Published : 28 Dec 2016 10:32 AM
Last Updated : 28 Dec 2016 10:32 AM

உலக மசாலா: ஒரு மலைப்பாம்புக்கு இவ்வளவு புரிதல் இருக்க முடியுமா!

சீனாவின் ஹைகோவ் பகுதி யில் வசிக்கும் 68 வயது ஷி ஜிமின், 7 ஆண்டுகளாக மலைப்பாம்பை வீட்டில் வளர்த்து வருகிறார். 60 கிலோ எடையும் 3.7 மீட்டர் நீளமும் கொண்ட இந்த மலைப்பாம்பை தங்களின் செல்ல மகன் என்கிறார். “2009-ம் ஆண்டு நான் வேலை செய்யும் இடத்தில் பாம்புகளை விற்றுக்கொண் டிருந்தார் ஒரு வியாபாரி.

கடைசியில் 30 செ.மீ. நீளமே இருந்த இந்த மலைப்பாம்பை யாரும் வாங்கவில்லை. எனக்கு விருப்பம் இருந் தால் இலவசமாக எடுத்துக் கொள்ளும்படிச் சொன்னார். என் மனைவியிடம் பாம்பை ஒப்படைத் தேன். அப்போது ஆடு, மாடுகளைச் சாப்பிடக்கூடிய ராட்சச வாய்கொண்ட மலைப்பாம்பு என்று நாங்கள் நினைக்கவில்லை. நாட்கள் செல்லச் செல்ல பாம்பு பெரிதாகிக்கொண்டே வந்தது. மலைப்பாம்பின் இயல்பு குறித்து அறிந்தாலும் எங்களால் அதை வெளியேற்ற இயலவில்லை. இரண்டு மகள்கள் திருமணமாகி வெகு தொலைவில் இருக்கிறார்கள். அவனுக்கு நன்வாங் என பெயரிட்டு மகனாகவே நினைத்து அன்பு செலுத்தி வருகிறோம். ஆனாலும் பாதுகாப்பு குறித்து கவனமாக இருப்போம்.

பகலில் வீடு முழுவதும் சென்று வருவதற்கு அனுமதித்திருக்கிறோம். இரவு மட்டும் அவனுக்கான அறையில் விட்டுவிடுவோம். ஒரு குழந்தையைப் போல எங்களுடன் அமர்ந்து தொலைக்காட்சி பார்ப்பான். மாலை நடைப்பயிற்சிக்கு வருவான். இதுவரை அவன் எங்கள் வீட்டை விட்டு வெளியேறிச் சென்றதில்லை. அதேபோல அவனுக்காக எந்தப் பாதுகாப்பு நடவடிக்கைகளையும் நாங்கள் மேற்கொண்டதில்லை. வருடத்தில் 6 மாதங்கள் குளிர்கால உறக்கத்துக்குச் சென்றுவிடுவான் நன்வாங். அப்போது மட்டும் ஒரு கூண்டுக்குள் அவனை வைத்து, குளிருக்கு இதமாக கம்பளியைப் போர்த்திவிடுவோம்.

மலைப்பாம்பு வளர்ப்பது ஒன்றும் அவ்வளவு எளிதான விஷயமில்லை. என்னுடைய பென்ஷனில் பாதி இவனுக்கே செலவாகிவிடுகிறது. 20 நாட்களுக்கு ஒருமுறை 8 கோழிகளைச் சாப்பிடுகிறான்” என்கிறார் ஷி ஜிமின். இவரது வீட்டுக்கு அருகில் வசிப்பவர்கள் கூறும்போது, “ஆரம்பத்தில் நடைப்பயிற்சிக்கு ஜிமின் மலைப்பாம்பை அழைத்து வரும்போது நாங்கள் பயந்து நடுங்குவோம். இப்போதெல்லாம் குழந்தைகளே மலைப்பாம்புடன் நின்று படம் எடுத்துக்கொள்கிறார்கள். எங்கள் குழந்தைகள் வளர்வதைப் போல நன்வாங்கும் வளர்ந்து வருகிறான். ஒரு மலைப்பாம்புக்கு உரிய எந்த குணமும் அவனிடம் இல்லை. ரொம்பவே அமைதியானவன்” என்கிறார்கள்.

ஒரு மலைப்பாம்புக்கு இவ்வளவு புரிதல் இருக்க முடியுமா!

தங்க நகைகளில் இருந்து ஆடைகள் வரை அன்னாசிப்பழ வடிவம் உலகம் முழுவதும் விரும்பப்படுகிறது. ஆனால் பழத்தை விரும்பிச் சாப்பிடுபவர்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கிறது என்று நினைத்த அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள், பழத்தில் சில மாற்றங்களைக் கொண்டு வந்திருக்கிறார்கள். இளம் மஞ்சள் நிறத்தை இளஞ்சிவப்பாக மாற்றி, புளிப்பைக் குறைத்து இனிப்பை அதிகரித்திருக்கிறார்கள். பிங்க் நிறத்தைப் பெண்கள் விரும்புவதால், பிங்க் அன்னாசிப்பழத்துக்கும் பெரிய அளவில் ஆதரவு கிடைக்கும் என்று நம்புகிறார்கள். பரிசோதனைக்கு அனுப்பப்பட்டிருக்கும் பிங்க் அன்னாசிப்பழம், அடுத்த ஆண்டு கடைகளில் கிடைக்கும் என்கிறார்கள்.

பாலினப் பாகுபாடு குறையணும்னு போராடிக்கொண்டிருக்கும் காலத்தில் பழத்திலும் பாகுபாடா?

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x