Published : 24 Jul 2015 10:27 AM
Last Updated : 24 Jul 2015 10:27 AM

உலக மசாலா: குதிரை மேல் குதிரை!

இங்கிலாந்தைச் சேர்ந்த வெண்டி பால்மர், குதிரைகளை வளர்த்து வருகிறார். பிறந்து 7 வாரங்களே ஆன குதிரை குட்டியின் உடலில், வெள்ளை நிறத்தில் ஒரு குதிரையின் படம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியிருக்கிறது. டா வின்சி என்ற பெயர் கொண்ட இந்தக் குதிரையை ஏராளமானவர்கள் வந்து பார்க்கிறார்கள். டா வின்சியின் தோழி குதிரை வின்னியின் பின்புறம் இதய வடிவம் இருக்கிறது. இரண்டு குதிரைகளையும் நினைத்துப் பெருமைப்படுகிறார் வெண்டி பால்மர்.

ஆஹா! குதிரை மேல் குதிரை!

நேபாளத்தில் உள்ள ஹோக்சே கிராமத்தை, ‘சிறுநீரகக் கிராமம்’ என்று அழைக்கிறார்கள். இங்கே வசிக்கும் பெரும்பாலான ஏழைகள் ஒரு சிறுநீரகத்தைத் தானமாகக் கொடுத்தவர்கள். மக்களின் ஏழ்மையைப் பயன்படுத்தி, இந்தியாவில் இருந்து வரும் புரோக்கர்கள் சிறுநீரகங்களை எடுத்துச் சென்று விடுகிறார்கள். சிறுநீரகத்தின் மூலம் கிடைக்கும் பணத்தில் சிறு நிலமோ, வீடோ வாங்கிக்கொள்கிறார்கள். 10 ஆண்டுகளாகச் சிறுநீரகம் கொடுக்க மறுத்த கீதா, தன் குடும்பத்தின் நன்மைக்காக இப்பொழுது கொடுத்துவிட்டார்.

அதில் வாங்கிய சிறு வீடு, சமீபத்தில் நடந்த பூகம்பத்தில் இடிந்து போய்விட்டது. பூகம்பத்துக்குப் பிறகு சிறுநீரக வேட்டை அதிகமாகிவிட்டது. எல்லாவற்றையும் இழந்த மக்கள் தங்கள் சிறுநீரகத்தையும் இழக்க வேண்டிய நிலைக்கு வந்தனர். ஒவ்வோர் ஆண்டும் கள்ளச்சந்தை மூலம் 7 ஆயிரம் சிறுநீரகங்கள் விற்பனை செய்யப்படுகின்றன. சிறுநீரகம் கொடுக்க மறுப்பவர்களைக் கடத்திச் சென்று, சிறுநீரகம் எடுப்பதும் நடக்கிறது. சிலரை மருத்துவப் பரிசோதனை என்று சொல்லி, சிறுநீரகத்தை எடுத்து, அனுப்பிவிடவும் செய்கிறார்கள்.

கொலை செய்து, இரண்டு சிறுநீரகங்கள் திருடுவதும் நடக்கிறது. இங்கே பெறப்படும் சிறுநீரகங்களுக்கு 6 மடங்கு விலை வைத்து, இந்தியாவில் விற்பனை செய்துவிடுகிறார்கள். நேபாளத்தில் இருந்து வேலை தேடி வரும் இளைஞர்களை பெங்களூரு, சென்னை போன்ற இடங்களில் மயக்க மருத்து கொடுத்து, சிறுநீரகம் திருடுவதும் நடைபெறுகிறது. நேபாளத்தைச் சேர்ந்த மனித உரிமைகள் அமைப்பு இதற்காகப் போராட்டங்களை நடத்தி வருகிறது.

ஐயோ… இந்தக் கொடுமையை யாராவது தடுத்து நிறுத்த மாட்டாங்களா?

நத்தைகளை யாரும் அழகான உயிரினம் என்று சொல்வதில்லை. ஆனால் ஜோருன்னா பார்வா என்ற நத்தைகளைப் பார்த்தால் ‘அழகு’ என்று சொல்லாமல் இருக்க முடியாது. கடலில் வாழும் இந்த நத்தைக்கு, முயலுக்கு இருப்பது போல சின்னஞ்சிறு காதுகள் இருக்கின்றன. அதனால் இந்த நத்தைகளைக் ’கடல் முயல்கள்’ என்று அழைக்கிறார்கள்.

ஜோருன்னா பார்வாவை 1938ம் ஆண்டு, ஜப்பானைச் சேர்ந்த கிகுடாரோ பாபா கண்டுபிடித்தார். ஆனால் அதற்குப் பிறகு இவற்றை யாரும் கண்டுகொள்ளவே இல்லை. ஜப்பானைச் சேர்ந்த நீச்சல் பள்ளி ஒன்று ஜோருன்னா பார்வா வீடியோவை வெளியிட்டது. உலகம் முழுவதும் வேகமாகக் கவனத்தைப் பெற்றன இந்த நத்தைகள். வெள்ளை, மஞ்சள் நிறங்களில் பளபளப்பான உடலில் சிறு உணர்கொம்புகளுடன் அட்டகாசமாக இருக்கின்றன!

கடல் முயலுக்கு வெல்கம்!

கொலம்பியாவின் காபி தோட்டங்களில் ஒவ்வோர் ஆண்டும் ஜீப் திருவிழா நடத்தப்படுகிறது. காபி தோட்டங்களில் ஜீப்கள் இன்றியமையாதவை. சரியான சாலை வசதி இல்லாத இடங்களில், சகலத்துக்கும் ஜீப்தான் உதவி வருகிறது. திருவிழாவில் ஜீப் போட்டி முக்கியமானது. ஜீப் நிறைய 2 ஆயிரம் கிலோ எடை கொண்ட பொருட்களை ஏற்றிக்கொண்டு, பல கிலோமீட்டர் தூரத்துக்குச் செல்ல வேண்டும் என்பதுதான் போட்டி. சிலர் வீட்டைக் காலி செய்துகொண்டு, அத்தனை சாமான்களையும் ஜீப்பில் ஏற்றிக்கொண்டு செல்கிறார்கள். சிலர் தோட்டங்களில் விளைவிக்கப்பட்ட வாழை, கரும்பு, சோளம் போன்றவற்றை எடுத்துச் செல்கிறார்கள்.

சிலர் மரச்சாமான்களை எடுத்துச் செல்கிறார்கள். இன்னும் சிலர் விலங்குகளை அழைத்துச் செல்கிறார்கள். அளவுக்கு அதிகமான எடையைச் சுமந்துகொண்டு ஜீப் வருவதைப் பார்க்கும்போது பயமாக இருக்கும். இதில் மனிதர்கள் வேறு உட்கார்ந்திருப்பார்கள். இப்படி ஒருமுறை விழாவில் கலந்துகொண்டு ஜீப் ஓட்டிவிட்டால், அந்த நபர் எவ்வளவு மோசமான சாலைகளிலும் திறமையாக ஓட்டிச் செல்லக்கூடியவராக மாறிவிடுவார். வழியெங்கும் மக்கள் ஆரவாரம் செய்து ஊக்குவிக்கிறார்கள். உலகிலேயே மிக நீளமான ஜீப் அணிவகுப்பு என்று இது கின்னஸிலும் இடம்பெற்றுவிட்டது!

கொலம்பியாவில் ஓட்டிடலாம், சென்னையில் ஓட்ட முடியுமா?

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x