Published : 18 Apr 2015 10:37 AM
Last Updated : 18 Apr 2015 10:37 AM

உலக மசாலா: கின்னஸ் சாதனைகளுக்குப் பஞ்சமே இல்லை...

சீனாவின் நான்ஜிங் பகுதியில் வசிக்கிறார் காவோ. தினமும் சூயிங்கம் மென்றால் உடல் எடை குறையும் என்ற கட்டுரையைப் படித்தார். சூயிங்கம் மென்றால் ஒரு மணி நேரத்துக்கு 60 கலோரிகள் குறையும் என்றும் ஸ்கிபிங் செய்தால் 10 கலோரிகள்தான் குறையும் என்றும் கட்டுரையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. உடனே எளிதான வழி என்று சூயிங்கம் மெல்ல ஆரம்பித்தார் காவோ. ஒருகட்டத்தில் ஆர்வம் அதிகமாகி தூங்கும் நேரம் தவிர்த்து, மற்ற நேரங்களில் எல்லாம் சூயிங்கத்தை மென்றுகொண்டே இருந்தார். 6 மாதங்களில் அவரது எடை வேகமாகக் குறைந்துவிட்டது. ஆனால் அவரது தாடை இயல்பை விட அகலமாகி விட்டது. கவலையோடு மருத்துவரைச் சந்தித்தார். சூயிங்கம் மென்றால் சாப்பிடும் ஆர்வம் குறைந்துவிடும். அதனால் எடை குறையும். ஆனால் தாடைக்கு அதிக வேலை கொடுப்பதால், அது தன் இயல்பை இழந்து, அகலமாகிவிட்டது. 15 நிமிடங்களுக்கு மேல் சூயிங்கத்தை மென்றால் அது மேலும் மேலும் கடினத் தன்மையாக மாறிவிடும். அதிக அழுத்தத்தைக் கொடுத்து மெல்ல வேண்டும். அதனால் முகத்தில் உள்ள தசைகள் தளர்வடைந்துவிட்டன என்றார் மருத்துவர். ஒடுக்கமாக அழகாக இருந்த தன் முகம் சதுர வடிவில் மாறியதில் அதிர்ச்சியில் இருக்கும் காவோ, பிளாஸ்டிக் சர்ஜரி செய்யும் முடிவில் இருக்கிறார்.

ம்… நினைக்கிறது ஒண்ணு… நடக்கிறது ஒண்ணு…

ஜப்பானின் தென் பகுதியில் இருக்கிறது டாய்ஜி திமிங்கில அருங்காட்சியகம். இங்கே அரிய வகை அல்பினோ டால்பின் வளர்க்கப்பட்டு வந்தது. சட்ட விரோதமாக அருங்காட்சியகத்தில் டால்பின் பிடிக்கப்பட்டிருக்கிறது என்று இயற்கை ஆர்வலர்கள் எதிர்ப்புக் காட்டினர். ஆய்வு செய்வதற்காக ஒரு குழு சென்றது. வெள்ளை அல்பினோ டால்பின் கோபமாகவோ, வருத்தமாகவோ இருக்கும்பொழுது இளஞ்சிவப்பாக மாறுவதைக் கண்டனர். டால்பினைத் தொடர்ந்து கண்காணித்து, மேற்கொண்டு ஆராய்ச்சி செய்ய முடிவு செய்திருக்கிறார்கள்.

அடடா! நிறம் மாறும் டால்பின்!

நியுயார்க்கில் வசிக்கும் பைரன் ஸெலென்கெரும் அவரது மகள் எமிலியும் ஓர் இரவில் மிகவும் பிரபலமாகிவிட்டனர். உலகிலேயே மிக அகலமான நாக்குகளைக் கொண்ட மனிதர்கள் என்ற சாதனையை நிகழ்த்தியிருக்கிறார்கள். பைரனின் நாக்கு 8.6 செ.மீ. அகலத்துடன் காணப்படுகிறது. அதாவது ஐபோன்6 விட 2 செ.மீ. அகலமாக இவரது நாக்கு இருக்கிறது. எமிலியின் நாக்கு 7.3 செ.மீ. அகலமாக இருக்கிறது. உலகிலேயே அகலமான நாக்கு என்று கின்னஸ் சாதனைப் பட்டியலில் பைரன் இடம்பெற்றிருக்கிறார். பெண்களில் உலகிலேயே அகலமான நாக்கு உடையவர் என்ற கின்னஸ் சாதனை எமிலிக்குக் கிடைத்திருக்கிறது. ஒரே குடும்பத்தில் இரண்டு சாதனைகளை நிகழ்த்திய மகிழ்ச்சியில் இருக்கிறது பைரனின் குடும்பம்.

கின்னஸ் சாதனைகளுக்குப் பஞ்சமே இல்லை…

சீனாவின் வுஹான் பல்கலைக்கழகத்தில் சிறிய சீனப் பெருஞ்சுவர் ஒன்றைக் கட்டியிருக்கிறார்கள். 1.6 கி.மீ. தூரத்துக்கு பல்கலைக்கழகத்துக்குள் இந்தச் சுவர் கட்டப்பட்டிருக்கிறது. பல்கலைக்கழகத்தின் ஒவ்வொரு பிரிவையும் இணைக்கும் விதத்தில் சுவர் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. எந்த நேரமும் இங்கே மக்கள் நடமாட்டம் அதிகம் இருப்பதால், போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் விதத்தில் சுவர் கட்டப்பட்டிருப்பதாகச் சொல்கிறார்கள். 4.2 கோடி செலவில் கட்டப்பட்டிருக்கும் மினி சீனப் பெருஞ்சுவர் எல்லோரையும் வசீகரிக்கிறது.

பெரிய சாதனையும் சிறிய சாதனையும் சீனர்களுக்கே!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x