Published : 02 Nov 2016 11:05 AM
Last Updated : 02 Nov 2016 11:05 AM

உலக மசாலா: காவல் காக்கும் காளைகள்!

ஸ்பெயினைச் சேர்ந்த எமிலியோ சர்வெரோ, பழைய வாகன உதிரி பாகங்கள் விற்பனை செய்யும் தொழிலை நடத்தி வருகிறார். பெரிய பரப்பளவில் அமைந்திருக்கும் இந்த உதிரி பாகங்கள் சேமிப்புக் கிடங்கைப் பாதுகாப்பது அவருக்கு மிகவும் சவாலான விஷயமாக இருந்து வந்தது.

கம்பி வேலிகள் போட்டால், அதை அப்புறப்படுத்திவிட்டு திருடர்கள் உள்ளே நுழைந்து திருடிச் சென்று விடுகின்றனர். உயரமான சுற்றுச் சுவர் கட்டினால், சுவரில் ஓட்டைப் போட்டு திருடர்கள் வந்துவிட்டனர். காவலர்களை நியமித்தார். அதுவும் தோல்வியில் முடிந்தது. சுவரில் அலாரம் வைத்தார். அதுவும் ஒத்துவரவில்லை. மோப்ப நாய்களைக் காவலுக்கு வைத்தார். நாய்களாலும் திருடர்களை ஒன்றும் செய்ய முடியவில்லை.

‘ஒரே ஆண்டில் 7 தடவை திருட்டுச் சம்பவங்கள் நிகழ்த்தப்பட்டபோது மிகவும் களைப்படைந்து விட்டேன். ஏதாவது வித்தியாசமாகச் செய்ய வேண்டும் என்று யோசித்தபோது, சண்டைக் காளைகள் நினைவுக்கு வந்தன. நாய்களுக்குப் பதிலாகக் காளைகளை இறக்கினேன். என்ன ஆச்சரியம்! காளைகள் மிகப் பிரமாதமாகக் காவல் காக்கின்றன. காளைகளின் உறுமலைக் கண்டு, திருடர்கள் உள்ளே நுழைய பயப்படுகிறார்கள். இதுவரை எந்தத் திருட்டுச் சம்பவமும் நடைபெறவில்லை. நிம்மதியாக இருக்கிறேன்’ என்கிறார் எமிலியோ சர்வெரோ.

காவல் காக்கும் காளைகள்!

அமெரிக்காவில் இணையம் பயன்பாட்டுக்கு முன்பு, எந்தச் சந்தேகம் என்றாலும் மக்கள் நியூயார்க் பப்ளிக் லைப்ரரியைத்தான் தொடர்பு கொள்வார்கள்.

இன்று ஒரு சில நொடிகளில் கூகுள் போன்ற தேடு பொறிகளின் மூலம் சந்தேகத்தைத் தீர்த்துக்கொள்ள இயலும். ஆனாலும் நியூ யார்க் பப்ளிக் லைப்ரரிக்குத் தினமும் 300 சந்தேகங்கள் கேட்கப்படுகின்றன. இணையம் பற்றிய சிந்தனை இல்லாத காலத்திலேயே ‘நூலகரிடம் கேளுங்கள்’ என்ற திட்டத்தை அமல்படுத்தியிருக்கிறார்கள்.

இன்றும் 9 நூலகர்கள், உதவியாளர்களைக் கொண்டு, மக்களின் சந்தேகங்களை இணைய தேடு பொறிகளுக்குச் சவால் விடும் அளவுக்குத் தீர்த்து வைக்கிறார்கள். இவர்களை ’மனித கூகுள்’ என்று அழைக்கிறார்கள் மக்கள்.

‘முன்பெல்லாம் கேள்விகள் அதிகம் வரும். அவற்றுக்குப் பதில்களை கஷ்டப்பட்டுத் தேடி அளிப்போம். தற்போது எங்களுக்கு கூகுளும் கை கொடுக்கிறது. அதனால் வேலை எளிதாக இருக்கிறது. தொலைபேசி, இமெயில், குறுஞ்செய்தி என்று பலவிதங்களில் எங்களுக்குக் கேள்விகள் வந்துகொண்டே இருக்கின்றன. கூகுள் சில நொடிகளில் கொடுக்கும் சேவையை நாங்கள் 5 நிமிடங்களில் கொடுத்துவிடுவோம்.

எங்களுக்கு வரக்கூடிய கேள்விகள் எல்லாம் இணையம் பயன்படுத்தாதவர்களிடமிருந்துதான் வருகின்றன. எங்கள் வேகத்தையும் திருப்தியான பதிலையும் கண்டு ஆச்சரியப்படுகிறார்கள். நாங்கள் மனிதர்களா, ரோபோக்களா என்று கேட்கிறார்கள்.

யானை கனவில் வந்தால் என்ன அர்த்தம்?, எலியை எப்படிப் பிடிக்க வேண்டும்? போன்ற கேள்விகள் அதிக அளவில் கேட்கப்படும் கேள்விகளில் சில. இணையத்தில் கேள்விக்கான பதிலைப் பெற முடியும். எங்களிடம் உரையாடவும் முடியும் என்பதால், இணையத்தைப் பயன்படுத்துகிறவர்களும் வருகிறார்கள்’ என்கிறார் நூலகத்தின் மேலாளர் ரோசா லி.

கலக்கும் ’ஹ்யூமன் கூகுள்’

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x