Published : 19 Jul 2017 10:01 AM
Last Updated : 19 Jul 2017 10:01 AM

உலக மசாலா: ஒரே கண்ணில் 27 லென்ஸுகள்!

கான்டாக்ட் லென்ஸுகள் காணவில்லை என்றால் வெளியில் தேடுவதற்கு முன், கண்களிலேயே இருக்கிறதா என்று பரிசோதனை செய்யுங்கள் என்கிறார்கள் மருத்துவர்கள். இங்கிலாந்தைச் சேர்ந்த 67 வயது பெண்மணி ஒருவர், கண்களில் உறுத்தலாக இருக்கிறது என்று மருத்துவரிடம் வந்தார். அப்போது மேற்கொண்ட பரிசோதனையில் இவரது ஒரு கண்ணில் ஏதோ பொருள் அடைத்துக் கொண்டிருப்பது தெரியவந்தது. அதை நீக்கியபோது 17 கான்டாக்ட் லென்ஸுகள் வெளிவந்தன. மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்தனர். மேலும் உறுத்தல் இருப்பதாக அந்தப் பெண்மணி சொன்னவுடன் மேலும் 10 லென்ஸுகளை வெளியில் எடுத்தனர். இவர் பயன்படுத்திய கான்டாக்ட் லென்ஸுகள் ஒருமுறை பயன்படுத்தி, தூக்கி எறியக்கூடியவை. தன்னையறியாமல் இந்தத் தவறுகளைச் செய்திருப்பதாகக் கூறிய இவர், லென்ஸுகளால் தனக்குப் பெரிதாகப் பிரச்சினைகள் ஏற்படவில்லை என்கிறார். இருந்தாலும் லென்ஸுகளை நீக்கிய பிறகு நிம்மதியாக இருப்பதை உணர முடிகிறது என்று கூறுகிறார். “இவரது பிரச்சினை முற்றிலும் வித்தியாசமாக இருக்கிறது. 27 லென்ஸுகளை எப்படி இவ்வளவு நாளும் சுமந்திருந்தார் என்பதும் கண்ணுக்குப் பிரச்சினை ஏற்படவில்லை என்பதும் ஆச்சரியமாக இருக்கிறது. இப்படி ஒரு சம்பவத்தை நாங்கள் சந்தித்ததில்லை. லென்ஸை முறையாகப் பயன்படுத்தாவிட்டால் பார்வையை இழக்கவும் நேரிடலாம்” என்கிறார் மருத்துவர் ரூபல் மோர்ஜாரியா. ஒவ்வொரு முறையும் கண்களிலிருந்து லென்ஸை எடுத்துவிட்டோம் என்று நினைத்து, புதிய லென்ஸுகளை அணிந்திருக்கிறார். 35 ஆண்டுகளாக லென்ஸுகளைப் பயன்படுத்தி வருகிறார். குறிப்பிட்ட இடைவெளிகளில் கண்களைப் பரிசோதனையும் செய்திருக்கிறார்.

ஒரே கண்ணில் 27 லென்ஸுகள்!

கின்ஸா லேடீஸ் 1 என்பது ஜப்பானில் இயங்கக்கூடிய ஒரு துப்பறியும் நிறுவனம். புது காதலனோ, காதலியோ கிடைத்தவுடன் கணவன் மனைவியையோ, மனைவி கணவனையோ ஏமாற்றினால் பாதிக்கப்பட்டவருக்கு உதவி செய்வதற்காகவே இந்த நிறுவனம் இயங்கி வருகிறது. தங்களுக்கு உரிய சிறப்பான வழிமுறைகளில் புதிதாக ஏற்பட்டிருக்கும் உறவை வெட்டி, மீண்டும் தம்பதியரை இணைத்து வைத்துவிடுகிறார்கள். “கணவனுக்கோ, மனைவிக்கோ ஏற்படும் புது உறவுகளால் குடும்பங்கள் சிதைந்து போகின்றன. அந்தக் குடும்பத்தைச் சேர்த்து வைக்கும் வேலைதான் எங்களுடையது. புதிய உறவை நாங்கள் தொடர்ந்து கவனிப்போம். அவருடைய குணாம்சங்களை அறிந்து கொள்வோம். பிறகு எங்கள் நிறுவனம் மூலம் நடிகர்களை அந்த உறவிடம் பழக விடுவோம். இந்தப் புகைப்படங்களைச் சம்பந்தப்பட்டவருக்கு அனுப்பிவைப்போம். ஒருகட்டத்தில் புதிய உறவை விட்டுவிட்டு, அவர்கள் தங்கள் இணையைத் தேடிச் சென்றுவிடுவார்கள். 30 நாட்களில் இருந்து 240 நாட்களுக்குள் எங்களால் ஓர் உறவைத் துண்டித்து, பழைய உறவை மீட்டுக் கொடுத்துவிட முடியும். இதற்காக 2 லட்சம் முதல் 50 லட்சம் வரை வசூலிக்கிறோம். குடும்பத்தோடு சந்தோஷமாக இருக்கும் ஒருவரிடம் பழகி, அவர்கள் குடும்பத்தையே சிதைப்பவர்களைத்தான் நாங்கள் பிரிக்கிறோம். அதனால் நாங்கள் இதுகுறித்து எந்தக் குற்றவுணர்வும் கொள்வதில்லை” என்கிறார் இந்த நிறுவனத்தின் உரிமையாளர்களில் ஒருவர்.

சே, எப்படியெல்லாம் தொழில் வாய்ப்பு உருவாகுது பாருங்கள்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x