Published : 08 Mar 2016 10:52 AM
Last Updated : 08 Mar 2016 10:52 AM

உலக மசாலா: கடவுள் இல்லையென்று சொன்னால் சிறை!

ரஷ்யாவில் வசிக்கும் விக்டர் க்ரஸ்நோவ் ஓராண்டு சிறைத் தண்டனையை எதிர்நோக்கியிருக்கிறார். கடவுள் நம்பிக்கையை நிந்தித்தார் என்ற குற்றச்சாட்டில், அவருக்கு இந்தத் தண்டனை வழங்கப்பட இருக்கிறது. 2014-ம் ஆண்டு விகே.காம் என்ற இணைய தளத்தில் கடவுள் எங்கும் இல்லை, பைபிள் என்பது யூதர்களின் தேவதைக் கதைகள் என்றெல்லாம் விவாதங்களை நிகழ்த்தி வந்தார் விக்டர்.

திடீரென்று விக்டரும் அவரது அம்மாவும் முகம் தெரியாதவர்களிடமிருந்து மிரட்டல்களைச் சந்தித்தனர். 2015-ம் ஆண்டு டிமிட்ரி, அலெக்சாண்டர் என்ற இரு நண்பர்கள் விக்டருக்கு எதிராகக் குற்றங்களைச் சுமத்தினர். தீவிர மத உணர்வாளர்களை விக்டர் புண்படுத்திவிட்டார் என்று வழக்கு பதிவு செய்தனர். விக்டரை ஒரு மாதம் விசாரித்தனர்.

மனநல மருத்துவரிடம் அழைத்துச் சென்று பரிசோதனை செய்தனர். மருத்துவர் இயல்பான மனிதர் என்று சான்றிதழ் வழங்கிவிட்டார். விசாரித்த குழு, விக்டர் எந்தத் தனி மனிதரையும் புண்படுத்தவில்லை, அவருடைய கருத்துகள் மத நம்பிக்கையுடையவர்களை வருத்தப்பட வைத்திருக்கிறது என்று அறிக்கை கொடுத்தது. 2012-ம் ஆண்டு முதல் மத நம்பிக்கைகளைப் புண்படுத்துகிறவர்கள் குற்றவாளிகளாகக் கருதப்படுகின்றனர். இந்தக் காரணத்துக்காகவே விக்டர் தண்டனையை எதிர்நோக்கியிருக்கிறார். ஆரம்பக் கட்ட விசாரணையில் விக்டரின் தரப்பைச் சொல்வதற்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.

மார்ச் 15 அன்று விசாரணை நடைபெற இருக்கிறது. ’’மத நம்பிக்கை உடையவர்களுக்கு இருக்கும் அத்தனை உரிமையும் மத நம்பிக்கை அற்றவர்களுக்கும் இருக்கிறதுதானே? அவர்கள் கடவுள் இருக்கிறார் என்று சொல்வதற்கு வாய்ப்பு இருக்கும்போது எனக்கும் இல்லை என்று சொல்வதற்கு வாய்ப்பு இருக்க வேண்டும். என்னுடைய விவாதங்களில் நான் தரக்குறைவாகவோ, தனிப்பட்ட முறையிலோ வார்த்தைகளைப் பயன்படுத்தவில்லை.

என்னுடைய வார்த்தைகளை விசாரணை செய்பவர்கள் வேறு விதங்களில் கையாள்கிறார்கள். சில பகுதிகளை நீக்கியிருக்கிறார்கள். இரண்டு ஆண்டுகளுக்கு முன் நடந்த இந்த விவாதத்தை எந்த மாற்றமும் செய்யாமல் அப்படியே பார்த்தார்கள் என்றால் என் மீது சுமத்தப்பட்ட குற்றம் அர்த்தமற்றது என்பது அனைவருக்கும் புரியும். என்னைப் போல இனி யாரும் பாதிக்கப்படக்கூடாது. நாத்திகர்களைப் பாதுகாக்கும் சட்டம் கொண்டு வரவேண்டும்’’ என்கிறார் விக்டர்.

கருத்தைக் கருத்தால் எதிர்கொள்வதே சரியான அணுகுமுறை…

கலிபோர்னியாவைச் சேர்ந்த பிரெட்ரிக் காலிசன் கடந்த இரண்டு ஆண்டுகளாகத் தங்க இடமின்றி, வேலையின்றி தவித்து வருகிறார். யாராவது பணம் கொடுத்தால் மறுத்து விடுகிறார். எல்லோருக்கும் தன்னுடைய சுயவிவரக் குறிப்பைக் கொடுக்கிறார். தன் திறமைக்கு ஏற்ற வேலை இருந்தால் கொடுக்குமாறு கேட்டுக்கொள்கிறார். பல ஆண்டுகள் உணவு விடுதிகளில் பணியாற்றிய அனுபவம் இவருக்கு இருக்கிறது. அதற்கான அடையாள அட்டையும் வைத்திருக்கிறார்.

‘’எனக்குப் பிச்சை எடுப்பது பிடிக்காது. எனக்குத் தெரிந்த, திருப்தியான வேலை ஒன்று யாராவது கொடுத்தால் செய்யத் தயாராக இருக்கிறேன். எல்லோரும் ஏதாவது பணம் கொடுத்துவிட்டு, கடந்து செல்லவே நினைக்கின்றனர். எனக்குப் பணம் தேவையில்லை. ஒரு வேலை கொடுத்தால், நானே உழைத்துச் சாப்பிட்டுக்கொள்வேன். ஒரு வேலை கிடைத்து, சம்பாதித்து சாப்பிடும் வரை என் வயிறு பொறுமையாக இருப்பதில்லை. அதனால் ’வேலை வேண்டும், பசிக்கிறது’ என்று ஒரு அட்டையில் எழுதி பிடித்தபடி அமர்ந்திருப்பேன்’’ என்கிறார் பிரெட்ரிக். இவரைப் பார்த்து மைக்கேல் மார்டின் என்பவர் ஆர்வமாகி, ஃபேஸ்புக், இணையம், நண்பர்கள் என்று பலவிதங்களிலும் வேலைக்கு முயற்சி செய்து வருகிறார்.

விரைவில் வேலை கிடைக்கட்டும் பிரெட்ரிக்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x