Published : 06 May 2015 10:46 AM
Last Updated : 06 May 2015 10:46 AM

உலக மசாலா: ஓவியப் பெண்!

இத்தாலியைச் சேர்ந்த ஓவியர் மார்கோ க்ராஸ்ஸி. மிலன் நகரில் அவருடைய ஓவியங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டன. அங்கிருந்த எந்த ஓவியமும் ஓவியமாகவே தெரியவில்லை! நிஜ பெண்ணைப் புகைப்படம் எடுத்தது போல அத்தனை தத்ரூபமாக வரைந்திருந்தார். அவர் வரைந்ததை வீடியோவில் பார்த்தவர்கள் மட்டுமே ஓவியம் என்று நம்புகிறார்கள்.

“என்னுடைய ஓவியத்துக்கு ஏற்ற பொருட்களைப் பயன்படுத்துகிறேன். விலையுயர்ந்த கற்கள், மண்பாண்டங்கள், கண்ணாடிகள் போன்றவற்றில் ஒளி உள்வாங்கி, எப்படி வெளிப்படுத்துகிறது என்பதைக் கூர்மையாகக் கவனிக்கிறேன். இவற்றை என் ஓவியங்களில் பிரதிபலிக்கிறேன்’’ என்கிறார் மார்கோ க்ராஸ்ஸி.

ஆஹா! ஒரு பெண் நேரில் நிற்பது போலவே இருக்கிறது!

திரைப்படங்களில் காட்ஸிலாவைக் கண்டதும் மக்கள் அலறியடித் துக்கொண்டு ஓடுவார்கள். ஆனால் அதே காட்ஸிலாவிடம் மக்கள் ஆசையாக ஓடி வரும்படிச் செய்திருக்கிறது ஜப்பானில் உள்ள ஷின்ஜுகு தங்கும் விடுதி. விடுதியின் வாயிலில் சிவப்புக் கண்களு டனும் கோரைப் பற்களுடனும் காட்ஸிலா மிகப் பிரம்மாண்டமாக நின்றுகொண்டிருக்கிறது. விடுதியின் உள்ளே சென்றால் மேஜை விரிப்பு, சாப்பிடும் தட்டு, சுவர்கள் என்று எங்கும் காட்ஸிலா படங்கள் இடம்பெற்றுள்ளன.

அறைகளுக்குள் மிகப் பெரிய காட்ஸிலா பாதம் செதுக்கப்பட்டிருக்கிறது. படுக்கையில் இருந்து அகன்ற ஜன்னல் வழியே பார்த்தால் வெளியே நிற்கும் காட்ஸிலா நன்றாகத் தெரியும். ஜப்பானியர்கள் காட்ஸிலாவை அதிகம் விரும்புவதால், இந்த விடுதி யில் தங்குவதற்குப் படையெடுக்கிறார்கள். வேலை நாட்களில் ஒரு நாள் வாடகை 21 ஆயிரம் ரூபாய். விடுமுறை நாட்களில் 25 ஆயிரம் ரூபாய் வசூலிக்கப்படுகிறது. அகன்ற ஜன்னலில் படுக்கையிலிருந்து காட்ஸிலாவைப் பார்க்க இன்னும் கூடுதல் கட்டணம்!

ஒரு காட்ஸிலா மீது இவ்வளவு ஆர்வம் இருக்க முடியுமா!

ஜார்ஜியாவில் வசிக்கிறார் 33 வயது சிக்விடா ஹில். இவருடைய 10 வயது மகன் மிகவும் மோசமாக நடந்துகொண்டான். அம்மா சொல்வதைக் கேட்பதில்லை. பேசுவதில்லை. பள்ளியிலும் நல்ல பெயர் கிடையாது. வீட்டுப் பாடங்களையும் செய்வதில்லை. தன் மகனை நினைத்து மிகவும் கவலைப்பட்டார் ஹில். ஒருநாள் பொறுக்க முடியாமல் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துவிட்டார். காவலர்கள் வந்து மகனை பிடித்துச் சென்றனர். முதலில் சிரித்தவன், பிறகு அழுதுகொண்டே சென்றான்.

5 நிமிடங்களுக்குப் பிறகு அவனை வீட்டில் கொண்டுவந்து விட்டனர். அந்த நிமிடத்திலிருந்து மகனின் செயல்கள் முற்றிலும் மாறிவிட்டதாக மகிழ்கிறார் ஹில். அருகில் இருந்தவர்கள் ஹில்லின் செயலுக்குக் கண்டனம் தெரிவித்தனர். காவல்துறையினரிடம் உண்மையிலேயே புகார் அளிக்கவில்லை. இது ஒரு நாடகம் என்று விளக்கம் அளித்தார் ஹில். தன்னுடைய நாடகத்துக்கு உள்ளூர் காவல்துறை ஒத்துழைத்ததும், தன் மகன் திருந்தியதும் மிகப் பெரிய மகிழ்ச்சியைத் தந்திருக்கிறது என்கிறார் ஹில்.

ஐயோ… இந்த டெக்னிக்கை யாரும் பயன்படுத்தாதீங்க…

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x