Published : 02 May 2015 11:24 AM
Last Updated : 02 May 2015 11:24 AM

உலக மசாலா: கட்டிப்பிடி வைத்திய விடுதி!

உலகிலேயே மிக நட்பான உணவு விடுதியில் காலை, மதிய உணவுகளுடன் கட்டிப்பிடி வைத்தியமும் செய்யப்படுகிறது. அமெரிக்காவில் வசிக்கும் டிம் ஹாரிஸ்தான் இந்த நட்பு விடுதிக்குச் சொந்தக்காரர். 2010-ம் ஆண்டிலிருந்து உணவு விடுதியை நடத்தி வருகிறார். இதுவரை 19 ஆயிரம் கட்டிப்பிடிகளை நிகழ்த்தியிருக்கிறார். “கலோரி இல்லாத, சந்தோஷத்தைக் கொடுக்கக்கூடிய ஒரே மெனு கட்டிப்பிடித்தல்தான்.

இங்கே சாப்பிட வருகிறவர்களுக்கு இலவசமாக இந்தச் சேவையை அளிக்கிறேன். இதன் மூலம் எனக்கும் மகிழ்ச்சி, என் வாடிக்கையாளர்களுக்கும் மகிழ்ச்சி’’ என்கிறார் டிம். அமெரிக்காவிலேயே டவுன் சிண்ட்ரோமால் பாதிக்கப்பட்ட ஒருவர் நடத்தும் உணவு விடுதி இதுதான். 26 வயது டிம் உணவு விடுதியை நடத்துவதுடன் பல்வேறு திறமைகளையும் பெற்றிருக்கிறார்.

நன்றாகப் படகு செலுத்துவார், பிரமாதமாக மீன் பிடிப்பார். சிறப்பு ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்று பரிசுகளைப் பெற்றிருக்கிறார். “என் குறை தெரியாமல் வளர்த்து, பல திறமைகளை வெளிச்சம் போட்டுக் காட்டிய என் தந்தைதான் என் ரோல் மாடல்’’ என்கிறார் டிம். இந்த உணவு விடுதியில் சிறப்புக் குழந்தைகளுக்கும் அவர்களது பெற்றோருக்கும் ஆலோசனைகளும் வழிகாட்டல்களும் வழங்கப்படுகின்றன.

நீங்களும் மற்றவர்களுக்கு ரோல் மாடல்தான் டிம்!

சிலியைச் சேர்ந்த பெர்னர்டா கலார்டோ என்ற பெண் இறந்த குழந்தைகளைத் தத்தெடுக்கிறார்.குப்பைகளில் தூக்கி எறியப்படும் இறந்து போன குழந்தைகளை எடுத்து, இறுதிச் சடங்கு செய்து, அஞ்சலி செலுத்தி, அடக்கம் செய்கிறார். 12 ஆண்டுகளுக்கு முன்பு செய்தித் தாளில் ஒரு குழந்தை குப்பையில் வீசப்பட்ட செய்தியைப் படித்தார் கலார்டோ. இதுபோன்று கைவிடப்பட்டு இறந்து போகும் குழந்தைகளுக்கு இறுதிச் சடங்கு செய்வது சிலி நாட்டில் அத்தனை எளிதான காரியம் இல்லை. குழந்தையைத் தத்தெடுத்தால்தான் இறுதிக் காரியம் செய்ய முடியும்.

அதனால் இறந்த குழந்தைகளைத் தத்தெடுத்து முறையாக அடக்கம் செய்கிறார். ஒவ்வொரு குழந்தையையும் தத்தெடுத்து பெயரும் சூட்டுகிறார். “விருப்பம் இல்லாமல் குழந்தை பெற்றுவிட நேர்ந்தால் குழந்தைக்காகக் காத்திருப்பவர்களிடம் தத்து கொடுத்துவிடுங்கள். ஓர் உயிரை இப்படி மோசமாகக் கொல்வதோ, தூக்கி எறிவதோ கொடூரமான காரியம். குடும்பத்தினராலேயே பாலியல் பலாத்காரத்துக்குப் பலியாகும் பெண்கள் வெளியே சொல்ல முடியாமல் இதுபோன்ற காரியங்களில் ஈடுபட்டு விடுகின்றனர்’’ என்கிறார் கலார்டோ. இவரும் பாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்டவர். 17 வயதில் அந்தக் கொடுமை நிகழ்ந்தபோது அவரது நண்பர்கள்தான் அவரையும் குழந்தையையும் காப்பாற்றினார்கள்.

அற்புதமான தாய்!

அமெரிக்காவைச் சேர்ந்த பீ வீ பம்ஸ் என்ற நிறுவனம் குழந்தைகளுக்கான ஷூக்களை வடிவமைத்திருக்கிறது. இந்தப் பிரத்யேக ஷுக்களில் ஹீல்ஸ் உயரமாக அமைக்கப்பட்டுள்ளது. `உங்கள் குழந்தைகளின் முதல் ஃபேஷன் ஸ்டேட்மெண்ட் எங்களுடையதாக இருக்க வேண்டும்’ என்று விளம்பரம் செய்கின்றனர். ஒன்று, இரண்டு வயது குழந்தைகளுக்கு ஹீல்ஸுடன் கூடிய ஷூக்கள் மிகவும் ஆபத்தானவை.

நடை பயில ஆரம்பிக்கும் குழந்தைகளுக்கு நடையே ஒரு சவாலாக இருக்கும். அதில் ஹீல்ஸ் ஷூ போட்டுக்கொண்டு நடப்பது தேவையில்லாதது. குழந்தையிலேயே பாலினப் பாகுபாட்டை இந்த ஷூக்கள் வலியுறுத்துகின்றன என்கிறார்கள் பெற்றோர்கள். ஷூ தயாரித்த நிறுவனமோ, அம்மா ஃபேஷனுடன் இருக்கும்போது ஏன் குழந்தையும் ஃபேஷனுடன் இருக்கக்கூடாது என்கிறது. பலத்த எதிர்ப்புக் கிளம்பினாலும் இதுவரை ஆயிரம் ஷுக்கள் விற்பனையாகிவிட்டன என்கிறார்கள்.

சே… ஃபேஷன் மோகத்துக்கும் ஓர் அளவில்லையா…

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x