Published : 20 Jan 2017 11:02 AM
Last Updated : 20 Jan 2017 11:02 AM

உலக மசாலா: ஒரு வேலைக்கு 20 ஆயிரம் விண்ணப்பங்கள்!

அமெரிக்காவில் வசிக்கும் மெக்கென்ஸி, டிரெக் டில்லாட்சன் தம்பதியர் தங்கள் 3 குழந்தைகளுடன் உலகப் பயணம் மேற்கொள்ள இருக்கிறார்கள். இந்தப் பயணத்தில் குழந்தைகளைப் பார்த்துக்கொள்வதற்கும் சமையல், பாத்திரங்களைச் சுத்தம் செய்வதற்கும் உதவியாக ஒரு பாட்டி வேண்டும் என்று சமூக வலைதளத்தில் கோரிக்கை வைத்திருந்தனர். 10, 20 விண்ணப்பங்கள் வரும் என்று எதிர்பார்த்தவர்களுக்கு 20 ஆயிரம் விண்ணப்பங்கள் குவிந்ததில் ஆச்சரியமடைந்தனர். “நாங்கள் மறக்க முடியாத ஒரு உலகப் பயணத்தை மேற்கொள்ளவேண்டும் என்று திட்டமிட்டோம்.

மூன்று குழந்தைகளையும் எங்கள் இருவரால் கவனித்துக்கொள்வது கஷ்டம். அதனால் குழந்தைகள் மீது அன்பும் அக்கறையும் கொண்ட பாட்டி ஒருவரை அழைத்துச் செல்ல திட்டமிட்டோம். பாட்டிக்கு ஏற்படும் அனைத்துச் செலவுகளையும் நாங்களே பார்த்துக்கொள்வோம். அவருக்கென்று ஒவ்வொரு நாளும் தனியாக சில மணி நேரங்களை ஒதுக்கிவிடுவோம். எங்களுடனே அவர் தங்கிக்கொள்ளலாம், சாப்பிடலாம். மிக நாகரிகமாகவும் மனிதத்தன்மையோடும் அவரை நடத்துவோம்.

இவை தவிர, அவருக்கு மாதம் ஒரு தொகையைச் சம்பளமாகவும் வழங்கிவிடுவோம். இந்தப் பயணத்துக்காக எங்களின் வீட்டை விற்றிருக்கிறோம். சில விண்ணப்பங்கள் வரும் என்று நினைத்த எங்களுக்கு 20 ஆயிரம் விண்ணப்பங்களைப் பார்த்து உறைந்துபோய்விட்டோம். ஓய்வு பெற்ற ஆசிரியர்கள், செவிலியர்கள், சமூக சேவகர்கள், மருத்துவர்கள் கூட விண்ணப்பித்திருக்கிறார்கள். இதிலிருந்து ஒருவரைத் தேர்ந்தெடுக்கும் மிகப் பெரிய பொறுப்பு எங்களிடம் இருக்கிறது” என்கிறார் டிரெக் டில்லாட்சன்.

அடேங்கப்பா! ஒரு வேலைக்கு 20 ஆயிரம் விண்ணப்பங்களா!

போலந்தைச் சேர்ந்த 20 வயது நடாலியா குட்கிவிஸ், மூன்றே ஆண்டுகளில் இன்ஸ்டாகிராமில் உலகப் புகழ் பெற்றுவிட்டார். இவ்வளவுக்கும் இவர் வெளியிடும் புகைப்படங்கள் அனைத்திலும் முகத்தை மறைத்திருக்கிறார்! ஆனாலும் இவரை 1 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பின்தொடர்கிறார்கள். “எல்லோரும் விதவிதமாகப் புகைப்படங்களை எடுத்து வெளியிடுவதில்தான் ஆர்வமாக இருப்பார் கள். எனக்கு ஏனோ என் முகத்தைக் காட்டுவதில் விருப்பமில்லை. அதனால்தான் இதுவரை நான் வெளியிட்ட 443 புகைப்படங்களிலும் முகத்தை விதவிதமாக மறைத்திருக்கிறேன். ஒரு புகைப்படத்தில் கண்கள் தெரியும், இன்னொன்றில் உதடுகள் தெரியும். முழு முகத்தை இதுவரை காட்டியதில்லை. யாருக்குமே நான் எப்படி இருக்கிறேன் என்று தெரியாது. என்றாவது ஒருநாள் நான் முழு முகத்தையும் காட்டுவேன் என்று நம்பிக்கையுடன் காத்திருக்கிறார்கள். ஆனால் இணையப் பிரபலமாக இருப்பதில் எனக்கு விருப்பமில்லை. நான் வெளியே சென்றால் என்னை யாருக்கும் இப்போது அடையாளம் தெரியாது. நிம்மதியாக இருக்கிறேன். என்னுடைய கருத்துகள்தான் முக்கியமே தவிர, என்னுடைய முகம் முக்கியமில்லை என்பதை என்னைப் பின்தொடர்பவர்களும் புரிந்துகொள்வார்கள். ஆனாலும் இணையம் மூலம் என்னுடைய வாழ்க்கை மாறிவிட்டது என்பதை ஒப்புக்கொள்கிறேன். இதன் மூலம் விளம்பரங்களும் நல்ல வேலையும் எனக்குக் கிடைத்திருக்கின்றன” என்கிறார் நடாலியா.

பிரபலமாவதற்கு முகம் அவசியமில்லை!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x