Published : 08 Feb 2017 10:58 AM
Last Updated : 08 Feb 2017 10:58 AM

உலக மசாலா: ஒரே குடும்பப் புகைப்படத்தில் 500 பேர்

உலகின் மிகப் பெரிய குடும்பப் புகைப்படம் சீனாவில் எடுக்கப்பட்டிருக்கிறது. ரென் வம்சத்தைச் சேர்ந்த 500 உறவினர்கள் ஒன்று கூடி, ஒரே புகைப்படமாக எடுக்கப்பட்டிருக்கின்றனர். ரென் வம்சத்தைச் சேர்ந்தவர்கள் பல்வேறு இடங்களுக்கு வாழ்வாதாரம் தேடிச் சென்றுவிட்டனர். அவர்களை எல்லாம் ஒன்றிணைக்கும் வேலை இரண்டு ஆண்டுகளாக நடைபெற்று வந்தது.

பெய்ஜிங், ஷாங்காய், ஸின்ஜியாங், தைவான் போன்ற இடங்களில் இருந்தவர்கள் எல்லாம் தங்கள் பூர்விகமான ஜெய்ஜியாங் மாகாணத்தில் உள்ள கிராமத்துக்கு வந்து சேர்ந்தனர். ஒரு குன்றின் மீது எல்லோரும் வரிசையாக நிற்க, பறக்கும் ரோபோ கேமரா மூலம் புகைப்படங்கள் எடுக்கப்பட்டன. 500 பேரையும் ஒரே புகைப்படத்தில் பார்க்க முடிந்தது. “சீனர்கள் எவ்வளவுதான் முன்னேறினாலும் தங்கள் வேர்களை மறக்க மாட்டார்கள். அப்படித்தான் எங்கள் வம்சத்தைச் சேர்ந்தவர்களைத் தேட ஆரம்பித்தோம். இரண்டு ஆண்டுகளில் 500 பேரைக் கண்டுபிடித்துவிட்டோம். எங்கெங்கோ வசிக்கும் உறவினர்கள் எல்லாம் வசந்த விழாவில் இணைவார்கள். இந்த வசந்த விழாவில் நாங்கள் இணைந்தோம்.

எங்கள் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. பலரை முதல்முறையாகச் சந்தித்திருக்கிறோம். புகைப்படத்துக்கு நிற்க வைப்பதற்கே அரைமணி நேரமானது. உலகின் மிகப் பெரிய குடும்பப் புகைப்படம் எங்களுடையதுதான். இந்த விஷயம் வேகமாக சமூக வலைதளங்களில் பரவி, இன்னும் பல உறவினர்கள் தொடர்புகொண்டு வருகிறார்கள். அடுத்த ஆண்டு ஆயிரம் பேர் ஒன்றுகூடுவோம்” என்கிறார் ரென்.

ஒரு புகைப்படத்துக்குள் 500 பேர்!



கலிபோர்னியாவில் வசிக்கும் 31 வயது ப்ரையன் ரே, பாப் பாடகர் பிரிட்னி ஸ்பியர்ஸின் அதிதீவிர ரசிகர். தன்னையும் பிரிட்னியைப் போலவே மாற்றிக்கொண்டிருக்கிறார்! கடந்த 14 ஆண்டுகளில் 54 லட்சம் ரூபாய் செலவு செய்து, போலி பிரிட்னியாக வலம் வருகிறார். “எல்லோருக்கும் ஆச்சரியம். ஆண், வேறொரு ஆணாகத் தன்னை மாற்றிக்கொள்வது உண்டு. பிரிட்னியைப் பார்க்கும் வரை நான் ஒரு பெண்ணாக என்னை மாற்றிக்கொள்வேன் என்று நினைத்ததில்லை. உருவம், குரல், நடனம் என்று அத்தனையும் அற்புதமாக அமைந்த பெண் அவர்.

17 வயதில் அவரைப் பார்த்தவுடன் என்னையும் அப்படி மாற்றிக்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் வந்தது. கடந்த 14 ஆண்டுகளில் 90 அழகு அறுவை சிகிச்சைகளை மேற்கொண்டுள்ளேன். புதிதாகப் பார்ப்பவர்கள் என்னை பிரிட்னியா என்று கேட்கும்போது, நான் பட்ட கஷ்டங்கள் அனைத்தும் மறைந்து மகிழ்ச்சியில் துள்ளிக் குதிப்பேன். ஒரு ஆண், பெண்ணாக மாறுவது அத்தனை எளிதல்ல. அடிக்கடி அறுவை சிகிச்சைகள் செய்துகொள்ள வேண்டும். ஒப்பனையில் கவனமாக இருக்க வேண்டும்” என்கிறார் ப்ரையன் ரே.

உருவத்தில் மட்டுமின்றி, பிரிட்னியைப் போலவே பாடுவதிலும் ஆடுவதிலும் பேசுவதிலும் நடப்பதிலும் பயிற்சி செய்துவருகிறார் ப்ரையன். தொழிலதிபராக இருக்கும் ப்ரையன், தன்னுடைய தோற்றத்தையும் இளமையையும் தக்க வைத்துக்கொள்வதற்காக க்ரீம்களுக்கு மட்டும் மாதம் 34 ஆயிரம் ரூபாய் செலவு செய்கிறார்.

இவ்வளவு செய்தும் பிரிட்னி மாதிரி தெரியலையே ப்ரையன்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x