Published : 22 Sep 2016 10:11 AM
Last Updated : 22 Sep 2016 10:11 AM

உலக மசாலா: குகைக்குள் வாழ்க்கை!

சீனாவின் நான்சோங் நகருக்கு அருகில் உள்ள மலைக் குகைக்குள் 54 ஆண்டுகளாக வசித்து வருகிறார்கள் லியாங் ஜிஃபு (81) லி சுயிங்க் (77) தம்பதியர். திருமணமான மூன்றாவது ஆண்டில் இந்தக் குகைக்கு வந்து சேர்ந்தனர். “வறுமை. எங்களுக்கு வீடு இல்லை. வாடகை கொடுக்கவும் வழியில்லாமல் இந்தக் குகைக்கு வந்து சேர்ந்தோம். அப்போது ஏற்கெனவே மூன்று குடும்பத்தினர் இங்கே வசித்து வந்தனர். நாங்களும் ஒரு பகுதியில் எங்கள் வாழ்க்கையை ஆரம்பித்தோம். 4 குழந்தைகள் பிறந்தனர். சில ஆண்டுகளில் மற்ற குடும்பத்தினர் நகருக்குள் குடிபெயர்ந்துவிட்டனர்.

மொத்த குகையிலும் நாங்கள் மட்டுமே வசித்தோம். நானும் மனைவியும் கடுமையாக உழைப்போம். குகைக்கு மேலே எங்களுக்குத் தேவையான காய்கறிகள், பழங்கள், தானியங்களை விளைவித்துக் கொண்டோம். குழந்தைகள் வளர்ந்தனர். நகருக்குள் சென்றுவிடுவோம் என்றனர். பல ஆண்டுகளாக வசித்து வந்த குகையை விட்டு, நகருக்குள் செல்ல எங்களுக்கு விருப்பமில்லை. குழந்தைகள் திருமணம் செய்துகொண்டு நகருக்குச் சென்றுவிட்டனர். ஆனாலும் யாராவது அடிக்கடி வந்து எங்களைப் பார்த்துச் செல்வார்கள். இன்று தூய்மையான தண்ணீர், மின்வசதி போன்றவையும் எங்கள் குகை வீட்டில் இருக்கின்றன. மகன்களோ, பேரன், பேத்திகளோ இல்லாத நேரங்களில்தான் நாங்கள் தனிமையை உணர்கிறோம். மனிதர்களுக்காக ஏங்குகிறோம். மற்றபடி எந்தக் குறையும் இல்லை.

மூன்று படுக்கை அறைகள், சமையலறை, நடுக்கூடம் என்று வசதியாக இருக்கிறது குகை. கோடைகாலத்தில் குளிர்ச்சியாக இருக்கும். குளிர்காலத்தில் இதமாக, வெதுவெதுப்பாக இருக்கும். நாள் முழுவதும் வேலை, ஆரோக்கியமான உணவு என்று வாழ்க்கை நிம்மதியாகவும் சந்தோஷமாகவும் இருக்கிறது. பெரும்பாலான வாழ்க்கை இந்தக் குகையிலேயே கழிந்துவிட்டது. இனி எங்கும் செல்ல வேண்டியதில்லை” என்கிறார் லியாங் ஜிஃபு. இவர்களைப் பற்றிய செய்தி சீன ஊடகங்களில் வலம் வருகிறது.

குகைக்குள் வாழ்க்கை!

அமெரிக்காவின் கென்டகி மாகாணத்தில் இருமுகங்களுடன் கூடிய கன்றுக்குட்டி பிறந்திருக்கிறது. 2 வாய்கள், 2 மூக்குகள், 4 கண்களுடன் இருக்கிறது. ஆனால் இவற்றில் 2 கண்கள் மட்டுமே வேலை செய்கின்றன. நடுவில் சேர்ந்திருக்கும் இரண்டு கண்களில் பார்வை இல்லை. “இரண்டு தலைகளைப் பார்த்ததும் இரட்டைக் கன்றுகளோ என்று நினைத்தோம். ஆனால் இரட்டைத் தலையாகப் பிறந்துவிட்டது. 2 வாய்களிலும் மாற்றி, மாற்றி பாலூட்டுகிறோம்.

குழந்தைகள் அன்பாக கவனித்துக் கொள்கிறார்கள். லக்கி என்று பெயர் சூட்டியிருக்கிறார்கள். மரபணு குறைபாட்டால் பிறந்திருக்கும் இந்தக் கன்றுக்குட்டி, வெகுநாட்கள் உயிருடன் இருக்கப் போவதில்லை என்பதுதான் வருத்தமாக இருக்கிறது. லக்கி மீது அளவற்ற அன்பு செலுத்தி வரும் குழந்தைகளுக்கு இதை எப்படிப் புரிய வைப்பது என்று தெரியவில்லை. கன்றுக்குட்டியைப் பார்ப்பதற்காக தினமும் ஏராளமானோர் வருகின்றனர்” என்கிறார் உரிமையாளர் ஸ்டான் மெக்கபின்.

இருமுகன்!



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x