Published : 04 Oct 2016 10:35 AM
Last Updated : 04 Oct 2016 10:35 AM

உலக மசாலா: கால் இல்லாவிட்டாலும் கவலை இல்லை!

சீனாவைச் சேர்ந்த 11 வயது காவோ ஜியு, 2012-ம் ஆண்டு நடந்த கார் விபத்தில் இரண்டு கால்களையும் இழந்துவிட்டான். அவன் தன் நிலையை நினைத்து, முடங்கிப் போய்விடவில்லை. அவனைப் போலவே 13 வயதில் இரண்டு கால்களையும் இழந்த சென் ஜோவுவைப் பார்த்து, நம்பிக்கை கொண்டான். சென் ஜோவு பாடகராகவும் பேச்சாளராகவும் இருக்கிறார். இரண்டு கால்களை இழந்த நிலையிலும் சீனாவில் உள்ள 700 நகரங்களுக்குப் பயணம் செய்திருக்கிறார்! டாய், ஹுவான்ஷான் உட்பட 100 மலைகளில் ஏறியிருக்கிறார்! காவோவின் கதையைக் கேட்ட சென், அவனைத் தான் வசிக்கும் நகருக்கு வருமாறு அழைப்பு விடுத்தார். இருவரும் சேர்ந்து முதல்முறையாக, 900 மீட்டர் உயரமுள்ள மலை மீது ஏறியிருக்கிறார்கள். லாவோஷான் மலையில் இருவர் ஏறிய செய்தி, சீனா முழுவதும் பரவியது. இடுப்புக்குக் கீழே எதுவும் இன்றி, சாதாரண தரைகளில் செல்வதே கடினம். சென்னும் காவோவும் படிகளில் ஏறி, மலை உச்சியை அடைந்திருக்கிறார்கள்!

காவோவுக்கு இனி கவலை இல்லை!

நியுயார்க்கில் வசிக்கும் ஜிம், சூசன் கோவல்ஸிக் தம்பதியர், 22 வயது பழுப்புக் கரடியை வளர்த்து வருகிறார்கள். 635 கிலோ எடை கொண்ட கரடி, ஜிம், சூசனிடம் அன்பாகப் பழகி வருகிறது. தோள் மீது சாய்ந்துகொள்கிறது. நாக்கால், முகத்தை வருடுகிறது. விளையாடுகிறது.

‘உங்களுக்குத்தான் இவன் கரடியாகத் தெரிவான். எங்களைப் பொறுத்தவரை அன்பான மகன். நாம் கொடுக்கும் அன்பைப் போல பல மடங்கு அன்பைத் திருப்பிக் கொடுப்பதற்கு, கரடிகளால் மட்டுமே முடியும். சிறிய குட்டியாக, ஆதரவற்று திரிந்த கரடியை எடுத்து வளர்க்க ஆரம்பித்தோம். இவனிடம் இருந்துதான், கரடிகள் குறித்து ஏராளமான விஷயங்களைக் கற்றுக்கொண்டோம்.

அதற்குப் பிறகு பல ஆதரவற்ற கரடிகளை எடுத்து, வளர்க்க ஆரம்பித்தோம். கரடிகள் இயற்கைச் சூழலில் வளர வேண்டும் என்பதற்காகவே 100 ஏக்கரில் ஒரு பண்ணையை வாங்கினோம். இங்கே காயம் அடைந்த கரடிகளை மீட்டு மருத்துவம் அளிக்கிறோம். பல்வேறு வகையான 11 கரடிகளை நாங்கள் பராமரித்து வருகிறோம். 20 ஆண்டுகளாக இந்தப் பணியைச் செய்து வந்தாலும் கடந்த ஆண்டுதான் தொண்டு நிறுவனமாக இதை மாற்றியிருக்கிறோம். ஒருநாளைக்கு 14 கிலோ உணவுகளைத் தயாரித்து கரடிகளுக்கு வழங்குகிறோம். இறைச்சி, செல்லப்பிராணிகளுக்கான உணவுகள், பழங்களை வழங்கி வருகிறோம். நடுநடுவே மிட்டாய்களையும் கொடுப்பதுண்டு. எங்கள் இருவருக்கும் கரடிகளைப் பராமரிப்பதே முழு நேர வேலையாக மாறிவிட்டது’ என்கிறார் ஜிம்.

கரடிகளை அரவணைக்கும் தம்பதியர்!

சிரியாவில் நடைபெற்று வரும் போரில், இடிபாடுகளுக்கு இடையே 4 மாதப் பெண் குழந்தையை மீட்புக் குழுவினர் மீட்டெடுத்த காட்சி உலகை மீண்டும் ஒருமுறை உலுக்கியிருக்கிறது. காயம் அடைந்த வஹிதாவை மீட்டவர், தாங்க முடியாமல் கதறி அழுதார். பிறகு வஹிதா, அவள் அப்பாவிடம் ஒப்படைக்கப்பட்டாள். மனைவியும் முதல் மகளும் போரில் கொல்லப்பட்டுவிட, வஹிதாவைக் கண்டு சற்று ஆறுதல் அடைந்திருக்கிறார் யாயா மாடொக்.

சே... இரக்கமற்ற போர்கள்…

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x