Published : 16 Sep 2015 10:53 AM
Last Updated : 16 Sep 2015 10:53 AM

உலக மசாலா: காஸ்ட்லி கேக்!

பிரிட்டனைச் சேர்ந்த டெப்பி விங்ஹாம் புகழ்பெற்ற ஃபேஷன் டிசைனர். உலகிலேயே மிக விலை உயர்ந்த ஆடை ஒன்றை வடிவமைத்து கவனத்தை ஈர்த்தார். தற்போது உலகிலேயே விலை உயர்ந்த கேக் ஒன்றை உருவாக்கியிருக்கிறார். அரபு நாட்டைச் சேர்ந்த ஒருவரின் மகள் பிறந்தநாள் மற்றும் நிச்சயதார்த்த விழாவுக்காக இந்த கேக்கை உருவாக்கியிருக்கிறார். 6 அடி நீளமும் 450 கிலோ எடையும் கொண்டது இந்த கேக். இதில் 4 ஆயிரம் வைரங்கள் பதிக்கப்பட்டிருக்கின்றன.

மதிப்பு மிக்க 17 அபூர்வ வைரக் கற்களின் விலை மட்டும் 300 கோடி ரூபாய். கறுப்பு, இளஞ்சிவப்பு, மஞ்சள், வெள்ளை வைரக் கற்கள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. 120 கிலோ ஐஸிங்கும் 60 கிலோ சாக்லேட்டும் சேர்க்கப்பட்டிருக்கின்றன. கேக் மீது வைக்கப்பட்டிருக்கும் பொம்மைகள் சாக்லெட்கள் மூலம் கைகளால் உருவாக்கப்பட்டவை. 1,100 மணி நேரங்களைச் செலவிட்டு, 512 கோடி ரூபாய் மதிப்புள்ள கேக்கை டெப்பி உருவாக்கியிருக்கிறார்!

ஐயோ… இந்தப் பணத்தால் எத்தனையோ ஆயிரம் அகதிகளின் துயர் துடைத்திருக்கலாமே!

ஃபேஷன் உலகின் அத்தனை விதிகளையும் தகர்த்து எறிந்திருக்கிறார் 59 வயது யாஸ்மினா ரோஸி. இன்றும் சர்வதேச நிறுவனங்களின் விருப்பத்துக்குரிய மாடலாக இருந்து வருகிறார். பிரான்ஸில் பிறந்த யாஸ்மினா, 28 வயதுக்குப் பிறகுதான் மாடலிங் துறைக்கே வந்தார். அந்த வயதில் தொழில்முறை மாடல்கள் ஓய்வெடுக்கக் கிளம்பினார்கள். 45 வயதில் யாஸ்மினாவுக்கு மிகப் பெரிய திருப்புமுனை ஏற்பட்டது. பிரான்ஸில் இருந்து நியூயார்க் வந்து சேர்ந்தார். மிக முக்கியமான சர்வதேச நிறுவனங்களின் மாடல் ஆகும் வாய்ப்பு கிடைத்தது. இன்று வரை மாடலிங்கில் யாஸ்மினா வின் ஆதிக்கம் குறையவே இல்லை.

‘‘உரம் போடாத இயற்கை உணவுகளையே சாப்பிடுகிறேன். பழங்களும் மாமிச உணவுகளையும் சேர்த்துக்கொள்கிறேன். உடலுக்கும் தலைக்கும் கடுகு எண்ணெய்யைப் பயன்படுத்துகிறேன். வாரம் ஒருமுறை ஆலிவ் எண்ணெய்யுடன் சர்க்கரைக் கலந்து தோலைச் சுத்தம் செய்கிறேன். மிக முக்கியமான விஷயம் அளவான உடற்பயிற்சி மேற்கொள்கிறேன். மருந்துகளை எடுத்துக்கொள்வதில்லை. இயற்கை வழியில் நோய்களைச் சமாளித்து வருகிறேன். புற உடல் 45 வயதைக் காட்டினாலும் மனத்தளவில் நான் இன்னும் 20 வயதிலேயே இருக்கிறேன்’’ என்கிறார் 2 பேரக் குழந்தைகளின் பாட்டியான யாஸ்மினா.

கலக்குங்க யாஸ்மினா!

பிரான்ஸைச் சேர்ந்தவர் 54 வயது கிறிஸ்டியன் ஹாட்டிச். 15 வயதில் கார் விபத்து மூலம் ஒரு கையையும் காலையும் இழந்து விட்டார். ஆனால் இன்று 1,600 மைல்கள் தூரம் சைக்கிளில் சுற்றி வந்து சாதனை படைத்துவிட்டார். கிறிஸ்டியனுக்காகவே சிறப்பாக வடிவமைக்கப்பட்ட சைக்கிள் அது. அவரது மனைவியின் ஊக்கு விப்பில் இந்தச் சாதனையை நிகழ்த்தியிருக்கிறார். ‘‘35 வயதில் தான் சைக்கிள் பழக ஆரம்பித்தேன். மிகத் தாமதமான முயற்சிதான் என்றாலும் இன்று சாதித்துவிட்டேன். வலது கையும் வலது காலும் கடுமையாக உழைத்திருக்கின்றன’’ என்கிறார் கிறிஸ்டியன். அடுத்தது 10 ஆயிரம் மைல்கள் பயணத்துக்குத் தயாராகிக்கொண்டிருக்கிறார்.

அதிசய மனிதர்!

பஹ்ரைன் சந்தையில் இளஞ்சிவப்பு வண்ணம் பூசப்பட்ட பூனை ஒன்றை மீட்டிருக்கிறார்கள் விலங்குகள் நல ஆர்வலர்கள். கடுமையான கோடைக் காலத்தில் செயற்கை வண்ணப்பூச்சு ஒவ்வாமை ஏற்படுத்தி, பூனையை மோசமான நிலைக்குத் தள்ளிவிட்டது. மருத்துவர்கள் வைத்தியம் செய்து வருகிறார்கள். பலமுறை பூனையைத் தண்ணீரில் மூழ்க வைத்து வண்ணத்தைக் கரைத்து வருகிறார்கள். ‘‘மனிதனின் ஆர்வக்கோளாறு ஒரு உயிரைப் பலி வாங்கும் அளவுக்குக் கொண்டு சென்றுவிட்டது. எல்லா உயிரினங்களும் சமமானவை என்பதைப் புரிந்துகொண்டால் இப்படிச் செய்ய மாட்டார்கள்’’ என்கிறார் மருத்துவர்.

ஓர் உயிரோடு விளையாடலாமா?



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x