Published : 22 Apr 2017 08:44 AM
Last Updated : 22 Apr 2017 08:44 AM

உலக மசாலா: கார் மீது கார்கள்!

மலேசியாவைச் சேர்ந்த 34 வயது மஹாடி பட்ருல் ஜமான் தொழிலதிபராக இருக்கிறார்.

13 வயதிலிருந்தே இவருக்கு பொம்மை கார்களைச் சேகரிக்கும் பழக்கம் இருந்தது. படித்து, தொழிலதிபராகி, சொந்தமாக ஆடம்பர கார் வாங்கியபோதும் பொம்மை கார் மீதுள்ள ஆர்வம் மட்டும் குறையவே இல்லை. 5,000 பொம்மை கார்களை என்ன செய்வது என்று யோசித்தவர், தன்னுடைய விலை மதிப்புமிக்க காரின் மேல் ஒட்டி விட்டார்.

சிவப்பு, நீலம், பச்சை, மஞ்சள், கறுப்பு என்று பல வண்ணங்களில் 4,600 கார்கள் ஒட்டப்பட்டிருக்கின்றன. கண்ணாடி, விளக்குகள், சக்கரங்களைத் தவிர எல்லா இடங்களிலும் கார்கள் இருக்கின்றன. “பொம்மை கார்களை ஒட்டியதால் இரண்டு பிரச்சினைகள் தீர்ந்தன. இத்தனை பொம்மை கார்களை வைத்து என்ன செய்யப் போகிறாய் என்று எல்லோரும் கேட்டுக்கொண்டிருந்தனர். பொம்மை கார்களைப் பார்த்துக்கொண்டே இருக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்குள் எப்பொழுதும் இருந்தது.

இதில் மிக முக்கியமான விஷயம், நான் மற்றவர்களிடமிருந்து வித்தியாசமாகவும் தெரிகிறேன். பலரும் காருக்காகவே என்னைத் தேடி வருகின்றனர். பத்திரிகைகள், தொலைக்காட்சிகளில் பேட்டி வந்ததால் பிரபலமாகி விட்டேன். இப்போது காரைச் சுத்தம் செய்வது மிகவும் கடினமானது. எங்காவது காரை நிறுத்திவிட்டுச் சென்றால், பொம்மை கார்களை யாராவது பிய்த்துக்கொண்டு சென்றுவிடுவார்களோ என்று பயமாக இருக்கிறது” என்கிறார் மஹாடி ஜமான்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x