Published : 23 Oct 2015 10:07 AM
Last Updated : 23 Oct 2015 10:07 AM

உலக மசாலா: கிளி மனிதன்!

பிரிட்டனைச் சேர்ந்த 56 வயது டெட் ரிச்சர்ட்ஸ், தான் வளர்க்கும் செல்லக் கிளிகள் மீது அளவுக்கு அதிகமான அன்பு வைத்திருக்கிறார். அதனால் தன்னையும் கிளி யைப் போலவே மாற்றிக் கொண்டிருக்கிறார். மூக்கை அலகு போலவும் முகத்தில் கிளியைப் போன்று வண்ணங் களையும் டிசைன்களையும் டாட்டூவாகக் குத்தியிருக் கிறார். வெளியே நீட்டிக் கொண்டிருந்த காதுகளை 6 மணி நேரம் அறுவை சிகிச்சை செய்து நீக்கியிருக்கிறார். தற்போது தானும் தன்னுடைய கிளிகளும் ஒரே சாயலில் இருப்பதாகச் சொல்கிறார். இவை தவிர 110 டாட்டூகள், 50 இரும்புக் கம்பிகளையும் வளையங்களையும் பொருத்தியிருக்கிறார்.

‘‘எங்கள் வீட்டில் எல்லி, டீகா, டிம்னா, ஜேக், புபி போன்ற கிளிகள் எல்லாம் ஒரே மாதிரியாக இருந்தன. அவற்றில் நான் மட்டுமே வித்தியாச மாகத் தெரிந்தேன். அதனால்தான் அவற்றைப் போலவே என்னை மாற்றிக்கொண்டேன். முன்பை விட இப்பொழுது என்னை நான் அதிகம் நேசிக்கிறேன். கண்ணாடியில் பார்த்துக்கொண்டே இருக்கிறேன். மிக மிக மகிழ்ச்சியாக வாழ்கிறேன். உலகத்தில் என்னைப் போல் நான் ஒருவனே இருக்கிறேன். குழந்தைகள் எல்லாம் என்னைப் பார்த்து பயந்து ஓடுவார்கள் என்று நினைத்தேன். ஆனால் ஆர்வத்துடன் போட்டோ எடுத்துக்கொள்கிறார்கள்’’ என்கிறார் ரிச்சர்ட்ஸ். பிளாஸ்டிக் சர்ஜரி செய்கிறவர்கள் இப்படிப்பட்ட அறுவை சிகிச்சைகளை மேற்கொள்ளக்கூடாது என்று எதிர்ப்பும் கிளம்பியிருக்கிறது.

என்ன செய்தாலும் நீங்க கிளியாக மாற முடியாது ரிச்சர்ட்ஸ்…

அமெரிக்காவில் வாழும் 27 வயது க்வின் டுவானேவுக்குக் கடந்த வாரம் திருமணம் நடைபெற்றது. 4 நட்சத்திர விடுதியில் மாலை திருமண விருந்து. இந்த விருந்துக்கு வந்திருந்தவர்கள் மணமக்களின் உறவினர்களோ, நண்பர்களோ இல்லை. வீடற்ற ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்.

‘‘என் திருமண விருந்து மிகப் பிரமாதமாக நடைபெற வேண்டும் என்று குடும்பத்தினர் ஏற்பாடு செய்தனர். நான்தான் ஏழைகளுக்கு விருந்து கொடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டேன். 120 விருந்தினர்கள் இதில் கலந்துகொண்டனர். மிகச் சுவையான, வித்தியாசமான உணவுகளைத் தங்கள் வாழ்நாளில் முதல் முறையாகச் சுவைத்தனர். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஒவ்வொருவரின் முகத்திலும் அத்தனை மகிழ்ச்சியைக் கண்டேன். ஆழ் மனத்தில் இருந்து எங்களை உண்மையான மகிழ்ச்சியோடு வாழ்த்தினார்கள். உலகிலேயே மிக உயர்வான செயல் ஏழைகளுக்கு உதவுவதுதான் என்று நான் உணர்ந்துகொண்டேன். என் வாழ்நாளில் மறக்க முடியாத திருமண விருந்து!’’ என்கிறார் க்வின். இந்த விருந்துக்காக 23 லட்சம் ரூபாயைச் செலவு செய்திருக்கிறார்.

‘‘எவ்வளவு நல்ல மனம் படைத்த பெண்ணை நான் மனைவியாகப் பெற்றிருக்கிறேன்’’ என்று பெருமிதம் கொள்கிறார் லேண்டன். முதலில் வீட்டில் உள்ளவர்களும் நண்பர்களும் இந்த விருந்தை ரசிக்கவில்லை என்றாலும் பிறகு மன நிறைவோடு ஏற்றுக்கொண்டனர். க்வினின் சகோதரியும் தன் திருமண விருந்தை ஏழைகளுடன் பகிர்ந்துகொள்ள முடிவு செய்திருக்கிறார்.

கொடுப்பதே இன்பம்!

டான்ஜா ஜான்கோவிக் செர்பியாவில் வசித்து வருகிறார். லியோ என்ற செல்ல நாய் மீது அளவற்ற அன்பு செலுத்தி வருகிறார். லியோவுக்குத் திடீரென்று கடுமையான நோய் தாக்கிவிட்டது. நாயின் உயிரைக் காப்பாற்ற வேண்டும் என்றால் ஏராளமாகச் செலவாகும் என்று மருத்துவர்கள் கூறிவிட்டனர். சேமிப்பு முழுவதையும் லியோவுக்காகச் செலவு செய்துவிட்டார். வீட்டில் இருந்த விலை மதிப்பு மிக்கப் பொருட்களையும் விற்றுவிட்டார். அடுத்த கட்ட சிகிச்சைக்காகத் தன்னுடைய வீட்டை விற்பனை செய்யும் முடிவுக்கு வந்துவிட்டார்.

‘‘என் லியோவுக்காக இந்த வீட்டை விற்பனை செய்கிறேன். யாராவது உடனடியாக வீட்டை வாங்கி, எனக்கு உதவுங்கள். அறுவை சிகிச்சை, பிறகு குறிப்பிட்ட காலம் வரைக்குமான மருத்துவச் செலவுகளுக்கு வீட்டை விற்பதன் மூலம் கிடைக்கும் பணத்தை நம்பி இருக்கிறேன். என் லியோ முழுமையாகக் குணமாகி, வாழ்நாள் முழுவதும் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்பதே என் லட்சியம். பணத்தை என்னால் எப்பொழுது வேண்டுமானாலும் சம்பாதித்துக்கொள்ள முடியும். லியோவின் உயிரைக் காப்பாற்றுவதுதான் முக்கியம்’’ என்கிறார் டான்ஜா. இணையத்தில் இவரின் கோரிக்கையைப் பார்த்து ஏராளமானவர்கள் நன்கொடைகளை அளித்து விட்டனர். தற்போது அறுவை சிகிச்சைக்கு இந்தப் பணம் போதுமானது.

அதிசய மனிதர்!



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x