Published : 04 Mar 2015 11:13 AM
Last Updated : 04 Mar 2015 11:13 AM

உலக மசாலா: கால் சிதைந்த யானை!

ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு ஏழு மாதக் குட்டியாக ஓடியாடித் திரிந்துகொண்டிருந்தது மோஷா. ஒருநாள் கண்ணிவெடி மீது கால் வைத்ததில் யானையின் ஒரு கால் சிதைந்து போய்விட்டது. மோஷாவை மேயாவோ தேசியப் பூங்காவுக்கு அழைத்து வந்தனர். அங்கே மருத்துவமும் உணவும் கொடுத்துப் பராமரித்தனர்.

யானைகளுக்கான சிறப்பு மருத்துவமனை தாய்லாந்தில் இயங்கிவருகிறது. அது மோஷாவுக்கு செயற்கைக் கால் பொருத்தும் பணியை மேற்கொண்டது. மிக வேகமாக செயற்கைக் காலைப் பயன்படுத்தக் கற்றுக்கொண்டது மோஷா.

இப்போது நடக்க ஆரம்பித்திருப்பதில் மோஷாவுக்கும் பூங்கா ஊழியர்களுக்கும் எல்லை இல்லா மகிழ்ச்சி.

யானைக்குக் கால் கொடுத்தவர்கள் வாழ்க!

பாரிஸ் நகரில் இருக்கிறது மோனோப்ரிக்ஸ் சூப்பர் மார்கெட். மிகப் பழங்காலத்தைச் சேர்ந்த கட்டிடம் இது. பராமரிப்புப் பணிக்காகத் தரைத் தளத்தைத் தோண்டும்போது வரிசையாக மனித எலும்புக் கூடுகள் வெளிவந்தன. சுமார் 200 எலும்புக் கூடுகள் அங்கே இருப்பதாகக் கண்டுபிடித்திருக்கிறார்கள் தொல்லியல் ஆய்வாளர்கள்.

500 ஆண்டுகளுக்கு முன்பு இவை புதைக்கப்பட்டிருக்கலாம் என்கிறார்கள். எலும்புக்கூடுகளின் மாதிரிகள் ஆய்வுக்கு அனுப்பப்பட்டிருக்கின்றன. முடிவு வந்த பிறகுதான் இவர்கள் எல்லாம் யார், எதற்காக இங்கே புதைக்கப் பட்டிருக்கிறார்கள் என்ற விவரங்கள் எல்லாம் தெரியவரும்.

இனிமேல் அந்த மார்க்கெட்டுக்கு மக்கள் வருவாங்களான்னு தெரியலை…

பெய்ஜிங்கில் இரண்டு அடுக்குமாடி வீட்டுக்குச் சொந்தக்காரரான பிச்சைக்காரர் லீ கைது செய்யப்பட்டிருக்கிறார். 46 வயது லீ, தினமும் நல்ல ஆடைகளை அணிந்து கொண்டு பீய்ஜிங் ஸ்டேஷனுக்குச் செல்கிறார். கழிவறைக்குச் சென்று, பத்து நிமிடங்களில் ஊனமுற்ற பிச்சைக்காரராக வெளியே வருகிறார்.

காலை முதல் மாலை வரை பிச்சை எடுத்துவிட்டு, மீண்டும் தன் ஆடைகளை மாற்றிக்கொள்கிறார். வீட்டுக்கு வந்து வசதியான வாழ்க்கை வாழ்கிறார். சமீப காலமாக கவனித்து வந்த காவல்துறை, லீயைக் கைது செய்து சிறையில் அடைத்திருக்கிறது.

இதுக்கு ஒரு வேலையைச் செஞ்சிட்டுப் போயிருக்கலாம் லீ…

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x