Published : 11 Feb 2016 10:57 AM
Last Updated : 11 Feb 2016 10:57 AM

உலக மசாலா: குதிரைகளிடம் இனி முறைக்காதீர்கள்...!

பிரிட்டனைச் சேர்ந்த உளவியலாளர்கள், குதிரைகளால் மனிதர்களின் முகபாவனைகளை அறிந்துகொள்ள முடியும் என்கிறார்கள். 28 குதிரைகளிடம் கோபமான ஆண்களின் புகைப்படங்களைக் காட்டியபோது, அவை கோபத்தை வெளிப்படுத்தின. குதிரைகளால் கோபத்தையும் மகிழ்ச்சியையும் புரிந்துகொள்ள முடிகிறது என்பதை முதல் முறை அறிவித்திருக்கிறார்கள். இந்தச் சோதனையில் பங்கேற்ற குதிரைகளுக்கு ஏற்கெனவே பயிற்சி அளிக்கப்பட வில்லை.

மனிதர்களின் கோபமான முகங்களைக் காணும்போது குதிரைகளின் இதயம் வேகமாகத் துடிக்கிறது. அழுத்தம் அதிகரிக்கிறது என்கிறார்கள். விலங்குகள் ஆராய்ச்சியாளரான ஏமி ஸ்மித், ‘’நேர்மறை எண்ணங்களை விட எதிர்மறை எண்ணங்களை அதிகமாக வெளிப்படுத்துகின்றன குதிரைகள். நீண்ட காலம் மனிதர்களோடு குதிரைகள் வசித்து வந்தாலும் தற்போதுதான் இந்தக் கண்டுபிடிப்பை நிகழ்த்த முடிந்திருக்கிறது’’ என்கிறார்.

குதிரைகளிடம் இனி முறைக்காதீர்கள்…

ஆஸ்திரேலியாவில் வசிக்கும் நோயலா ருகுண்டோ, ஆப்பிரிக்காவின் புருண்டிக்கு கணவர் பலெங்கா கலாலாவுடன் வந்தார். 11 ஆண்டுகளுக்கு முன்பு காங்கோவில் இருந்து அகதியாக வந்தவர் கலாலா. மொழிபெயர்ப்பாளராக அவரைப் பயன்படுத்தினார் நோயலா. பிறகு நட்பு காதலானது. இருவரும் திருமணம் செய்துகொண்டு, 3 குழந்தைகளையும் பெற்றெடுத்தனர்.

‘‘காலப்போக்கில் கலாலாவின் குணம் மிகவும் மூர்க்கமாக மாறியது. ஆனால் என்னைக் கொல்லும் அளவுக்குச் செல்வார் என்று நான் நினைக்கவே இல்லை. ஹோட்டல் அறையில் ஓய்வெடுத்துக்கொண்டிருந்த என்னை, கதவைத் திறந்து வெளியே வருமாறு போன் செய்தார் கலாலா. கதவைத் திறந்தபோது சிலர் துப்பாக்கிகளுடன் நின்றுகொண்டிருந்தனர். என் கண்களைக் கட்டி, நாற்காலியில் அமர வைத்தனர். ஸ்பீக்கர் போன் மூலம் கலாலா என்னைக் கொன்றுவிடும்படிச் சொன்னதைக் கேட்டதும் நொறுங்கிப் போனேன். கொலை செய்ய வந்தவர்கள், பெண்களைக் கொல்வதில்லை என்ற கொள்கையுடையவர்கள்.

அதனால் என்னை 2 நாட்கள் அறைக்குள் அடைத்து வைத்து, விட்டுவிடுவதாகவும் என்னை எங்காவது சென்றுவிடும்படியும் கேட்டுக்கொண்டனர். அங்கே பேசிய அனைத்து விஷயங்களையும் போனில் பதிவு செய்துகொண்டேன். மெல்போர்ன் திரும்பினேன். தேவாலயத்துக்குச் சென்று ஃபாதரிடம் உண்மையை எடுத்துக் கூறினேன். அவர் என்னைப் பக்கத்து வீட்டில் தங்கி, கவனிக்கச் சொன்னார். என் இறுதிச் சடங்குக்கான ஏற்பாடுகளைச் செய்துகொண்டிருந்தார் கலாலா. நள்ளிரவு என் இறுதிச் சடங்கு நடைபெற்றது. காரில் காத்திருந்த நான், வெளியில் வந்தேன். கலாலா அதிர்ச்சியடைந்துவிட்டார். நான் ஏற்கெனவே போலிஸுக்குத் தகவல் கொடுத்திருந்தேன். அவர்கள் கலாலாவைக் கைது செய்து, அழைத்துச் சென்றனர். கொலை முயற்சிக்காக 9 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைத்திருக்கிறது. அவளைக் கொன்றுவிடு என்று என் கணவரே சொன்னதைக் கேட்டு இன்றுவரை அதிர்ச்சியில் உறைந்திருக்கிறேன்’’ என்கிறார் நோயலா.

தன் இறுதிச் சடங்கில் தானே கலந்துகொள்வது எவ்வளவு கொடுமையானது!

நியு யார்க்கில் கடந்த 20 ஆண்டுகளாக இயங்கி வருகிறது பேகெல் ஸ்டோர். உலகின் மிக அழகான பேகெல் இங்கிருந்துதான் கிடைக்கிறது. ‘ரெயின்போ பேகெல்’ என்று அழைக்கப்படும் இந்த அழகான பேகெல் சுவையில் பிரமாதப்படுத்துகிறது. பேகெல் ஸ்டோரின் உரிமையாளரும் ரெயின்போ பேகெலை உருவாக்கியவருமான ஸ்காட் ரோசில்லோ,‘‘இது ஒரு கலை. அதிக நேரம் தேவைப்படும். 5 மணி நேரங்களில் 100 பேகெலை மட்டுமே உருவாக்க முடியும். இதுவே சாதாரண பேகெலாக இருந்தால் 5 ஆயிரம் பேகெலை உருவாக்கி விடமுடியும்’’ என்கிறார். பச்சை, மஞ்சள், சிவப்பு, நீலம் என்று நியான் உணவு வண்ணங்களை இதற்குப் பயன்படுத்துகிறார்கள். ஒவ்வொரு வண்ணத்திலும் தனித்தனியாக மாவு பிசைந்து, தட்டையாகத் தேய்த்து, ஒன்றின் மீது ஒன்று அடுக்கி, வெட்டுகிறார்கள். வெட்டியப் பகுதியை உருளையாக்கி, அவனில் வைத்து எடுத்தால் பேகெல் தயார். இதில் முட்டையோ, பால் பொருட்களோ சேர்ப்பதில்லை. பேகெலின் மீது சீஸ், க்ரீம் வைத்து விதவிதமான சுவைகளில் கொடுக்கிறார்கள். ரெயின்போ பேகெலுக்கு உலகம் முழுவதிலுமிருந்து ஆர்டர்கள் குவிகின்றன. ஆனால் குறைவான அளவிலேயே உற்பத்தி இருப்பதால், எல்லோரும் காத்திருக்க வேண்டும். ஒரு ரெயின்போ பேகெல் 268 ரூபாய்.

அடர் வண்ணங்களில் பார்க்க அழகாக இருந்தாலும் உடலுக்குத் தீங்கு இழைக்காமல் இருந்தால் சரி…



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x