Published : 15 Sep 2015 10:41 AM
Last Updated : 15 Sep 2015 10:41 AM

உலக மசாலா: கடலில் இருந்து பட்டு!

பழங்கால இத்தாலிய கலைகளில் ஒன்று ‘ கடல் பட்டு’ நெய்தல். இன்று பட்டுப் புழுக்களில் இருந்து பட்டு நூல்கள் எடுக்கப்படுகின்றன. ஆனால் இத்தாலியின் சார்டினியன் தீவில் வசிக்கும் சியாரா விகோ, சிப்பியில் சுரக்கும் உமிழ்நீரில் உருவாகும் பட்டு நூலை எடுக்கிறார். தங்க நிறத்தில் ஜொலிக்கும் இந்தப் பட்டுத் துணியை பைசஸ் என்கிறார்கள். எகிப்து, கிரீஸ், ரோம் போன்ற இடங்களில் கடல் பட்டு உற்பத்தி ஒருகாலத்தில் இருந்திருக்கிறது. கடல் பட்டு எடை இல்லாதது. தொட்டால் சிலந்தியின் வலையைத் தொடுவதுபோல அத்தனை மென்மையாக இருக்கிறது. தண்ணீர், அமிலம், ஆல்கஹால் போன்றவற்றில் இருந்து காத்துக்கொள்ளக்கூடியது. வசந்த காலத்தில் கடல் பட்டுக்காக அதிகாலை கடலுக்குச் சென்று விடுகிறார் விகோ. ஒவ்வொரு சிப்பியிலும் உருவாகியிருக்கும் பட்டு நூலை, சிப்பிக்கு எந்தவிதத் தீங்கும் ஏற்படுத்தாமல் வெட்டி எடுக்கிறார். 300 முதல் 400 தடவை வரை கடலில் மூழ்கி, 200 கிராம் பட்டு நூலைச் சேகரிக்கிறார். பைசஸ் அருங்காட்சியகத்தில் வைத்து, நூலைப் பக்குவப்படுத்தி நூற்க ஆரம்பிக்கிறார். கடல் பட்டு 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய கலை. இதுவரை கடவுள், அரசர், போப் போன்றவர்களுக்கே கடல் பட்டு நெய்து கொடுக்கப்பட்டிருக்கிறது. சிறிய அளவு கடல் பட்டுத்துணி ஆயிரக்கணக்கான டாலர்களுக்கு விலை போகிறது. ஆனால் இன்று சாதாரணமானவர்களுக்கும் கடல் பட்டை அளிக்கிறார் விகோ. இதற்காக பணம் எதையும் அவர் பெற்றுக்கொள்வதில்லை.

ஒரு சின்னச் சிப்பியில் இருந்து முத்து, பட்டு எல்லாம் ஆச்சரியமா இருக்கு!

கலிபோர்னியாவைச் சேர்ந்தவர் அழகுக் கலை நிபுணர் அர்ஜெனிஸ் பைனல். இன்று காமிக் புத்தக ஓவியங்களில் புகழ்பெற்றவராக விளங்குகிறார். காமிக் புத்தகங்களில் வரும் சூப்பர் ஹீரோக்கள், வில்லன்கள், பெண் கதாபாத்திரங்கள் எல்லாவற்றையும் அச்சு அசலாகத் தன் உடல் ஓவியத்தில் கொண்டு வந்துவிடுகிறார். கண்ணாடி முன் நின்றுகொண்டு, தனக்குத் தானே வெகு வேகமாக ஓவியம் தீட்டுகிறார். சாதாரண அர்ஜெனிஸ் சில மணி நேரங்களில் முழு கார்ட்டூன் கதாபாத்திரமாக விஸ்வரூபம் எடுத்துவிடுகிறார். இவருடைய கார்ட்டூன் ஓவியங்களுக்கு உலகம் முழுவதும் ஆதரவு பெருகி வருகிறது.

நடமாடும் கார்ட்டூன் கதாபாத்திரங்கள்!

அமெரிக்காவில் உள்ள வெர்மிலியன் சிறைச் சாலை, தங்கும் விடுதியாக மாறியிருக்கிறது. 1910ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்தச் சிறைச் சாலை, பின்னர் நூலகமாக மாற்றம் அடைந்தது. 2013-ம் ஆண்டு தங்கும் விடுதியாக மாற்றப்பட்டுள்ளது. ஓர் இரவில் 4 பேர் தங்கக்கூடிய வசதிகளுடன் அறைகள் அமைக்கப்பட்டி ருக்கின்றன. நவீன வசதிகள் அனைத்தும் இங்கே உள்ளன. கம்பிக் கதவுகள் மட்டுமே சிறையை நினைவூட்டுகின்றன. மற்றபடி தங்கும் விடுதி 5 நட்சத்திர விடுதிகளுக்கு இணையாக இருக்கிறது.

விருப்பத்துடன் செல்லக்கூடிய சிறை!

சீனாவின் யான்தாய் பொறியியல் கல்லூரியில் பிரசவத்துக்கு விடுமுறை கேட்டு ஒரு மாணவி கோரிக்கை வைத்தார். இதுவரை கல்லூரியில் வேலை செய்யும் பெண்களுக்கு மட்டுமே பிரசவ விடுப்பு கொடுத்துள்ள நிர்வாகம், மாணவியின் கோரிக்கையைக் கேட்டு அதிர்ச்சியடைந்துவிட்டது. மாணவிகளுக்குப் பிரசவ விடுப்பு கொடுக்க அனுமதி இல்லை என்று கூறிவிட்டது. சிறிதும் மனம் தளராத மாணவி, தனக்காக விதிகளைக் கொஞ்சம் தளர்த்தும்படி பல்வேறு தரப்புக்கும் கோரிக்கை வைத்தார். மாணவியின் இக்கட்டான சூழலைப் புரிந்துகொண்ட நிர்வாகம், தன்னுடைய விதிகளைத் தளர்த்திக்கொண்டு விடுமுறை அளித்துவிட்டது. குழந்தை பிறந்த பிறகு, கல்லூரிக்கு வரும் மாணவிக்குச் சிறப்பு வகுப்புகள் எடுக்கவும் ஏற்பாடு செய்துவிட்டது.

வெல்டன்!

பாங்காக்கில் நகைக்கண்காட்சி ஒன்று நடைபெற்று வருகிறது. அந்தக் கண்காட்சியைப் பார்வையிட வந்த 39 வயது ஜியாங் ஸுலியனை ஸ்கேன் செய்தபோது, அவரது பெருங்குடலில் வைரக் கல் இருப்பது தெரிய வந்தது. காவலர்கள் அவரைப் பிடித்து விசாரித்தனர். சாப்பிடச் சொன்னபோது மறுத்துவிட்டு, தண்ணீர் மட்டும் பருகினார் ஜியாங் ஜுலியன். மருத்துவர்கள் பெருங்குடலில் இருந்து வைரத்தை எடுத்தனர். 1.85 கோடி மதிப்பு மிக்க வைரம் அது. இதுவரை போதைப் பொருட்களைத்தான் இப்படிக் கடத்தியிருக்கிறார்கள். முதல்முறை ஒரு வைரம் விழுங்கப்பட்டு, கடத்தப்பட்டிருக்கிறது என்கிறார்கள் தாய்லாந்து காவலர்கள்.

கண்காணிப்பு கேமரா, காவலர்கள் எல்லாம் இருந்தும் எப்படி இப்படியெல்லாம் நடக்கிறது…

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x