ரூபாய்க்கு விற்பனையாகி இருக்கிறது. எல்லாவற்றுக்கும் காரணம் மோகிதான்” என்கிறார் ஐரிஸின் அம்மா.

ஆஹா! குறைபாட்டைக் குணமாக்கும் அற்புத பூனை!

சிங்கப்பூரைச் சேர்ந்த மெங் ஜியாங், தன்னுடைய 3 நாய்களையும் பாண்டா போல் மாற்றியிருக்கிறார். வெள்ளை நாய்களின் உடல், கண்கள், காதுகளில் கறுப்பு வண்ணத்தைப் பூசியிருக்கிறார். முடிகளை அழகாகக் கத்தரித்துவிட்டிருக்கிறார். பார்ப்பதற்கு அசல் பாண்டாக்களைப் போலவே தெரிகின்றன இந்த மூன்று நாய்கள். நாய்களின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியானபோது கிடைத்த ஆதரவைக் கண்டும் மெங் ஜியாங்கும் அவரது கணவரும் ஆச்சரியத்தில் உறைந்து போனார்கள். தினமும் நாய்களுடன் போட்டோ எடுத்துக்கொள்ள ஏராளமானவர்கள் வந்துகொண்டிருந்தனர்.

அவர்களுக்காக ஒரு புதிய தொழிலை ஆரம்பித்தார் மெங் ஜியாங். ஸ்டூடியோவுக்கு வந்து ஆசை தீர போட்டோ எடுத்துக்கொள்ளலாம். அதற்குக் கட்டணம் நிர்ணயித்தார். 3 மணி நேரத்தில் 500 பேர் நாய்களுடன் போட்டோ எடுத்துக்கொண்டனர். பின்னர் நாய்களை அழைத்துக்கொண்டு மக்கள் இருக்கும் இடத்துக்கே சென்றால் என்ன என்று மெங் ஜியாங் யோசித்தபோதுதான் கடுமையான விமர்சனத்தைச் சந்தித்தார். முதலில் சிலரிடமிருந்து எதிர்ப்புக் கிளம்பியது. இன்றோ சிங்கப்பூர் விலங்குகள் நல அமைப்புகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. நாய்களின் உடலில் சாயம் பூசுவது நல்லதல்ல. நாயை நாயாக வைத்திருக்காமல் இன்னொரு விலங்காகக் காட்டுவது உரிமை மீறல் என்கிறார்கள். மெங் ஜியாங் அனைத்து குற்றச்சாட்டுகளையும் நிராகரிக்கிறார்.

“இவை எங்களுக்கு நாய்கள் அல்ல, செல்லக் குழந்தைகள். இவற்றின் மேல் எங்களுக்கு இருக்கும் அக்கறையைவிட வேறு யாருக்கும் இருக்க முடியாது. குழந்தைகளை மாடலாகவோ, நடிக்கவோ வைக்கிறார்களே அப்பொழுது எங்கே போனது இவர்களது இரக்கம்?” என்கிறார் மெங் ஜியாங்.

நாயை நாயாக நடத்துவதில் உங்களுக்கு என்ன பிரச்சினை மெங் ஜியாங்?

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x