Published : 05 Feb 2016 10:39 AM
Last Updated : 05 Feb 2016 10:39 AM

உலக மசாலா: கழுகு வானூர்தி!

தானாக இயங்கும் சிறிய வான் ஊர்திகளைப் பல்வேறு காரணங்களுக் காக உலகம் முழுவதும் பறக்க விட்டுக்கொண்டிருக்கின்றனர். ராணுவம், போக்குவரத்து, எல்லைப் பாதுகாப்பு போன்ற துறைகளில் இந்த வானூர்திகளின் பங்களிப்பு மகத்தானது. ஆனால் இன்று தனி மனிதர்கள்கூட இந்த வானூர்திகளைப் பயன்படுத்த ஆரம்பித்துவிட்டனர். அதுவும் வேண்டாதவர்களைக் கண்காணிக்க, அவர்களின் செயல்களைத் தெரிந்துகொள்ள என்று தவறான வழிகளில் வானூர்திகளைப் பயன்படுத்த ஆரம்பித்துவிட்டனர். இதனால் வானில் சிறிய வானூர்திகளின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது.

தேவையற்ற வானூர்திகளைக் கட்டுப்படுத்தவும் செயலிழக்கச் செய்யவும் பல்வேறு நாடுகளில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. டச்சு காவல்துறை இந்தப் பிரச்சினையைச் சமாளிக்க கழுகின் உதவியை நாடியிருக்கிறது. கழுகுகளுக்குப் பயிற்சியளித்து, வானில் பறந்துகொண்டிருக்கும் தேவையற்ற தானியங்கி வானூர்திகளை அழிக்க ஆரம்பித்திருக்கின்றனர். இயற்கையிலேயே கழுகுகளுக்கு வேட்டையாடுவதில் ஆர்வம் அதிகம். வானில் பறந்துகொண்டிருக்கும் சிறிய வானூர்திகளைக் கால்களால் பிடித்து, உறுதியான அலகால் உடைத்து எறிந்துவிடுகின்றன கழுகுகள்.

தற்போது பரிசோதனை முயற்சிகளில்தான் கழுகுகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. 2 மாதங்களில் இந்த முயற்சி சிறந்ததா, இல்லையா என்பது தெரிந்துவிடும். சிறிய வானூர்திகள் என்றால் கழுகுகளுக்குப் பிரச்சினை இல்லை. சற்றுப் பெரிய வானூர்திகள் என்றால் கழுகுகளின் கால்களும் அலகுகளும் பாதிப்புக்கு உள்ளாக நேரிடும். அதனால் தொழில்நுட்ப முறையில் புதிய கருவியை உருவாக்கி, இந்த வேலையைச் செய்ய வேண்டும்.

பாவம், கழுகுகளை இந்தப் பணியிலிருந்து விடுவிப்பதுதான் நல்லது…

சீனாவின் குவாங்டோங் மாகாணத்தில் இருந்து கிளம்ப வேண்டிய சீன விமானம், பனிப்புயல் காரணமாகத் தாமதமானது. நேரம் செல்லச் செல்ல, அந்த விமானத்தில் பயணம் செய்ய இருந்த பயணிகள், வேறு விமானங்களில் ஏறிச் சென்றுவிட்டனர். 10 மணி நேரங்களுக்குப் பிறகு விமானம் கிளம்பத் தயாரானது. ஆனால் ஸாங் என்ற ஒரே ஒரு பெண் பயணி மட்டுமே எஞ்சியிருந்தார். அவர் ஒருவரை மட்டும் ஏற்றிக்கொண்டு, விமானம் பறந்தது. எதிர்பாராமல் தன் ஒருவருக்காகப் பறந்த விமானத்தைக் கண்டு ஸாங் மகிழ்ச்சியின் எல்லைக்கே சென்றார். பயணம் முழுவதும் தன் அனுபவங்களை வீடியோ எடுத்தார். விமானப் பணிப்பெண்களுடன் புகைப்படங்கள் எடுத்துக்கொண்டார். பைலட்டுடன் ஆரஞ்சுப் பழங்களைப் பகிர்ந்துகொண்டார். பல்வேறு இருக்கைகளில் உட்கார்ந்து பார்த்தார். விமானத்தில் இருந்த அத்தனை விஷயங்களையும் பயன்படுத்திப் பார்த்தார். கீழே இறங்கியதும் தன்னுடைய வீடியோவை இணையத்தில் வெளியிட்டார்.

எரிபொருள், செலவு, மனித உழைப்பு எல்லாம் வீணாக்கியதற்கு பதில், சேவையை நிறுத்தியிருக்கலாம்…

ஸ்வீடனில் வசிக்கும் மேரி க்ரான்மரும் சார்லஸ் சசிலோடோவும் தங்கள் வீட்டைச் சுற்றி கண்ணாடிக் கூண்டை அமைத்துவிட்டனர். ஸ்வீடனில் பொதுவாக 27 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் நிலவுகிறது. ஆண்டு முழுவதும் வெப்பம் குறைவாக இருக்க வேண்டும் என்பதற்காகத் தங்கள் வீட்டைச் சுற்றிப் பிரமாண்டமான கண்ணாடிகளைப் பொருத்தியிருக்கிறார்கள். இது பசுமைக் குடில் தோற்றத்தைத் தருகிறது.

‘‘ஆண்டு முழுவதும் நாங்கள் இங்கே வசிக்கப் போவதில்லை. கோடை காலத்தில் மட்டுமே இங்கே வரப் போகிறோம். அப்பொழுது இதமான சூழல் நிலவ வேண்டும் என்பதற்காகவே கண்ணாடியைப் பொருத்தியிருக்கிறோம். இப்படிச் செய்ததால் கணிசமான அளவில் வெப்பம் குறைகிறது. எங்கள் வீட்டை எங்களுக்குப் பிடித்தமான விதத்தில் வடிவமைத்துக்கொண்டோம். சூரிய வெளிச்சம் குறைவாக வீட்டுக்குள் வரும். இதமான வெப்பம் நிலவும். குளிர் காலத்தில் குளிரும் அதிகம் தாக்காது. கண்ணாடிக்குள்ளேயே தக்காளி, வெள்ளரி, திராட்சை, மூலிகை என்று எங்களுக்குத் தேவையான உணவுகளை உற்பத்தி செய்துகொள்கிறோம். இது தரமான, உடையாத கண்ணாடி என்பதால் பாதுகாப்பு குறித்தும் கவலை இல்லை’’ என்கிறார் மேரி.

நம் ஊர் கற்களுக்கு கண்ணாடி வீடு எல்லாம் தாக்குப் பிடிக்க முடியாது!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x