Published : 04 Dec 2016 11:56 AM
Last Updated : 04 Dec 2016 11:56 AM

உலக மசாலா: கால்களால் உலகைச் சுற்றி வந்த யாத்ரிகர்!

ஸ்பெயினைச் சேர்ந்த ஜோஸ் அன்டானியோ கார்சியா, புனித யாத்ரிகர். கடந்த 11 ஆண்டுகளில் 1,07,000 கிலோ மீட்டர் தொலைவை நடந்தே கடந்திருக்கிறார். ஓசியானியாவைத் தவிர்த்து, அனைத்துக் கண்டங்களிலும் உள்ள புனிதத் தலங்களைப் பார்வையிட்டிருக்கிறார். மாலுமி என்பதால் வாழ்க்கையின் பெரும்பகுதியைக் கடலிலேயே கழித்திருக்கிறார் ஜோஸ். ‘1999-ம் ஆண்டு 17 மாலுமிகளுடன் கடலில் பயணம் செய்துகொண்டிருந்தபோது மோசமான விபத்து ஏற்பட்டது. அதில் நான் மட்டுமே உயிர் பிழைத்தேன். என்னைச் சுற்றிலும் இறந்த உடல்கள். மீட்புக் குழுவினரால் மீட்கப்பட்டேன். அந்த நிமிடம் கடவுள் நம்பிக்கையாளராக மாறிப் போனேன். மதங்களைக் கடந்து, உலகின் அத்தனைப் புனிதத் தலங்களையும் தரிசிப்பதாக உறுதி எடுத்துக்கொண்டேன். உயிர் பிழைத்தாலும் உடல் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டிருந்தது. 8 மாதங்கள் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றேன். இறுதியில் என் கால்களால் வாழ்நாள் முழுவதும் நடக்க முடியாது என்று மருத்துவர்கள் கூறிவிட்டனர். அடுத்து 2 ஆண்டுகள் சக்கர நாற்காலியில் கழிந்தன. ஏதோ ஒரு நம்பிக்கையில் ஊன்றுகோலை வைத்து நடக்க முயற்சி செய்தபோது இன்னொரு அதிசயம் நிகழ்ந்தது. என் கால்கள் பழைய நிலைக்குத் திரும்பின. உடனே புனிதத் தலங்களைத் தரிசிக்கக் கிளம்பிவிட்டேன். எங்கள் நாட்டில் உள்ள விர்ஜின் பாத்திமாவைத் தரிசித்து, ரோமுக்குச் சென்றேன். ஐரோப்பிய நாடுகளில் உள்ள ஏராளமான புனிதத் தலங்களைப் பார்வையிட்டேன். ஆசியாவில் துருக்கி, இஸ்ரேல், சிரியா, கஸகிஸ்தான், திபெத், இந்தியா என்று ஒரு சுற்று முடித்தேன். பிறகு ரஷ்யா, வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா என்று கடந்தபோது 11 ஆண்டுகள் ஆகிவிட்டிருந்தன. புத்தம், இஸ்லாம், கிறிஸ்தவம், இந்து என்று பல்வேறு மதங்களைச் சேர்ந்த ஆயிரம் புனிதத் தலங்களைப் பார்த்திருக்கிறேன். ஐரோப்பிய நாடுகளிலேயே என் சேமிப்பு கரைந்துவிட்டது. பிறகு மக்களின் உதவியோடுதான் பயணங்களைத் தொடர்ந்தேன். இந்தப் பயணங்களில் ஓர் உண்மையைக் கண்டறிந்தேன். ஏழை நாடுகளில் வசிக்கும் ஏழை மக்கள், தாங்கள் பசியோடு இருந்தாலும் இருக்கும் உணவைப் பிறருடன் மகிழ்ச்சியாகப் பகிர்ந்துகொள்கிறார்கள். அவர்களின் பெருந்தன்மைக்கு எதுவும் ஈடாகாது. என் குடும்பம் எனக்கு ஆதரவாக இருக்கிறது. இனி எஞ்சிய காலங்களை எளியவர்களுக்கு உதவுவதில் செலவிடுவேன்’ என்கிறார் 67 வயது ஜோஸ் அன்டானியோ.

கால்களால் உலகைச் சுற்றி வந்த யாத்ரிகர்!

லிபோர்னியாவில் ஜுஜு என்ற 2 வயது ஜெர்மன் ஷெப்பர்ட் நாய், விலங்குகள் காப்பகத்தால் மீட்கப்பட்டது. பிறகு நாயின் உரிமையாளருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்களைக் கண்டதும் ஜுஜு மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தது. ஆனால் உரிமை யாளர்களோ, ஜுஜு சொல் பேச்சைக் கேட்காமல் பக்கத்து வீட்டுக்குள் குதித்துவிட்டதால், வேறொரு நாயைத் தத்தெடுத்துக்கொள்வதாகச் சொல்லிவிட்டனர். தன்னை அழைத்துச் செல்வார்கள் என்று காத்திருந்த ஜுஜு, இன்னொரு நாய் அழைத்துச் செல்லப்பட்டதைப் பார்த்துக் கண்ணீர் விட்டது. ‘ஜுஜு மிகவும் புத்திசாலியான, அன்பான, சொல் பேச்சுக் கேட்கக்கூடிய, ஆரோக்கியமான நாய். ஏன் இப்படிச் செய்தார்கள் என்று புரியவில்லை. ஆனால் ஜுஜு அவர்களுக்காகத் தவிப்பதைப் பார்க்க முடியவில்லை’ என்கிறார் காப்பகத்தில் வேலை செய்யும் டேசி லாரா.

தவிக்கும் நாய்…

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x