Published : 05 Jun 2015 11:16 AM
Last Updated : 05 Jun 2015 11:16 AM

உலக மசாலா: கவர்ச்சியில்லாத ஃபேஸ்கினி

சீனாவில் ஃபேஸ்கினி என்ற முகமூடி பிரபலமாகி வருகிறது. நைலானில் செய்யப்பட்ட இந்த முகமூடியில் கண்கள், மூக்கு, வாய்க்கு மட்டும் துளைகள் இருக்கும். கடலில் நீந்துபவர்களுக்காக வும் கடற்கரைகளில் ஓய்வெடுப்பவர்களுக்காகவும் பிரத்யேகமாக இந்த முகமூடிகள் தயாரிக்கப்படுகின்றன. இவற்றை அணிந்துகொண்டால் சூரியனில் இருந்து வரும் கதிர்களிடமிருந்தும் ஜெல்லிமீன்களின் கொடுக்குகளிடமிருந்தும் தப்பி விடலாம். பெண்கள்தான் முகமூடிகளை விரும்பி அணிகிறார்கள். 2006ம் ஆண்டு உருவான ஃபேஸ்கினி, அவ்வளவாகக் கவரக்கூடிய வகையில் இல்லை. பல்வேறு முயற்சிகளுக்குப் பிறகு கண்கவர் வண்ணங்கள், டிசைன்களில் இன்று முகமூடிகள் கிடைக்கின்றன.

யார் முகத்தையும் யாராலும் பார்க்க முடியாது…

பிரிட்டனில் வசிக்கிறார் அன்ஜி பார்லோ. அதிகமாகப் புகைப் பிடித்ததால் பத்தாண்டுகளுக்கு முன்பு பார்லோவுக்குப் பற்கள் விழ ஆரம்பித்தன. பல் மருத்துவரிடம் சென்று வேறு பற்களைக் கட்டிக்கொள்ள அவர் விரும்பவில்லை. உடைந்த பற்களை சூப்பர்க்ளூ என்ற பசையைக் கொண்டு ஒட்டிக்கொண்டார். ஒட்டப்பட்ட பற்களால் எதையும் கடிக்க முடியாது. இயல்பாகப் பேச முடியாது. வாயை மூடிக்கொண்டே அளவாகப் பேசுவார், சிரிப்பார். 10 ஆண்டுகள் பசையால் ஒட்டப்பட்ட பற்களாலேயே வாழ்ந்துவிட்டார். இன்று நிலைமை மோசமடைந்துவிட்டது. வேறு வழியின்றி பல் மருத்துவரிடம் சென்றார். ’’பசையில் இருந்த ரசாயனம் அவரது தாடை எலும்புகளை 90 சதவிகிதம் பாழாக்கிவிட்டது’’ என்கிறார் பார்லோவின் மருத்துவர். ‘’என் அம்மாவுக்குத் தொண்டையில் புற்றுநோய் வந்துவிட்டது. அவரது பற்கள் எல்லாம் விழுந்துவிட்டன. அந்த அதிர்ச்சியில் எனக்குப் பல் மருத்துவரிடம் செல்வதென்றாலே பயமாக இருக்கும்’’ என்று வருந்துகிறார் பார்லோ. அறுவை சிகிச்சை செய்து 12 புதிய பற்களைப் பொருத்த இருக்கிறார் மருத்துவர். இதற்கென்று 16 லட்சம் ரூபாய் செலவாக இருக்கிறது. தன்னுடைய வாழ்நாள் சேமிப்பு முழுவதையும் பற்களுக்குக் கொடுக்க இருக்கிறார் பார்லோ.

பயம் வந்திருந்தால் புகைப்பதைத் தானே விட்டிருக்கணும்?

அமெரிக்கத் தொழிலதிபர் ஜெரேமியா ராபெர். ஆண்களுக்கான குண்டு துளைக்காத இடுப்புக் கவசம் ஒன்றை உருவாக்கியிருக்கிறார். நட்ஷெல்ஸ் என்று பெயரிடப்பட்ட இந்தக் கவசத்தின் மீது யார் வேண்டுமானாலும் துப்பாக்கியால் சுட்டு, பரிசோதனை செய்துகொள்ளலாம். ஒருவேளை குண்டு துளைத்துவிட்டால் தன்னுடைய அத்தனை சொத்துகளையும் தந்துவிடுவதாகச் சவால் விட்டார் ஜெரேமியா. பரிசோதனையில் இடுப்புக் கவசம் வெற்றி பெற்றுவிட்டது. இதன் மூலம் நட்ஷெல்ஸ் உலகிலேயே மிகவும் உறுதியான ’இடுப்புக் கவசம்’ என்ற பெயரைப் பெற்றுவிட்டது.மார்ஷியல் கலைஞர்கள், குத்துச் சண்டை வீரர்கள், பைக் ரேஸ் வீரர்கள் போன்ற விளையாட்டு வீரர்கள் மட்டுமின்றி, காவலர்கள், ராணுவ வீரர்களுக்கும் இந்த இடுப்புக் கவசம் பயன்படும் என்கிறார் ஜெரேமியா. இந்தக் கண்டுபிடிப்புக்காக இதுவரை ஒண்ணே கால் கோடி ரூபாய் செலவு செய்திருக்கிறார் ஜெரேமியா.

உயிர் காக்கும் கவசம்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x