Published : 06 Aug 2015 10:40 AM
Last Updated : 06 Aug 2015 10:40 AM

உலக மசாலா: கறுப்பு கோழிக் கறி!

உலகிலேயே மிக அதிக விலை கொண்ட கோழி அயாம் சிமானி. இந்தோ னேஷியாவில் வளர்க்கப்படும் இந்தக் கோழிகளின் உடல் காகத்தைப் போன்று கறுப்பாக இருக்கின்றன. உடல் மட்டு மல்ல, கோழியின் தோல், இறைச்சி அனைத்தும் கறுப் பாகவே காணப்படுகிறது. மரபணுவிலேயே மெலனின் குறைபாடு இருப்பதால் கோழி யின் நிறம் கறுப்பாக இருக் கிறது. ஆனால் இந்த அரிய வகை கோழிக்கு மருத்துவம், ஆன்மிகக் காரணங்களைக் கூறி வருவதால் விலை அதிகமாகிவிட்டது. வசதி படைத்தவர்கள் மட்டுமே அயம் சிமானி கோழியின் இறைச்சியை உண்ண முடியும். ஒருநாள் வயதான கோழிக் குஞ்சு 13 ஆயிரம் ரூபாய். முதிர்ந்த கோழி 64 ஆயிரம் ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. குறிப்பிட்ட சூழலில் வளர்க்க வேண்டியிருப்பதால், ஆண்டுக்கே சில நூறு கோழிகள் மட்டுமே ஒரு பண்ணையில் இருந்து விற்பனை செய்யப்படுகின்றன.

கறுப்புக்கு மதிப்பு!

பிரிட்டனில் வசித்து வந்தார் 75 வயது கில் பாரோ. செவிலியராகப் பணியாற்றி, ஓய்வு பெற்றவர். ஆரோக்கியமான உடல் நிலையுடன் இருந்தார். குழந்தைகள், வாழ்க்கைத் துணைவர் என்று நிம்மதியான குடும்பம். ஆனாலும் கில் பாரோவுக்கு இயற்கை மரணத்தின் மேல் ஆர்வம் இல்லை. இன்னும் வயதாகி, குழந்தைகளையும் கஷ்டப்படுத்தி வாழ வேண்டுமா என்று நினைத்தார். இதுவரை வாழ்க்கையில் யாரையும் எதிர்பார்க்காமல் சொந்தக் காலில் வாழ்ந்தவரால், முதுமையில் பிறரின் உதவியை எதிர்பார்த்து இருக்க வேண்டிய சூழலைக் கற்பனையில் கூட ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

ஸ்விட்சர்லாந்தில் தற்கொலைக்கான க்ளினிக் இயங்கி வருகிறது. அந்நாட்டுச் சட்டப்படி இது அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது. தற்கொலை க்ளினிக்கில் விருப்பம் உள்ளவர்கள் வந்து தங்களைப் பதிவு செய்துகொள்ள வேண்டும். அவர்கள் அமைதியான மரணத்தை அடைய இந்த க்ளினிக் உதவுகிறது. பெரும்பாலும் நோயாளிகள், வயதானவர்கள் இங்கே வந்து தங்கள் வாழ்க்கையை முடித்துக்கொள்கிறார்கள். கில் பாரோவும் அந்த முடிவை எடுத்தார். ஆனால் குடும்பத்தினர் எதிர்ப்புத் தெரிவித் தனர். ‘‘ சந்தோஷத்தோடு மரணம் அடைவதை விட வேறு என்ன வேண்டும்? வயதாகி, சந்தோஷத்தை இழந்து, பிறரின் உதவியை எதிர்பார்த்து, குற்றவுணர்வுடன் வாழ்வதைக் காட்டிலும் தற்கொலை மரணம் நல்லது’’ என்றார் கில் பாரோ.

டாக்டர் மைக்கேல் இர்வின், கில் பாரோ போன்றவர்களின் முடிவு தவறானது அல்ல. வயதான காலத்தில் ஒருவர் சுயநினைவுடன் எடுக்கும் முடிவை ஆதரிக்கத்தான் வேண்டும் என்கிறார். 2008 முதல் 2012 வரை பிரிட்டனில் இருந்து ஸ்விட்சர்லாந்து சென்று 611 முதியவர்கள் மரணத்தைத் தழுவியிருக்கிறார்கள். கில் பாரோவும் குடும்பத்தினருடன் விருந்து சாப்பிட்டு, செய்ய வேண்டிய வேலைகளை எல்லாம் முடித்துக்கொண்டு, ஸ்விட்சர்லாந்து சென்றார். ஜூலை 12 அன்று அவர் மருத்துவர்களின் உதவியோடு மரணம் அடைந்துவிட்டார்.

பிறப்பைப் போல மரணமும் இயற்கையாக வருவதுதான் நியாயமானது...

சீனாவில் வசிக்கிறார் 30 வயது லியு ஹைபின். வித்தியாசமான அப்பாவாக இருக்கிறார். குழந்தைகள் விளையாடும் விளையாட்டுகளில் ஒன்று சீசா. உலகிலேயே மிக நீளமான சீசாவை லியு உருவாக்கியிருக்கிறார். டெங்ஸோவ் நகரில் லியுவின் மனைவி 8 மாத மகனுடன் வசித்து வருகிறார். 730 மைல்களுக்கு அப்பால் ஸியாமென் நகரில் லியு வசித்து வருகிறார். இரண்டு இடங்களிலும் பெரிய சீசாவை உருவாக்கி வைத்திருக்கிறார். சீசா பலகையின் நடுவில் பெரிய திரை பொருத்தப்பட்டிருக்கிறது. அதில் இண்டெர்நெட் வசதி செய்யப்பட்டிருக்கிறது.

ஒரே நேரத்தில் இரண்டு இடங்களிலும் ரிமோட் மூலம் திரையை இயக்கினால் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ள முடியும். சீசாவின் ஒருமுனையில் மகனும் மறுமுனையில் லியுவும் உட்கார்ந்து விளையாடுகிறார்கள். இந்தக் காட்சி திரையில் தெரியும்போது குழந்தை, அப்பா தன்னோடு விளையாடுவதாக நினைத்துக்கொள்கிறான். ‘

‘குழந்தைகளுக்கு அப்பாவோடு விளையாடுவது மிகவும் மகிழ்ச்சியானது. தொலைவைக் காரணம் காட்டி, அந்த மகிழ்ச்சியை என் மகனுக்கு அளிக்காமல் இருப்பதில் எந்தவித நியாயமும் இல்லை. நானே இந்த சீசாவை உருவாக்கியிருக்கிறேன். பிற்காலத்தில் என் மகன், அப்பா எனக்காகச் சீக்கிரம் வீட்டுக்கு வந்து சீசா விளையாடுவார் என்று சொல்லும் நாள் என் வாழ்வின் மகத்தான தருணம்’’ என்கிறார் லியு.

இப்போ உலகமே பாராட்டுது, நாளை மகனும் பாராட்டுவான் லியு!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x